சர்க்கரை நோய் என்றால் என்ன?

நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையைக் கொழுப்பாகவும், கிளைகோ ஜென்னாகவும் சேமித்து வைக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவின் அளவுக்குத் தக்கவாறு இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப் பணியைச் செய்கிறது.

பல காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அது 180 மில்லிகிராம் சதவீதத்தைத் தாண்டும் போது சிறுநீரிலும் சர்க்கரை வெளியாகிறது. இதுதான் சர்க்கரை நோய்.

சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் அதிக சர்க்கரையே தவிர சிறுநீரில் அல்ல.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

• அடிக்கடி சிறுநீர் கழித்தல்
• அதிக தாகம்
• அதிக பசி
• அதிக சோர்வு
• எடை குறைதல்
• கண் பார்வை கோளாறு
• பிறப்புறுப்பில் புண்கள்
• கால்வலி, கால்வீக்கம், மதமதப்பு, எரிச்சல்
• ஆண்மை குறைவு
• ஆறாத புண்கள்

அறிகுறிகள் சர்க்கரை மிக அதிகமாக இருந்தால்தான் வரும். இக்காரணங்கள் எதுவும் இல்லாமலும் சர்க்கரை நோய் வரலாம்.

சர்க்கரை நோய் உண்டாகக் காரணங்கள்

• அதிக எடை
• அதிக கொழுப்பு
• இருதய நோய்
• இரத்த கொதிப்பு
• குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பவர்கள்
• உடல் உழைப்பு, உடற்பயிற்சி இன்மை
• கவலை, மன உளைச்சல்

சர்க்கரை நோயின் பின் விளைவுகள்
1. உடனடி விளைவு

சர்க்கரை நோய் அமில மயக்கம்

2. நீண்டகால விளைவு

பார்வை இழப்பு, பக்கவாதம், கால் இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு.

கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் உடல் உறுப்புக்களை எந்த அறிகுறிகளும் இல்லாமல் மெல்ல மெல்ல பாதிக்கும். இரத்தக் குழாய்களில் படியும் சர்க்கரையானது மாரடைப்பு, கண், கால், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். கண் பார்வை பறிபோகும் அபாயமும் ஏற்படும்.

மாரடைப்புக்கான முக்கிய காரணிகளுள் சர்க்கரை நோயும் ஒன்று. கால் நரம்புகள் மோசமாக பாதிக்கப்படுவதால் பலருக்கும் கால்களையோ, கால்விரலையோ அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதை உங்களில் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்புகளுக்குச் சிகிச்சை செய்ய ஆகும் மருத்துவ செலவுகள் மிக மிக அதிகம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முடிந்தவரை சர்க்கரை நோய் வராமல் தடுப்பதும், அப்படியே வந்துவிட்டாலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் இன்றியமையாதது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது