துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

தூந்திரா என்ற சொல்லுக்கு மரம் இல்லா நிலம் என்பது பொருளாகும். தூந்திராவானது புவியில் காணப்படும் முக்கிய நில வாழிடம் ஆகும். இவ்வாழிடம் புவியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இது இப்புவியில் தோன்றிய மிகஇளமையான வாழிடம் ஆகும். இவ்வாழிடம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

தூந்திரா என்ற சொல்லானது துன்துரியா என்ற ஃபின்னிஷ் மொழியில் இருந்து தோன்றியது. இவ்வாழிடத்தில் கோடை காலம், குளிர் காலம் என இரு பருவநிலைகளே அதிகம் காணப்படுகின்றன.

இவ்விடமானது பொதுவாக ஆண்டு முழுவதும் பனி மூடியே காணப்படுகிறது.

இங்கு குளிர் காலம் மிகவும் குளிராகவும், கோடைகாலம் வெதுவெதுப்பாகவும் இருக்கிறது. இங்குள்ள உயிரினங்கள் இங்கு நிலவும் காலநிலைக்கு ஏற்ற தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.

தூந்திரா வாழிடமானது ஆர்டிக் தூந்திரா அல்பைன் தூந்திரா என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

 

ஆர்டிக் தூந்திரா

இது புவியின் வடஅரைக்கோளத்தில் வடதுருவத்தை ஒட்டி அமைந்துள்ள வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் காணப்படுகிறது.

அலகாஸ்கா, கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்கான்டிநேவியா உள்ளிட்ட நாடுகளில் ஆர்டிக் தூந்திராவானது அமைந்துள்ளது.

தென்துருவப்பகுதியான அன்டார்டிக்காவிலும் ஒரு சில இடங்களில் தூந்திராவானது காணப்படுகிறது.

 

தூந்திரா வரைபடம்
தூந்திரா வரைபடம்

 

காலநிலை

ஆர்டிக் தூந்திராவானது கோடைகாலம், குளிர்காலம் என இரு காலநிலைகளைக் கொண்டுள்ளது. இங்கு குளிர் காலம் பத்து மாதங்கள் வரை நிலவுகிறது.

குளிர்காலத்தில் இவ்விடத்தில் வெப்பநிலையானது சராசரியாக -28 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இவ்விடத்தில் குளிர்கால உச்சத்தின்போது சூரியன் தோன்றுவதில்லை. ஆதலால் இவ்விடம் துருவ இரவு என்றழைக்கப்படுகிறது.

இவ்விடத்தில் கோடைகாலம் 50 முதல் 60 நாட்கள் வரை மட்டுமே இருக்கும். கோடைகாலத்தில் இவ்விடத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

கோடைகாலத்தின் உச்சத்தில் இவ்விடத்தில் சூரியன் நாள் முழுவதும் மறைவதில்லை. இதனால் இவ்விடம் நள்ளிரவு சூரிய நிலம் என்றழைக்கப்படுகிறது.

 

கோடையிலும் பனியுடன் தோன்றும் தூந்திரா
கோடையிலும் பனியுடன் தோன்றும் தூந்திரா

 

இங்கு குளிர்ந்த காற்றானது மணிக்கு 48 முதல் 97 கி.மீ வேகத்தில் வீசுகிறது. தூந்திராவானது ஆண்டிற்கு 15 முதல் 24 செமீ மழைப்பொழிவினை மட்டும் கோடை காலத்தில் பெறுகிறது. இதனால் இது துருவப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.

தூந்திராவானது குறைந்த மழைப்பொழிவினைப் பெற்றாலும் இங்கு நிலவும் குளிர்ந்த சூழ்நிலையால் எப்போதும் இவ்விடம் பனி நிறைந்து காணப்படுகிறது.

 

புவியியல் கூறுகள்

தூந்திராவின் முக்கிய அடையாளம் அங்கு நிரந்தர உறைநிலையிலுள்ள மண் ஆகும். அதாவது மேற்புறமண்ணிற்கு கீழே சில அடி ஆழம் வரை மண்ணானது ஆண்டு முழுவதும் உறைந்த நிலையிலேயே இருக்கிறது. இந்த உறைநிலையிலுள்ள மண்ணே மரங்கள் இப்பகுதியில் வளர்வதை தடைசெய்கின்றது.

