வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு கூறுவதைக் கீரிப்பிள்ளை கிருஷ்ணன் கேட்டது.

‘ஆகா நல்ல பழமொழி. இதற்கான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்று மனதிற்குள் கீரிப்பிள்ளை கிருஷ்ணன் எண்ணியது.

அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன் எழுந்து “இந்தப் பழமொழி வாய் இருந்தால் போதும்; நல்ல உணவினை உண்டால், பிழைப்பு தானே நகரும் என்பது போல் அல்லவா இருக்கிறது?” என்று கேட்டான்.

அதற்கு ஆசிரியர் “அதுவல்ல இப்பழமொழியின் பொருள். இதன் உண்மையான பொருள் ஒருவர் பேசும் வார்த்தைகள் அவரை என்றென்றும் வாழ வைக்கும்.” என்றார்

அதாவது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் சக்தி அவசியம். அந்த மக்கள் சக்தியை மயக்கி கட்டிப் போட்ட பல நல்ல பேச்சாளர்களை நம்மால் எளிதில் மறக்க இயலாது.

அறிஞர் அண்ணா, திரு. வி.க., நேருஜி, அண்ணல் காந்தி, நேதாஜி, விவேகானந்தர் ஆகியோரின் பேச்சு இந்நாட்டு மக்களை மயக்கியது உண்மைதான்.

“அவர்கள் இன்று நம்மிடையே இல்லையென்றாலும் பேச்சால் வாழ்கிறார்கள். இதைக் குறிக்கவே இந்தப் பழமொழி தோன்றியிருக்க முடியும்” என்று ஆசிரியர் கூறினார்.

ஆசிரியரின் விளக்கத்தினைக் கேட்ட கீரிப்பிள்ளை கிருஷ்ணன் சற்றும் தாமதிக்காமல் வட்டப்பாறையை நோக்கி ஓடியது.

காட்டில் வட்டப்பாறையில் எல்லோரும் கூடியிருந்தனர். காக்கை கருங்காலன் எழுந்து “என் அருமைக் குஞ்சிகளே குட்டிகளே. உங்களில் யார் இன்றைக்கு பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

கீரிப்பிள்ளை கிருஷ்ணன் “நான் இன்றைக்கான பழமொழியைக் கூறுகிறேன்.” என்றது.

அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “சரி சொல். நீ இன்றைக்கு எந்தப் பழமொழியைக் கூறப்போகிறாய்?” என்றது.

கீரிப்பிள்ளை கிருஷ்ணன் “நான் இன்றைக்கு ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்ற பழமொழியைக் கூறுகிறேன்” என்று தான் கேட்ட பழமொழி மற்றும் விளக்கத்தைக் விளக்கியது.

குhக்கை கருங்காலனும் “சரியான விளக்கம் தான். இன்றும் கூட நமது இல்லங்களில் அமைதியாக இருக்கும் குழந்தைகளை விட கலகலவென பேசிக் கொண்டே இருக்கும் குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும்.” என்றது.

ஒரு பணியிடத்தில் அமைதியாக இருக்கும் பணியாளர்களைவிட கலகலவென இருக்கும் பணியாளரை முதலாளிகள் விரும்புவர்.

அதே வேளை வாயிலிருந்து வார்த்தை தவறாக வரும்போதும், இடம் தவறி வரும் போதும் இன்னல் பட நேரும். அதை, “தவளை தன் வாயால் கெடும்” என்று கூறுவர்.

அதாவது தவளை இரவு நேரங்களில் சும்மா இருக்காது கத்திக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் அதை உணவாக கொள்ளும் பாம்புகள் தவளையின் சத்தத்தை வைத்தே அதனை நெருங்கி பிடித்து தின்னும்.

எனவே, வாயுள்ள பிள்ளை பிழைக்கும் தான். ஆனால் வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்தினால் அழிவு நேரலாம் என்பதையும் மறந்து விடக்கூடாது.” என்று காக்கை கருங்காலன் கூறியது.

நரிக்குட்டி நல்லதம்பி “பார்த்தாயா தவளைக்குட்டி தங்கப்பா. உன் இனத்தார் வாயினாலே அழிவை தேடிக் கொள்வர் என்பதை தாத்தா எவ்வளவு நன்றாக விளக்கிக் கூறினார்” என்று கேலி பேசியது.

காக்கை கருங்காலன் கோபத்துடன் “நரிக்குட்டி நல்ல தம்பி. எல்லோரும் நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதை உணர்த்தவே தவளையை உதாரணமாகக் கூறினேன். நீ அதனை தவறாகப் புரிந்து கொண்டாய்.” என்று கூறியது.

நரிக்குட்டி நல்ல தம்பியும் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தது.
காக்கை கருங்காலன் “நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் எல்லோரும் செல்லலாம்” என்று கூறி அனைவரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது