பச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி?

பச்சை மொச்சை மசாலா, பச்சை மொச்சை கிடைக்கும் சீசனில் மட்டும் செய்து உண்ணக்கூடிய அற்புதமான உணவு ஆகும்.

மார்கழி, தை, மாசி மாதங்களில் பச்சை மொச்சை அதிகளவு கிடைக்கும்.

கிராமங்களில் பச்சை மொச்சை மசாலாவுடன் பழைய சோற்றினை உண்பர்.

 

இனி பச்சை மொச்சை மசாலா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பச்சை மொச்சை – ¼ கிலோ கிராம்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

உப்பு – தேவையான அளவு

 

மசால் அரைக்க

தேங்காய் – ½ மூடி (சிறியது)

மல்லிப் பொடி – 1 ஸ்பூன்

மிளகாய் வத்தல் பொடி – ¾ ஸ்பூன்

சீரகப் பொடி – ½ ஸ்பூன்

மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

கடுகு – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

 

செய்முறை

முதலில் பச்சை மொச்சையை தோலுரித்து மொச்சை விதைகளை தனியே எடுக்கவும்.

பின் மொச்சை விதைகளை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

 

தோலுரித்த பச்சை மொச்சை
தோலுரித்த பச்சை மொச்சை

 

சின்ன வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

தாளிக்க வைத்துள்ள சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

தேங்காயை சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

துண்டுகளாக்கிய தேங்காய், மல்லிப் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் வத்தல் பொடி ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக மசால் தயார் செய்யவும்.

 

தயார் செய்த மசால்
தயார் செய்த மசால்

 

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி அதனுடன் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், உருவிய கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பிரசர் குக்கரில் அலசிய மொச்சை விதை, சின்ன வெங்காயம் மற்றும் தாளிதம் செய்த பொருட்கள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

சின்ன வெங்காயம் நிறம் மாறத் தொடங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை, கல்உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விரவி குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும்.

 

மொச்சை மற்றும் மசாலா கலவை
மொச்சை மற்றும் மசாலா கலவை

 

சரியான அளவில் தண்ணீர் சேர்த்ததும்
சரியான அளவில் தண்ணீர் சேர்த்ததும்

 

ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.

பின் அடுப்பிணை அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து மொச்சை கலவையை கிளறி விடவும்.

சுவையான பச்சை மொச்சை மசாலா தயார்.

இதனை எல்லா வகை சாதங்களுடன் சேர்த்து உண்ணலாம்.

 

மொச்சைக் மசாலா தயாரானதும்
மொச்சைக் மசாலா தயாரானதும்

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து மொச்சை மசாலா தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.