கோடைகாலத்தில் உறைநிலையிலுள்ள மண்ணின் மேற்பகுதியில் ஓரிரு அங்குல உயரம் மட்டும் உருகி குளங்கள், குட்டைகள், சதுப்புநிலங்கள் உள்ளிட்டவை உருவாகின்றன.

 

உயிரினங்கள்

ஆர்டிக் தூந்திராவில் 1700 விதமான தாவரங்கள், 400 விதமான பூக்கள் காணப்படுகின்றன. இங்கு உறைநிலையிலுள்ள மண் காணப்படுவதால் ஆழமான வேர்களைக் கொண்ட மரங்கள் காணப்படுவதில்லை. மரங்களின் வேர்கள் உறைமண்ணை துளைத்துச் செல்ல இயலாததே இதற்கு காரணமாகும்.

கோடைகாலத்தில் உறைமண்ணின் மேற்பகுதி உருகுவதால் குறைந்த ஆழமுடைய வேர்களைக் கொண்ட தாவரங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

இத்தாவரங்கள் குறைந்த கோடை காலத்தில் விரைவாக வளர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர்காலத்தில் பனிமூடிவிடுவதால் அவை உறைநிலையில் பாதுகாப்பாக இருக்கின்றன.

குற்றுச்செடிகள், புதர்கள், லைகன்கள், மொசைஸ், க்ரூஸ்டஸ், ஃபோலிஸ், லிச்சென் போன்ற தாவரங்கள் ஆர்டிக் தூந்திராவில் காணப்படுகின்றன.

இங்கு வீசும் குளிர்காற்றை தாவரங்கள் தாங்கி வளரும் பொருட்டு அவை குறைந்த உயரத்தில் நெருக்கி (அடர்த்தியாக) வளரும் இயல்பினைக் கொண்டுள்ளன.

இங்குள்ள விலங்குகளில் சில குளிர்காலத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபடுகின்றன. பல விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயருகின்றன.

கோடைகாலத்தில் உருவாகும் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏராளமான பூச்சியினங்கள் காணப்படுகின்றன. அவற்றை உண்பதற்காகவே பல பறவைகள் கோடையில் இவ்விடத்திற்கு வருகை தருகின்றன. இங்கு 48 விதமான விலங்குகள் காணப்படுகின்றன.

லெமிங்ஸ், வால்ஸ், ரெயீன்டீர், ஆர்டிக் முயல்கள், அணில்கள், மிஸ்கின் எருதுகள் போன்ற தாவரஉண்ணிகளும், ஆர்டிக் நரிகள், ஓநாய்கள், துருவக்கரடிகள் போன்ற ஊன்உண்ணிகளும் இங்கு காணப்படுகின்றன.

 

லெமிங்ஸ்
லெமிங்ஸ்

 

ரெயீன்டீர்
ரெயீன்டீர்

 

மிஸ்கின் எருதுகள்
மிஸ்கின் எருதுகள்

 

ரேவன், ஸ்நேபன்டிங், வல்லூறு, உள்ளான், லூன்கள், ஆலா, கடல்புறாக்கள் உள்ளிட்ட பறவையினங்கள், கொசுக்கள், விட்டில்பூச்சிகள், தட்டான்கள், வெட்டுகிளிகள், இருசிறகிப்பூச்சிகள், ஆர்டிக்பம்பிள்பூச்சி உள்ளிட்ட பூச்சியினங்கள் இங்கு காணப்படுகின்றன.

 

லூன்
லூன்

 

மேலும் இங்கு காட், சாலமன், தட்டை மீன்கள், ட்ராட் உள்ளிட்ட மீன்இனங்கள் காணப்படுகின்றன.

ட்ராட்
ட்ராட்

 

அல்பைன் தூந்திரா

உலகின் உள்ள உயரமான மலைப்பகுதிகளில் மரங்கள் வளர இயலாத இடங்களில் அல்பைன் தூந்திரா காணப்படுகிறது. இங்கு தாவரங்கள் வளரும் காலம் 180 நாட்கள் ஆகும்.

