பக்ரீத் பண்டிகை வரலாறு

பக்ரீத் பண்டிகை என்பது தியாகத் திருநாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித சமுதாயம் இறைவனை வணங்குவதற்காக புனிதர் இப்ராஹிம் அவர்களை இறைதூதராக இறைவன் தேர்ந்தெடுத்தான்.

அவர் மக்களிடம் இறைவன் ஒருவன் என்ற கொள்கையை எடுத்துரைத்தார்.

அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர் இறைவனிடம் குழந்தைக்காக பிரார்த்தனை செய்தார்.

அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு இறைவன் அவருக்கு ஓர் அற்புத ஆண் குழந்தையை (இஸ்மாயில்) அளித்தான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் இப்ராஹிம் நபி அவர்கள் இறைவனுக்கு முழுமையாக அடிபணிகிறாரா என்பதை சோதிப்பதற்காக, அவர் மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுமாறு அவர்களின் கனவில் இறைவன் கூறினார்.

இறைவனிற்கு கட்டுப்பட்டு தன் மகனிடம் உன்னை அறுத்து பலியிடுமாறு இறைவன் எனக்கு கட்டளையிட்டான் என்று கூறினார். இறைவன் கட்டளை என்றால் அதை நிறைவேற்றுங்கள் என்று இஸ்மாயில் கூறினார்.

இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு பலியிட சென்றார். தன் ஆசை மகனின் கழுத்தை அறுத்தார். ஆனால் கழுத்து அறுபடவில்லை.

இப்ராஹிம் நபி இறைவனின் சொல்லுக்கு முழுமையாக கட்டுப்பட்டார் என்பதை இறைவன் ஏற்றுக் கொண்டார்.

இஸ்மாயிலை அறுப்பதற்கு பதிலாக வானவர் ஜிப்ரில் மூலம் ஓர் ஆட்டை வானத்தில் இருந்து கொடுத்து அதை அறுத்து பலியிட செய்தார்.

அதன் நினைவாக பக்ரீத் பண்டிகை மூலம் ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் ஆட்டை அறுத்து ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி வருகின்றனர். இந்நிகழ்வுக்கு பெயரே ஹஜ்ஜீப் பெருநாள் (பக்ரீத் தியாகத் திருநாள்).

இறைவனின் கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன் என்று நாவளவில் சொல்வது மிகவும் எளிது, அதை செயல்படுத்துவது மிகவும் கடினம்.

தன் மகன் என்றும் பாராமல் இறைவன் சொன்ன கட்டளையை ஏற்று தன் மகனை உடனடியாக அறுக்கத் துணிந்த மாமனிதர் இப்ராஹிம் நபி.

இறைவனின் நண்பர் என்று அழைக்கப்படும் இப்ராஹிம் நபி அவர்களின் தியாக உணர்வு உலகம் உள்ள வரை இந்த பக்ரீத் பண்டிகை மூலம் நடை முறையில் இருக்கும்.

– ப.முஹம்மது ரபீக்