ஃபுல்லரின் – ஒரு பார்வை

கார்பனின் முக்கிய புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று ஃபுல்லரின். இயற்கையில் கிடைக்கும் ஃபுல்லரின் மூலக்கூறை பற்றி பார்க்கலாம்.

 

பக்மின்ஸ்டர் ஃபுல்லரின்

முதன்முதலில், 1985 ஆம் ஆண்டு ரைஸ் பல்கலைக் கழகத்தை (Rice University) சேர்ந்த விஞ்ஞானிகளால் இம்மூலக்கூறு கண்டறியப்பட்டது.

இதற்காக, ஹாரி க்ரோடோ (Harry Kroto), இராபர்ட் கர்ல் (Robert Curl) மற்றும் ரிச்சர்ட்ஸ் மால்லி (Richard Smalley) ஆகிய விஞ்ஞானிகளுக்கு 1996 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இம்மூலக்கூறு (கார்பன் அணுக்களால் ஆன) அறுங்கோண (hexagon) மற்றும் ஐங்கோண (pentagon) வடிவங்களை உள்ளடக்கிய முப்பரிமாண உள்ளீடற்ற கோள‌ வடிவத்தை (ஒரு கால்பந்தைப் போன்று) பெற்றிருக்கிறது.

 

பக்மின்ஸ்டர் ஃபுல்லரினின் மூலக்கூறுஅமைப்பு
பக்மின்ஸ்டர் ஃபுல்லரினின் மூலக்கூறுஅமைப்பு

 

ஒரு மூலக்கூறில் மொத்தம் அறுபது கார்பன் அணுக்கள் இருப்பதால், இதனை ‘C60’ எனவும் சுருக்கமாக அழைக்கின்றனர்.

புகழ்மிக்க அமெரிக்க கட்டிடக்கலை நிபுணரும், கண்டுபிடிப்பாளருமான பக்மினிஸ்டர் ஃபுல்லர் (Buckminster Fuller) என்பவரின் ஜியோடெஸிக் டோம் (geodesic dome) அமைப்பும், ஃபுல்லரின் மூலக்கூறின் அமைப்பும் ஒன்றாக இருந்ததால், இம்மூலகூறிற்கு அவரது நினைவாக பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் (Buckminster fullerene) என்ற மற்றொரு பெயரையும் விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

 

ஃபுல்லரினின் பண்புகள்

ஃபுல்லரின் மூலக்கூறு( குறிப்பிட்ட நிலையில்) கடத்தியாகவும், குறைகடத்தியாகவும் (semiconductor) செயல்படும் தன்மை கொண்டது.

(புறபரப்பில் வேதிமாற்றம் செய்யப்பட்ட) இம்மூலக்கூறிற்கு ஃபோட்டோகுரோமிக் (photo chromic) பண்பு உண்டு. அதாவது, ஒளியால் இம்முலக்கூறின் அமைப்பு மீள்முறையில் மாறும் தன்மை கொண்டது.

இது அதீதநிலைப்பு தன்மை வாய்ந்தது. அதாவது, அதிக வெப்ப மற்றும் அழுத்த நிலையால் இது எவ்வித பாதிப்பினையும் அடைவதில்லை. சொல்லப்போனால், எஃகு (steel) மற்றும் வைரத்தை விட இது அதிக உறுதிதன்மை வாய்ந்தது.

வழுவழுப்பு தன்மை கொண்ட இம்மூலக்கூறு நீரில்கரைவதில்லை. மாறாக அரோமெடிக் கரைப்பான்களில் (aromatic solvents) எளிதில் கரைகிறது. ஒப்பீட்டளவில் இம்மூலக்கூறு நச்சுத்தன்மை அற்றது. 

 

 

ஃபுல்லரினின் பயன்கள்

சூரியமின் கலனிலும் (solar cells), ஹைட்ரஜன் வாயுவை சேமிப்பதற்கும் ஃபுல்லரினை பயன்படுத்த முடியும்.

இது உராய்வினை தடுக்கும் உயவுப்பொருளாக (lubricant) கோளத்தாங்கி (Ball Bearing), கியர்கள் (gears), குழாய்கள் முதலிய இயந்திரங்களில் பயன்படுகிறது.

உலோகங்களின் உறுதித்தன்மையை அதிகரிக்கும் பொருளாகவும் இது விளங்குகிறது.

உதாரணமாக ஃபுல்லரினை அதீத உறுதித்தன்மை வாய்ந்த டைட்டானிய‌ம் அலுமினாய்டுடன் சேர்ப்பதன் மூலம் அதன் உறுதித்தன்மை மேலும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஃபுல்லரினின் விலைமதிப்பு மிக்குறைவே. அதேசமயத்தில் செயற்கை வைரங்களைத் தயாரிக்கும் மூலப்பொருளாகவும் இதனைப் பயன்படுத்த இயலும்.

எனவே, குறைந்த செலவில் செயற்கை வைரங்களைத் தயாரிப்பது சாத்தியம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

 

மருத்துவத்துறையிலும் ஃபுல்லரினைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மூலக்கூறின் புறபரப்பினை தகுந்த (வேதிமூலக்கூறுகளை கொண்டு) மாற்றம் செய்வதன் மூலம், மருந்தினை பாதிப்படைந்த உடலின் குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டு சென்று (மருந்தினை) செலுத்தும் காரணியாக இதனை பயன்படுத்த முடியும்.

மேலும் இம்மூலக்கூறிற்கு வைரஸைக் கொல்லும் (antiviral activity) பண்பும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எதிர் ஆக்ஸிஜனேற்ற (antioxidant) பண்பின் காரணமாக, இதனை ஒப்பனை செய்யும் பொருட்களிலும் (personal care products)  பயன்படுத்த முடியும்.

– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை
கன்செப்ஷன் ப‌ல்கலைக்கழகம், சிலி
WhatsApp +91 9941633807

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.