உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள்

உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

சங்கிலிலைப் போன்று காணப்படும் மலைகளின் தொடர்ச்சி மலைத்தொடர்கள் என்று அழைக்கப்படுகின்றன. மலைத்தொடர்கள் புவியியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன.

இம்மலைத் தொடர்கள் உலகின் எல்லா இடங்களிலும் பரவிக் காணப்படுகின்றன. இம்மலைத்தொடர்கள் நாடுகளிலும், கண்டங்களிலும் நீண்டும், சில இடங்களில் எல்லைகளை வரையறை செய்பவைகளாகவும் உள்ளன.

மலைத்தொடர்கள் பிளேட் டெக்டோனிக்ஸ் என்றழைக்கப்படும் செயல்பாட்டால் உருவாக்கப்படுகின்றன.

 

ஆன்டிஸ் மலைத்தொடர், தென்அமெரிக்கா

ஆன்டிஸ் மலைத்தொடர்
ஆன்டிஸ் மலைத்தொடர்

 

உலகின் முதலாவது நீண்ட மலைத்தொடர் என்ற பெருமை இம்மலையைச் சாரும். இம்மலைத்தொடர் 7000 கிமீ நீளத்தினையும், 500 கிமீ சராசரி அகலத்தினையும் கொண்டுள்ளது. இது தென்அமெரிக்காவின் மேற்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.

இம்மலைத்தொடர் வெனிசுலா, கொலம்பியா, ஈகுவடார், பெரு, பொலிவியா, சிலி, அர்ஜென்டினா ஆகிய ஏழு தென்அமெரிக்க நாடுகளில் வடக்கு தெற்காக தொடர்ந்து காணப்படுகிறது.

 

ஆன்டிஸ் மலைத்தொடர் வரைபடம்
ஆன்டிஸ் மலைத்தொடர் வரைபடம்

 

இமயமலைக்கு அடுத்தாற்போல் உலகின் அதிக உயரமான சிகரங்களை இம்மலை பெற்றுள்ளது. இம்மலையின் உயர்ந்த சிகரம் அக்கோன்காகுவா (உயரம் 6962 மீ) ஆகும். உலகின் இரண்டாவது மிகஉயரமான பீடபூமியான அலிப்ளானோவை இம்மலைத்தொடர் கொண்டுள்ளது.

உலகின் மிகஉயரமான எரிமலையான ஓஜோஸ் எல் சலாடோ சிலி-அர்ஜென்டினா எல்லையில் ஆன்டிஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

காலநிலையைப் பொறுத்து இம்மலைத் தொடர் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை வெப்பமண்டல ஆன்டிஸ், உலர் ஆன்டிஸ், வெப்பமண்டல மழைமிகு ஆண்டிஸ் ஆகியவை ஆகும்.

இம்மலைத்தொடரில் 3500 வகையான விலங்கு மற்றும் பறவையினங்கள் காணப்படுகின்றன.

 

 

ராக்கி மலைத்தொடர், வடஅமெரிக்கா

ராக்கி மலைத்தொடர்
ராக்கி மலைத்தொடர்

 

4800 கிமீ நீளத்தினைக் கொண்டுள்ள இம்மலைத்தொடர் உலகின் இரண்டாவது நீண்ட மலைத்தொடர் ஆகும். இது வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியில் நீண்டுள்ளது.

இம்மலைத்தொடர் கனடாவின் பிரிடிஷ் கொலம்பியாவில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ வரை பரவியுள்ளது.

 

ராக்கி மலைத்தொடர் வரைபடம்
ராக்கி மலைத்தொடர் வரைபடம்

 

இம்மலையின் உயர்ந்த சிகரமான எல்பட் சிகரம் ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோவில் 4400 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

நடைபயணம், முகாம், மலையேறுதல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், பனிசறுக்கு போன்றவைகள் இம்மலைத்தொடரில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இது சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளக்குகிறது.

 

 

கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர், ஆஸ்திரேலியா

கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர்
கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர்

 

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள இம்மலைத்தொடர் உலகின் மூன்றாவது பெரிய மலைத்தொடராகும். இதன் நீளம் 3500 கிமீ ஆகும். இது கிழக்கின் உயர்நிலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலைத்தொடர் வடக்கிழக்கில் குயின்ஸ்லாந்தில் இருந்து தொடங்கி தெற்கே மேற்கு விக்டோரியா வரை ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.

 

கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர் வரைபடம்
வலதுபுறம் அடர் மஞ்சள் நிறத்தில் உள்ளது கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர் வரைபடம்

 

இம்மலைத்தொடரின் அழகான டேஞ்சர் நீர்வீழ்ச்சி நியூசௌத் வேல்ஸில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் மிகஉயரான சிகரமாக கொஸ்கியூஸ்கோ 2228 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இம்மலைத்தொடரிலிருந்து கான்டாமைன், மேக்டொனால்ட், பிரிஸ்பேன், மிட்டா உள்ளிட்ட முக்கிய ஆறுகள் உற்பத்தியாகின்றன.

 

 

டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா

டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா
டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா

 

இம்மலைத்தொடர் 3500 கிமீ நீளம் மற்றும் 100 முதல் 280 கிமீ அகலம் கொண்டு உலகின் நான்காவது பெரிய மலைத்தொடராக உள்ளது.

இது அன்டார்டிக்காவை கிழக்கு மற்றும் மேற்கு என இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறது. இதில் நிறைய குறுமலைத்தொடர்கள் உள்ளன. இம்மலைத்தொடரானது 98 சதவீதம் பனிமூடி காணப்படுகிறது.

 

டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா வரைபடம்
டிரான்டான்டரிடிக் மலைத்தொடர், அன்டார்டிக்கா வரைபடம்

 

இம்மலைத்தொடரில் ராணி மாளட் என்னுமிடத்தில் கிர்க்பாட்டிரிக் என்னும் மிகஉயர்ந்த சிகரம் 4528 மீ உயரத்தில்; அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் சீல்கள், பென்குயின்கள் மற்றும் கடல்வாழ்பறவைகள ஆகியவற்றிற்கு வாழிடமாக உள்ளது.

 

 

குன்லுன் மலைத்தொடர், ஆசியா

குன்லுன் மலைத்தொடர், ஆசியா
குன்லுன் மலைத்தொடர்

 

இம்மலைத்தொடர் ஆசியாவின் மிகநீண்ட மலைத்தொடராகும். இம்மலைத்தொடர் உலகின் ஐந்தாவது பெரிய மலைத்தொடராகும். இதனுடைய நீளம் 3000 கிமீ ஆகும்.

இம்மலைத்தொடரின் பெரும் பகுதி சீனாவில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் கோபி பாலைவனம் ஆரம்பமாகிறது. திபெத் பீடபூமி இதனுடைய தெற்கு எல்லையில் உள்ளது. தஜகஸ்தானின் பாமீர் முடிச்சு இதனுடைய கிழக்கு எல்லையில் உள்ளது. இதனுடைய மேற்கு எல்லையில் வடகிழக்கு சீனாவின் வளமான பகுதி அமைந்துள்ளது.

இம்மலையில் இருந்து காரகாஸ் மற்றும் யுர்உங்காஸ் உள்ளிட்ட முக்கிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலையின் உயர்ந்த சிகரமாக குன்லுன் தேவதை 1895 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

யூரல் மலைத்தொடர், ஆசியா

யூரல் மலைத்தொடர்
யூரல் மலைத்தொடர்

 

யூரல் மலைத்தொடர் ஆசியா கண்டத்தில் வடக்கிலிருந்து தெற்காகச் செல்கிறது. இது உலகின் ஆறாவது நீண்ட மலைத்தொடராகும். இம்மலைத்தொடர் 2500 கிமீ நீளத்தினையும் 150 கிமீ சராசரி அகலத்தினையும் கொண்டுள்ளது.

இது ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியான ஆர்டிக்கில் தொடங்கி கசகஸ்தானின் வடக்குப் பகுதி வரை தெற்காக நீண்டு செல்கிறது. இம்மலைத்தொடர் ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு எல்லையாக உள்ளது.

ஐ ரோப்பாவின் முக்கிய ஆறான யூரல் ஆறு இம்மலைத்தொடரில் உற்பத்தியாகிறது.

 

 

அட்லஸ் மலைத்தொடர், ஆப்பிரிக்கா

அட்லஸ் மலைத்தொடர்
அட்லஸ் மலைத்தொடர்

 

இம்மலைத்தொடர் ஆப்பிரிக்க கண்டத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் உலகின் ஏழாவது பெரிய மலைத்தொடராகும். இது 2500 கிமீ நீளம் உடையது.

இம்மலைத்தொடர் அல்ஜீரியா, மொராக்கோ, டுனிசியா ஆகிய நாடுகளில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் டுனிசியாவின் மத்தியதரைக்கடல் பகுதியில் தொடங்கி அல்ஜீரியா வழிச்சென்று மொராக்கோவின் வடமேற்குப்பகுதியான அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிவரை நீண்டுள்ளது. இது சாகாரா பாலைவனத்தின் வடமேற்கு எல்லையாக உள்ளது.

இம்மலைத்தொடர் நான்கு புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன மத்திய அட்லஸ், உயர் அட்லஸ், ஆன்டி அட்லஸ், சகாரன் அட்லஸ் என்பவை ஆகும். இம்மலையில் 4165 மீ உயரத்தில் டுப்கால் மிகஉயர்ந்த சிகரமாக அமைந்துள்ளது.

அட்லஸ் மலைத்தொடர் வரைபடம்
அட்லஸ் மலைத்தொடர் வரைபடம்

 

 

அப்பலாசியன் மலைத்தொடர், வடஅமெரிக்கா

அப்பலாசியன் மலைத்தொடர்
அப்பலாசியன் மலைத்தொடர்

 

இம்மலைத்தொடர் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு கிழக்கு கடற்கரை எல்லையாக அமைந்துள்ளது.

இம்மலைத்தொடரானது 2414 கிமீ நீளத்தினையும் 300 கிமீ சராசரி அகலத்தினையும் பெற்றுள்ளது. இது உலகின் எட்டாவது நீண்;;ட மலைத்தொடராகும். இம்மலைத்தொடரானது உலகின் ஏனைய மலைத்தொடர்களை விட உயரம் குறைவாக உள்ளது.

இம்மலைத்தொடரின் பெரும் பகுதி ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது. இதன் ஒருசில பகுதி தென்கிழக்கு கனடாவில் அமைந்துள்ளது. இதன் மிகஉயர்ந்த சிகரமான மிச்செல் 2037 மீ உயரத்தில் உள்ளது.

 

 

இமயமலை, ஆசியா

இமயமலை
இமயமலை

 

இம்மலைத்தொடர் தெற்காசியாவில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2400 கிமீ ஆகும். இது உலகின் ஒன்பதாவது நீண்ட மலைத்தொடராகும்.

உலகின் ஏனைய முக்கிய மலைத்தொடர்களைவிட இது இளமையானது. இது திபெத்திய பீடபூமியிலிருந்து சிந்து-கங்கை சமவெளியைப் பிரிக்கிறது.

இந்துகுஷ் மலைத்தொடர் இதனுடைய வடக்கு எல்லையாகும். இந்திய வடகிழக்கு மாநிலங்கள் இதனடைய கிழக்கு எல்லையாகும்.

 

இமயமலை வரைபடம்
இமயமலை வரைபடம்

 

இம்மலைத்தொடரில் உலகின் உயரமான ஒன்பது சிகரங்கள் அமைந்துள்ளன. இம்மலைத்தொடர் ஆசியாவின் முக்கிய ஆறுகளான சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவற்றிற்கு உற்பத்தி இடமாக உள்ளது.

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் இம்மலையில் அமைந்துள்ளது. இதனடைய உயரம் 8848 மீ ஆகும்.

 

 

அல்தாய் மலைத்தொடர், ஆசியா

அல்தாய் மலைத்தொடர்
அல்தாய் மலைத்தொடர்

 

இம்மலைத்தொடர் மத்திய ஆசியா பகுதியில் அமைந்துள்ளது. இதனுடைய நீளம் 2000 கிமீ ஆகும். இது உலகின் பத்தாவது நீண்ட மலைத்தொடராகும்.

ரஷ்யா, மங்கோலியா, சீனா, கசகஸ்தான் ஆகிய நாடுகளை இம்மலைத்தொடர் இணைக்கிறது. இம்மலையின் பெரும்பான்மையான பகுதி மங்கோலியாவில் உள்ளது.

இதன் ஒரு சில பகுதிகளே சீனா, ரஷ்யா, கசகஸ்தான் நாடுகளில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரின் உயர்ந்த சிகரமாக பெலுகா 4506 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

– வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.