காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்

காரடையான் நோன்பு பெண்களால் கடைப்பிடிக்கப்படும் விரத முறையாகும். இது வீரம் மற்றும் விவேகம் நிறைந்த சாவித்திரி என்ற பெண்ணால் தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி முதலில் கடைப்பிடிக்கப்பட்டு அதன்பின் வழிவழியாக இன்றளவும் பெண்களால் பின்பற்றப்படுகிறது.

இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இவ்விரத வழிபாட்டின் போது கார்காலத்தில் விளைந்த நெல்லினைக் கொண்டு அடை செய்து சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

இவ்வழிபாட்டில் கவுரி ஆகிய காமாட்சி அம்மனை வைத்து வழிபடுவதால் கவுரி விரதம், காமாட்சி விரதம் என்றும், சாவித்திரி வழிபட்டதால் சாவித்திரி விரதம் என்றும் இவ்விரத முறை அழைக்கப்படுகிறது.

இவ்விரத வழிபாடானது மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுகிறது.

வழிபாட்டின் முடிவில் வழிபாட்டில் இடம் பெற்ற நோன்பு கயிறு பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத் தக்கது.

இவ்விரதம் மேற்கொள்வதால் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிப்பதோடு அவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வினை அம்மன் வழங்குவதாக் கருதுகின்றனர்.

 

சாவித்திரி விரதம் உருவான வரலாறு

மந்திர தேசம் என்ற நாட்டை அசுவபதி என்ற அரசன் ஆண்டு வந்தான். எல்லா செல்வங்களையும் பெற்றிருந்த அவ்வரசனுக்கு குழந்தைச் செல்வம் மட்டும் கிட்டவில்லை.

தேவ ரிஷி நாரதரின் அறிவுரையின் பேரில் சாவித்திரி தேவியிடம் குழந்தை வரம் கேட்டு பயபக்தியுடன் வழிபாட்டினை மேற்கொண்டான்.

சாவித்திரி தேவியின் அருளால் அறிவான பெண் குழந்தையை அசுவபதி பெற்றான். அக்குழந்தைக்கு சாவித்திரி என்ற பெயர் சூட்டி வீரமும், விவேகமும் கொண்ட பெண்ணாக வளர்த்து வந்தான்.

சாவித்திரி வளர்ந்து குமரிப் பெண்ணானபோது காட்டில் சத்தியவானைக் கண்டாள். சத்தியவான் சாளுவ நாட்டு மன்னன் சால்வனின் மகன் ஆவான்.

சாவித்திரி சத்தியவானை சந்தித்தபோது சால்வன் தனது நாட்டினை பறி கொடுத்து காட்டில் மனைவி மற்றும் மகனுடன் கண்களை இழந்து வாழ்ந்து வந்தான்.

சத்தியவான் கண்கள் இழந்த தனது பெற்றோருக்கு பணிவிடை செய்து அவர்களிடம் காட்டிய அன்பின்பால் கவரப்பட்ட சாவித்திரி சத்தியவானை தனது கணவனாகத் தேர்வு செய்து தனது பெற்றோரிடம் சத்தியவானை திருமணம் செய்துவிக்க வேண்டினாள்.

முதலில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த மன்னன் அசுவபதி தேவ ரிஷி நாரதரின் மூலம் சத்தியவானின் ஆயுள் இன்னும் ஒரு வருடத்தில் முடிந்து விடும் என்பதினை அறிந்ததும் மறுத்துவிட்டான்.

ஆனாலும் சாவித்திரி அஞ்சாமல் சத்தியவானை மணம் முடிப்பதில் உறுதியாக இருந்தாள். மகளின் உறுதியினைக் கண்டு கலங்கிய மன்னனுக்கு நாரதர் காமாட்சி அம்மன் கடைபிடித்த விரதமுறையைக் கூறி அவ்விரத முறையை சாவித்திரி பின்பற்றினால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம் என்ற வழிமுறையைக் கூறி திருமணத்தினை நடத்தி வைத்தார்.

சாவித்திரியும் காமாட்சி அம்மன் விரதத்தினைக் கடைப்பிடித்ததுடன் மாமனார், மாமியார், கணவன் ஆகியோருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தாள்.

நாரதர் கூறிய சத்தியவானின் ஆயுள் முடியும் நாளன்று காலையில் எழுந்து தினசரி வேலைகளை முடித்த போது சத்தியவான் விறகு சேகரிக்க கிளம்பினான். அவனுடன் சாவித்திரியும் வருவதாகக் கூறினாள்.

முதலில் மறுத்த சத்தியவானை சமாதானம் செய்து அவனுடன் விறகு சேகரிக்க சாவித்திரியும் உடன் சென்றாள். விறகு சேகரித்து முடித்து மதியம் உணவு உண்டபின் சத்தியவான் சாவித்திரி மடி மீது தலை வைத்து உறங்கினான்.

அப்போது அவனுடைய உயிரினை எடுத்துச் செல்ல எமதர்மன் பாசக்கயிற்றினை வீசினான். பதிவிரதையும், பத்திமிக்கவளுமான சாவித்திரியின் கண்களுக்கு எமதர்மன் தெரிந்தான்.

கரிய உருவமும், கோரப்பற்களையும் உடைய எமதர்மனைக் கண்ட சாவித்திரி பயப்படாது அவனை வணங்கினாள்.

அதனைக் கண்ட எமதர்மன் “அம்மா நான் சாதாரணமாக யார் கண்களுக்கும் புலப்பட மாட்டேன். உன் கண்களுக்கு புலப்படுகிறேன் என்றால் நீ சாதாரண பெண் இல்லை. உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு சாவித்திரி “என்னுடைய கணவரின் உயிர் வேண்டும்” என்றாள்.

அதற்கு எமதர்மன் “உயிர்களின் பாவபுண்ணிய கணக்குப்படி அவர்களின் உயிரினை எடுப்பது என் கடமை. என் கடமையை செய்ய தடுக்காதே” என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டான்.

சாவித்திரி உடனே சத்தியவானின் உடலை வைக்கோலால் போர்த்திவிட்டு “நெல்லினை பாதுகாப்பது போல் மிருகங்களிடமிருந்து உடலை நான் திரும்பி வரும்வரையில் காக்க வேண்டும்” என்று வேண்டி விட்டு எமதர்மனை பின் தொடர்ந்தாள்.

எமதர்மன் பூமியை விட்டு காற்று மண்டலத்தை அடைந்தான். சாவித்திரியும் தன்னுடைய பக்தியால் காற்று மண்டலத்தில் எமனைத் தொடர்ந்தாள்.

தன்பின்னால் யாரோ வருவதை உணர்ந்த எமதர்மன் “யாரது?” என வினவ அதற்கு சாவித்திரி “எமதர்மரே நான்தான் சாவித்திரி” என்றாள்.

மிகுந்த ஆச்சர்யத்துடன் சாவித்திரை நோக்கிய எமதர்மன் “யாரும் மனித உருவுடன் காற்று மண்டலத்தை அடைய முடியாது. அப்படி இருக்கையில் நீ எப்படி அம்மா இங்கே வந்தாய். உன் கணவனின் உயிரைத் தவிர உனக்கு வேண்டும் வரம் ஒன்றினைக் கேள்” என்றார்.

சாவித்திரியும் “என் மாமன் மாமி ஆகியோர் கண்பார்வையுடன் இழந்த நாட்டினைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வேண்டினாள். “அவ்வாறே ஆகுக” என்று கூறி எமதர்மன் அக்னி ஆற்றினை கடந்து சென்றான்.

சாவித்திரியும் பின்தொடர்ந்து தனது பக்தியினால் அக்னி ஆற்றினை கடந்து எமதர்மனைப் பின்தொடர்ந்தாள். அதனைக் கண்டு திகைத்த எமன் “உனக்கு என்ன வேண்டும்?” என்றான். அதற்கு சாவித்திரி “என் தந்தைக்கு நாடாள வாரிசு வேண்டும்” என்றாள். “அவ்வரத்தினைத் தந்தேன்” என்றபடி எமலோகப்பட்டினத்தை அடைந்தான்.

அங்கேயும் சாவித்திரி பின் தொடர்ந்தாள். அதனைக் கண்ட எமதர்மன் “உனக்கு மேலும் ஒரு வரத்தினைத் தருகிறேன். இனியும் என்னைத் தொடராதே” என்றார்.

அதனைக் கேட்ட உடன் சாவித்திரி “எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்” என்றாள். எமதர்மனும் “அவ்வாறே ஆகுக” என்றார்.

