அன்பும், கோபமும்

அன்பும் கோபமும் என்ற இந்த தலைப்பு நாம் மற்றவர் மீது அன்பினைப் பொழியும் போதும், கோபப்படும் போதும் நிகழ்வற்றை எடுத்துக் கூறுகிறது.

பொதுவாக மனிதர்கள் கோபம் ஏற்படும்போது உரக்க சத்தமிடுவார்கள். கோபப்படுவர்களின் உடல் அசைவும், சத்தமும் எதிராளிகள் தொலைவில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

அன்பு செலுத்துபவர்கள் உடல் அசைவானது தனது நண்பர் அருகில் இருப்பதை போன்று வெளிப்படுத்தும். அன்பும், கோபமும் முரண்பாடானவை.

கோபத்தின் போது நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விசயங்களை ஒரு சிறு கதை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

விளக்கக் கதை

ஒரு சமயம் துறவி ஒருவர் தனது சீடர்களுடன் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றங்கரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் உரக்க திட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது துறவி தனது சீடர்களிடம் “ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது உரக்க கத்தி சண்டையிடுகின்றனர்?” என்று கேள்வி கேட்டார்.

சீடர்கள் குருவின் கேள்விக்கான பதிலை யோசித்தனர்.

சீடர்களில் ஒருவன் “கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம். அதனால் சத்தமிடுகிறோம்” என்றான்.

அதற்கு துறவி “உனக்கு மிகஅருகில் இருக்கும் ஒருவனிடம் ஏன் உரக்க சத்தமிட வேண்டும்?. உன்னருகில்தானே அவர்கள் இருக்கிறார்கள். நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்குமாறு எடுத்துக் கூறலாமே” என்று கூறினார்.

குருவின் இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர். ஆனால் துறவிக்கு எந்த பதிலிலும் உடன்பாடு எட்டவில்லை.

 

இறுதியாக தானே அக்கேள்விக்கான பதிலை அவரே சொன்னார்.

மனிதர்கள் இருவர் சண்டையிடும் போது அவர்களின் மனது இரண்டும் வெகு தூரத்திற்குச் சென்றுவிடுகிறது.  எனவே தூரத்தில் இருக்கும் மனதிற்கு கேட்பதற்காக அவர்கள் சத்தமிடுகிறார்கள்.

அதாவது மனம் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறதோ அவ்வளவு தூரம் இவர்கள் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தி சத்தமிட வேண்டியிருக்கும்.  அப்பொழுதுதான் வெகு தொலைவில் இருக்கும் மனதிற்கு இவர்களின் கருத்து சென்றடையும்.

ஆனால் இதுவே இரு மனிதர்கள் அன்பாக இருக்கும்போது அவர்கள் சத்தமிடாமல் தங்களின் கருத்துக்களை அன்பான முறையில் வெளிப்படுத்துவர்.  காரணம் அவர்களின் மனது இரண்டும் மிகவும் அருகில் இருக்கும்.

அன்பு அதிகமாகம்போது வார்த்தைகள் தேவைப்படாது. அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே அவர்களின் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

ஆதலால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது உங்களின் மனங்கள் தொலைவில் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதின் தொலைவினை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்.

மனங்களின் தூரம் அதிகமாகும் போது கடைசியில் அவை இரண்டும் ஒன்று சேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை உருவாகிவிடும்.

ஆதலால் எப்பொழுதும் மனங்கள் நெருங்கி இருக்கும்படியான வார்த்தைகளை உபயோகிப்பது எல்லோருக்கும் நலம் பயக்கும் என்று கூறினார்.

ஆதலால் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் பேசும்போது மனங்கள் நெருங்கி இருப்பதற்கான வார்த்தைகளை மட்டுமே பேசவேண்டும்.

கோபம் வரும்போது கத்திப் பேசக் கூடாது. அது நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாய் அமையும். ஆதலால் அமைதியாகப் பேசுங்கள்; அகிலத்தை வெல்லுங்கள்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது