பழங்களின் தேவதை பப்பாளி

பப்பாளி பழத்தின் மென்மை, சுவை, நிறம், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகியவை காரணமாக அது பழங்களின் தேவதை என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. இது ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

இப்பழம் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டு எல்லா காலங்களிலும், விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதால் இது ஏழைகளின் பழம் என்று அழைக்கப்படுகிறது.

இது வீட்டுத் தோட்டம் முதல் வணிகரீதியாக பண்ணை வரை வளர்க்கப்படுகிறது. இப்பழத்தின் ஊட்டச்சத்துகள் காரணமாக இது தற்போது உலகமெங்கும் பிரபலடைந்துள்ளது.

பப்பாளியானது காரிகாசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. பப்பாளியின் அறிவியல் பெயர் காரிகா பப்பையா என்பதாகும்.

பப்பாளியின் அமைப்பு மற்றும் வளரியல்பு

பப்பாளியானது மரவகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இம்மரம் 6-9 மீ உயரம் வரை வளரும்.

 

பப்பாளி மரம்
பப்பாளி மரம்

 

இம்மரத்தில் இலைகள் உச்சியில் மட்டும் தொகுப்பாக இருக்கிறது. பப்பாளியின் இலைகள் கைவடிவத்தில் அகலமாக ஆமணக்கு இலை போன்று காணப்படும்.

 

பப்பாளி இலை
பப்பாளி இலை

 

மரத்தின் தண்டுப்பகுதி நீண்டு, உட்பகுதி குழல் போன்று இருக்கும். இதனால் பப்பாளிமரம் எளிதில் உடைந்து விடும்.

பப்பாளியில் ஆண் மற்றும் பெண் மரங்கள் உண்டு. ஆண்பப்பாளி மரத்தில் பூக்கள் வெள்ளை மற்றும் இளம்மஞ்சள் நிறங்களில் கொத்துக்களாக காணப்படும்.

 

ஆண் பப்பாளி பூக்கள்
ஆண் பப்பாளி பூக்கள்

 

பெண்பப்பாளியில் பூக்கள் வெள்ளையாக நுனியில் தனித்தனியாக காணப்படும்.

 

பெண் பப்பாளி பூக்கள்
பெண் பப்பாளி பூக்கள்

 

பெண்பப்பாளியில் மட்டுமே காய்கள் மற்றும் பழங்கள் உண்டாகின்றன. பப்பாளிக் காயானது பேரிக்காய் வடிவில் அடர் பச்சைநிறத்தில் காணப்படும்.

பப்பாளிப் பழமானது வெளிப்புறத்தில் மஞ்சள் கலந்த பச்சை அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும்.

பப்பாளியின் உட்புறச் சதையானது மஞ்சள் அல்லது அடர் ஆரஞ்சு வண்ணத்தில் மிகவும் மென்மையாக இருக்கும்.

இப்பழத்தின் உட்பகுதி குழிந்து மிளகு வடிவத்தில் கருப்பு நிறவிதைகளைக் கொண்டிருக்கும்.

இப்பழமானது இனிப்பு சுவையினையும், தனிப்பட்ட மணத்தினையும் உடையது.

பப்பாளியின் இலைகள், கிளைகள், காய்கள் ஆகியவற்றை மரத்தில் இருந்து உடைத்து எடுக்கும் போது பால் போன்ற வெண்ணிறத்திரவம் வெளிப்படுகிறது.

பப்பாளி மரமானது எல்லா மண்வகைகளிலும் வளரும் தன்மையுன்டையது.

இது வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வளரும் இயல்புடையது.

பப்பாளியின் வரலாறு

பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ ஆகும். பின் அங்கிருந்து போர்த்துக்கீசியர்கள், ஸ்பானியர்கள் மூலம் உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களுக்கு இது பரவியது.

தற்போது இந்தியா, இலங்கை, மின்மார், மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிரேசில் உள்ளிட்ட இடங்களில் இது காணப்படுகிறது.

இந்தியா பப்பாளி உற்பத்தில் உலகில் முதலிடம் வகிக்கிறது. உலகில் 42 சதவீதம் பப்பாளி இந்தியாவில் உற்பத்தியாகிறது.

பிரேசில், இந்தோனேசியா, நைஜீரியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளிலும் பப்பாளி அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பப்பாளியில் விட்டமின் சி மிகஅதிகளவு காணப்படுகிறது. இப்பழத்தில் விட்டமின் ஏ அதிகளவு உள்ளது.

மேலும் இதில் விட்டமின்கள் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), இ, கே போன்றவையும் காணப்படுகின்றன.

இப்பழத்தில் தாதுஉப்புக்களான மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் முதலியவைகள் உள்ளன.

மேலும் இப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, ஃபோலேட்டுகள் போன்றவையும் காணப்படுகின்றன.

இப்பழத்தில் பைட்டோ-நியூட்ரியன்களான பீட்டா கரோடீன்கள், பீட்டா கிரிப்டோ சாக்தின்,  லுடீன்-ஸீக்ஸாத்தைன் போன்றவையும் உள்ளன.

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு

பப்பாளியானது பொதுவாக உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. பப்பாளியில் உள்ள பாப்பைன் என்ற நொதியானது புரதத்தினை உடைத்து செரிமானத்திற்கு உதவுகிறது.

இச்செயல்பாட்டால் புரதமானது கொழுப்பாக மாற்றப்படுவது தடைசெய்யப்படுகிறது. புரதச்சத்து நன்கு செரிக்கப்படாவிட்டால் அது வாதம், சர்க்கரை நோய், உய் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கி விடும்.

மேலும் இப்பழம் செரிமான மண்டலத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி செரிமான மண்டலத்தைச் சுத்தப்படுத்துகிறது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது.

அளவுக்கு அதிகமாக இப்பழத்தை உண்டால் வாந்தி, வயிற்று வலி, குமட்டல் ஆகியவை ஏற்படும். எனவே இப்பழத்தை அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்தால் நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

புற்றுநோயைத் தடுக்க

பப்பாளியில் விட்டமின் சி, இ, லைகோபீன், பீட்டா கிரிப்டோ சாக்தின், பீட்டா கரோடீன் போன்ற ஆன்டிஆக்ஸிஜென்டுகள் எனப்படும் புற்றுநோய் எதிர்க்கும் காரணிகள் அதிகம் உள்ளன. இவை புற்றுச் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. செரிமானப் பாதையில் புற்றுநோய்கள் ஏற்படாமல் இப்பழம் நம்மைப் பாதுகாக்கிறது.

இதய நலத்தைப் பாதுகாக்க

பப்பாளியில் விட்டமின் ஏ,சி,இ போன்ற இதய நலத்தை பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் காணப்படுகின்றன. இப்பழத்தில் காணப்படும் புரோ-கரோடினாய்டு பைட்டோரியூட்ரியன் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலானது ஆக்ஸிஜனேற்றம் அடையாமல் செய்கிறது.

கொலஸ்ட்ராலானது ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது அவை இரத்தநாளங்களில் படிந்து மாரடைப்பினை உண்டாக்கிவிடும். மேலும் இப்பழத்தில் உள்ள விட்டமின் சி, இ போன்றவை இரத்தநாளங்களில் கொலஸ்ட்ரால் படியாமல் பாதுகாக்கிறது.

இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது. இப்பழத்தினை மதிய இடைவேளை உணவாக உட்கொண்டு இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.

சருமப்பாதுகாப்பு

பப்பாளியில் சருமத்திற்கு புத்துணர்ச்சியை உண்டாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. எனவே பப்பாளியானது சரும அலங்காரப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

இப்பழத்தில் உள்ள பாப்பைன் நொதியானது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குகிறது. பப்பாளியானது சருமப்பிரச்சினைகளுக்கு விரைந்து நிவாரணம் அளிக்கும் பண்பினையும் கொண்டுள்ளது.

எனவே சருமஎரிச்சல், சூரிய கதிர்களால் சருமத்தில் உண்டாகும் பாதிப்பு போன்றவைகளுக்கு இப்பழம் சிறந்த தீர்வாகும்.

மேலும் இப்பழம் ஆக்ஸிஜனேற்றத்தால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினை சருமத்தில் குறைந்து சருமச்சுருக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

இப்பழம் சோரியாஸிஸ், முகப்பரு உள்ளிட்ட சருமப்பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணம் விளங்குகிறது. எனவே சருமப்பிரச்சினைகள் உள்ளவர்கள் பப்பாளியை அடிக்கடி உணவில் சேர்த்து பயன் பெறலாம்.

கண்தசை அலர்ஜி நோயினை நீக்க

வயதோதிகத்தால் நாம் கண்தசை அலர்ஜி நோயினால் பாதிப்பினை அடைகிறோம். இந்நோயில் பார்வை செல்கள் சீரழிக்கப்படுகின்றன. இதனால் மங்கலான பார்வை மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவை ஏற்படுகின்றன.

பப்பாளியில் உள்ள பீட்டா கரோடீன்கள் இந்த நோய் ஏற்படாமல் தடைசெய்கிறது. தினமும் இப்பழத்தினை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது கண்தசை அலர்ஜி நோய் ஏற்படுவது குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சீரான மாதவிடாய் உண்டாக

பப்பாளிக்காய்களை உண்ணும்போது அவை மாதவிடாயை சீராக்குகிறது. பப்பாளியானது உண்ணும்போது உடல் சூட்டினை ஏற்படுத்தி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பினை தூண்டுகிறது. முறையான ஈஸ்ட்ரஜன் சுரப்பினால் மாதவிடாய் சீராகிறது.

வாத நோய்களை குணமாக்க

முடக்கு வாதம், கீல்வாதம் உள்ளிட்ட நோய்களுக்கு பப்பாளியானது சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது. பப்பாளியில் காணப்படும் கைமோபாப்பைன் என்ற நொதியானது முடக்கு வாதம், கீல்வாதம் உள்ளிட்ட வாதநோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

குடல்புழுக்களின் பிரச்சினைகள் தீர

பப்பாளியானது குடல்புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றள்ளது. இதனால் இப்பழத்தை உண்ணும்போது குடல்புழுக்கள் அழிந்து தொற்றுநோய்கள் ஏற்படுவதில்லை.

ஆரோக்கிய உடல் எடை இழப்பிற்கு

இப்பழத்தினை உண்ணும்போது அது நமக்கு வயிறு நிரம்பிய உணர்வினைத் தருகிறது. இதனை காலை மற்றும் மாலையில் இடைவேளை உணவாகக் கொள்ளலாம்.

இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு குறைகிறது. அதே நேரத்தில் இப்பழம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எனவே இப்பழத்தினை உண்டு ஆரோக்கியமான உடல் இழப்பினைப் பெறலாம்.

பப்பாளியினை பற்றிய எச்சரிக்கை

பப்பாளியானது மாதவிடாயைத் தூண்டிவிடுவதால் கர்ப்பிணிப் பெண்கள் இதனை தவிர்ப்பது நலம். அளவுக்கு அதிகமாக இப்பழத்தினை உண்ணும்போது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

பப்பாளியை வாங்கும் முறை

பப்பாளியை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் மேற்பரப்பில் வெடிப்புகள், வெட்டுக்காயங்கள் ஏதும் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.

நன்கு விளைந்த பப்பாளிக்காயை அறையின் வெப்பநிலையில் வைக்கும்போது பழுத்து விடும். பழுத்த பப்பாளியை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தவும்.

பப்பாளியை தண்ணீரில் அலசி நேராகக்கீறி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி துண்டுகளாக்கி உண்ணலாம்.

பப்பாளிக்காயானது சமையலில் காயாக சமைத்து பயன்படுத்தப்படுகிறது. பப்பாளிக் காயினை கறியுடன் சேர்த்து சமைக்கும்போது கறி விரைவில் வெந்து விடும்.

பப்பாளியானது பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. இப்பழமானது சாலட்டுகள், பழச்சாறு, இனிப்புகள், கேக்குகள், ஜாம்கள், சர்பத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கையின் அற்புதக் கொடையான பப்பாளியை அளவோடு அடிக்கடி உணவில் வளமான வாழ்வு வாழ்வோம்.

-வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.