கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்

கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியை ஆசிரியர் தன் மாணவர்களுக்கு கூறுவதை கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் கேட்டது.

‘ஆகா இன்றைக்கான பழமொழியை நாம் கூற இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. பழமொழி மற்றும் விளக்கத்தினைப் பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா? என்று தொடர்ந்து கேட்போம்.’ என்று மனதிற்குள் எண்ணியது.

அப்பொழுது மாணவன் ஒருவன் எழுந்து “ஐயா இந்த பழமொழியை சற்று விளக்கிக் கூறுங்களேன்” என்று கேட்டான்.

கல்விக்கு இருவர்

ஆசிரியரும் “இந்தப் பழமொழிக்கான பொருளை எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவே விளக்கிக் கூறுகிறேன் கேளுங்கள்.

ஒருமுறை “கல்வி என்றால் என்ன?”, என்று தத்துவ ஞானி ஜே.கே.யிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், “கல்வி என்பது விழிப்புணர்வை நோக்கிய பயணம்” என்று கூறினாராம்.

இப்படிப்பட்ட கல்வியை ஒருவராக இருந்து படித்து புரிந்து கொண்டு மனனம் செய்து, தேர்வு எழுதி, வெற்றி பெறுவது சற்று சிரமம். ஆனால் கல்வியை ஒருவருக்கு ஒருவர் விளக்கம் சொல்லி புரிந்து கொண்டு வெற்றி பெறுவது என்பது எளிது. அதனால் தான் கல்விக்கு இருவர் என்று சொல்லி வைத்துள்ளனர், நம் பெரியவர்கள்.

இந்தக் கூற்றின்படியே கல்விச் செல்வத்தை பெற வேண்டும் என்றால் இருவராக இணைந்து நின்று செயல்பட்டால் வெற்றி பெற இயலும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

களவுக்கு ஒருவர்

இருவர் இணைந்து திட்டமிட்டு திருட நினைக்கும் போது பெரும்பாலும் இருவருக்கு இடையில் சண்டை வந்து அவர்களின் காரியம் கெட்டுப் போய் விடும். ஆதலால் தான் களவுக்கு ஒருவர் என்று சொல்லி வைத்துள்ளனர் என்று ஆசிரியர் கூறினார்.

 

 

பழமொழி மற்றும் விளக்கத்தை கேட்டதும் கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் வேகமாக வட்டபாறையை நோக்கி ஓடியது. அங்கே எல்லோரும் காக்கை கருங்காலனின் வருகைக்காக காத்திருந்தனர்.

கின்னிக்கோழிக்குஞ்சும் அவர்களுடன் இணைந்து காக்கை கருங்காலனின் வருகையை எதிர்நோக்கியது. சிறிது நேரத்தில் காக்கை கருங்காலன் வட்டப்பாறைக்கு வந்தது.

எல்லோரும் எழுந்து காக்கை கருங்காலனுக்கு வணக்கத்தை தெரிவித்தனர். காக்கை கருங்காலன் “என் அருமைக் குழந்தைகளே, உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப் போகிறீர்கள்?” என்று கேட்டது.

அதனைக் கேட்ட கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் “தாத்தா நான் இன்றைக்கு கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியைக் கூறப்போகிறேன்.” என்று தான் கேட்டது முழுவதையும் விளக்கிக் கூறியது.

காக்கை கருங்காலன் “குழந்தைகளே, பழமொழிக்கான விளக்கம் புரிந்தது தானே. நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்.” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.