“என் கணவன் இல்லாமல் எனக்கு எப்படி பிள்ளைகள் வருவார்கள்?” என்று வினா எழுப்பினாள் சாவித்திரி.

சாவித்திரியின் புத்தி சாதுர்யத்தை கண்டு திகைத்த எமதர்மன் “உனக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியத்தோடு எல்லா செல்வ வளங்களையும் பெற்று நல்வாழ்வினையும் அருளுகிறேன்” என்று கூறி சத்தியவானையும் திருப்பித் தந்தார்.

உயிர் பெற்ற சத்தியவான் உறக்கத்தில் இருந்து விழிப்பவன் போல் எழுந்தான். சாவித்திரி காட்டில் கிடைத்த மண்ணினைக் கொண்டு அடை தயார் செய்து அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு மேற்கொண்டாள்.

வழிபாடு மேற்கொண்ட நேரம் மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் ஆரம்பமாகிய வேளை ஆகும்.

 

காமாட்சி அம்மன் பின் பற்றிய விரதம்

ஒரு முறை உமையம்மை சிவனின் கண்களை விளையாட்டாக பொத்தியதால் உலகம் இருண்டது. தன் தவறுக்கு வருந்திய தேவி கம்பை ஆற்றின் கரையில் மணலால் லிங்கம் வடித்து வழிபாடு நடத்தி வந்தாள்.

ஒரு நாள் கம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டபோது சிவலிங்கம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க விரதமுறையைப் பின்பற்றினாள்.

அதில் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்கு காட்சி கொடுத்து திருமணம் செய்து கொண்டு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அருளினார்.

காமாட்சி அம்மன் பின்பற்றிய விரதமுறையை சாவித்திரிக்கு கூறி சாவித்திரியை பின்பற்றி தீர்க்க சுமங்கலி வரத்தினைப் பெறுமாறு நாரதர் அறிவுறுத்தியதால் இவ்வழிபாட்டில் காமாட்சி அம்மன் இடம் பெறுகிறாள்.

 

காரடையான் நோன்பு மேற்கொள்ளும் முறை

இவ்விரத நாளன்று பெண்கள் நித்திய கடன்கள் முடித்து நீராடி பூஜை அறையை அலங்கரிக்கின்றனர்.

காமாட்சி அம்மன் படத்தினையோ, தேங்காய் வைத்த கலசத்தினையோ வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றர்.

மஞ்சள் அல்லது பூக்களைக் கட்டிய நோன்புக் கயிறுகளை வழிபாட்டில் வைக்கின்றனர்.

இலையில் கார்காலத்தில் விளைந்த நெல்லிருந்து கிடைத்த அரிசி மற்றும் காராமணியைக் கொண்டு தயார் செய்த உப்பு மற்றும் வெல்ல அடைகளையும், உருகாத வெண்ணையையும் படைத்து விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.

வழிபாட்டின் போது ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் நீ எனக்கு மாங்கல்யப் பாக்கியம் தா’ என வேண்டிக் கொண்டு காமாட்சி அம்மன் படத்திற்கு ஒரு நோன்பு கயிற்றினை சாற்றிவிட்டு பெண்கள் தங்கள் கழுத்தில் நோன்புக் கயிற்றினைக் கட்டிக் கொள்கின்றனர்.

வழிபாட்டின் முடிவில் அடைகளை பிரசாதமாக உண்டு வழிபாட்டினை நிறைவு செய்கின்றனர்.

 

காரடையான் நோன்பின் பலன்

இவ்விரத முறையை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பின்பற்றுவதால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து பாசமும் நேசமும், அன்னோன்னியமும் அதிகரிக்கும்.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நிறைவான திருமண வாழ்வு கிடைக்கும். எல்லாவித செல்வங்களுடன் நிறைவான வாழ்கை பெண்களுக்கு கிடைக்கும்.

காரடையான் நோன்பு மேற்கொண்டு சாவித்திரி வீரம், பக்தி, விவேகம், பொறுமை, திடநம்பிக்கை ஆகியவற்றுடன் எமதர்மனிடம் போராடி தனது கணவனின் உயிரினைத் திரும்பப் பெற்றாள்.

அதேபோல் நாமும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இவ்விரத வழிபாட்டினை மேற்கொண்டு வாழ்க்கையின் இன்னல்களை வென்று வசந்தமாக்குவோம்.

– வ.முனீஸ்வரன்

One Reply to “காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.