இரவு நேரங்களில் வெப்பநிலையானது உறைநிலைக்கு கீழே செல்கிறது. இங்கு காணப்படும் மண்ணானது நல்ல வடிதிறனைப் பெற்றுள்ளது.

இங்கு குறும்புற்கள், குற்றுச்செடிகள், குள்ளமரங்கள், சிறியஇலைபுதர்கள், ஹீத்துக்கள் போன்ற தாவரவகைகள் காணப்படுகின்றன.

 

அல்பைன் தூந்திரா
அல்பைன் தூந்திரா

 

இங்கு மலைஆடுகள், எல்க்  மான்கள், பிக்கா, மர்மோட் உள்ளிட்ட விலங்கினங்கள், கிரௌஸ் உள்ளிட்ட பறவையினங்கள் காணப்படுகின்றன. வண்ணத்துப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், ஸ்பிரிங்டெய்ல், வண்டுகள் உள்ளிட்ட பூச்சியினங்கள் அல்பைன் தூந்திராவில் காணப்படுகின்றன.

 

கிரௌஸ்
கிரௌஸ்

 

தூந்திராவின் முக்கியத்துவம்

தூந்திராவானது உலகின் கார்பன்-டை-ஆக்ஸைடு குளமாகக் கருதப்படுகிறது.

கார்பன்-டை-ஆக்ஸைடு குளம் என்பது ஒரு உயிர்சூழல் தான் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவினைவிட அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடினை எடுத்துக்கொள்வதைக் குறிக்கும்.

அதாவது கோடைகாலத்தில் இங்குள்ள தாவரங்கள் ஒளிர்ச்சேர்க்கைக்காக கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு தங்களுக்குத் தேவையான உணவினை தயார் செய்கின்றன.

பொதவாக உயிரினங்கள் இறந்து அழுகும்போது கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. ஆனால் தூந்திராவில் குளிரான கோடையும், உறைபனியான குளிர்காலம் நிகழ்வதால் இறந்த உயிரின உடல் எளிதில் அழுகுவதில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளாக இங்குள்ள உறைமண்ணில் அவை புதைந்துள்ளன. இவ்விதமாக கார்பன்-டை-ஆக்ஸைடானது தூந்திராவினால் அதிகளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவேதான் தூந்திராவானது உலகின் கார்பன்-டை-ஆக்ஸைடு குளம் என்று அழைக்கப்படுகிறது.

 

தூந்திராவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

மனிதனின் செயல்பாடுகளால் இன்றைக்கு உலகத்தின் வெப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த உலக வெப்பமயமாதல் மூலம் ஆண்டுதோறும் தூந்திராவின் உறைமண்ணானது அதிகளவு உருகிக் கொண்டிருக்கிறது.

இதனால் தூந்திராவில் உறைந்து புதைந்திருக்கும் உயிரினத் தொகுதிகள் அதிகளவு சிதைய ஆரம்பித்திருக்கின்றன. இதனால் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரித்து மேலும் சுற்றுசூழலை அதிகளவு பாதிப்படைச் செய்து கொண்டிருக்கின்றது.

தூந்திராவில் உள்ள எண்ணெய் வளத்தினை எடுப்பதற்கான முயற்சிகளால் அங்குள்ள உயிர்சூழல் பெரும் பாதிப்பினைச் சந்திக்கின்றது.

இங்கு மனிதன் தனது பாதுகாப்பிற்காக அதிகளவு பூச்சிகொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகிறான். இவை தூந்திராவிற்கு வருகை தரும் பறவையினங்களை பாதிப்பதோடு உணவுச்சங்கியிலும் பெரும் பாதிப்பினை உண்டாக்கி இங்குள்ள எல்லாநிலை உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

உலகின் ஏதோ ஒரிடத்தில் அமர்ந்து சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் நம் செயலானது பூமி முழுவதும் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

இறைவனின் அற்புதப்படைப்பான இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தம் என்று எண்ணாமல் எல்லாஉயிரினங்களும் வரும்காலங்களிலும் இப்புவியில் வசிக்க இன்று முதல் நமது செயல்பாடுகளை மாற்றி இயற்கையைக் காப்போம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.