பிரபஞ்சத்தில் கார்பன்

பிரபஞ்சத்தில் கார்பன் சேர்மங்கள் விரவிக் காணப்படுகின்றன. பூமியின் நிலப்பரப்பிலும், நீர்நிலையிலும், காற்று மண்டலத்திலும் கார்பன் தனிம மற்றும் சேர்ம நிலையில் பரவிக் காணப்படுகிறது.

இது பற்றிய தகவல்களைத் தான் இக்கட்டுரையில் காண இருக்கிறோம்.

பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் உள்ளிட்ட விண்மீன்களிலும், பெரும்பாலான கோள்களின் காற்று மண்டலத்திலும் கார்பனின் சேர்மங்கள் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக நமது பூமிக்கு அருகாமையில் இருக்கும் கோள்களான வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் கார்பனானது கார்பன்-டை-ஆக்ஸைடாக இருக்கின்றது.

நமது கிரகத்திலிருந்து தொலைவில் இருக்கும் மிகப்பெரிய கிரகங்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூனிலும் கார்பன் (மீத்தேன் சேர்மமாக) இருக்கின்றது.

 

சரி, தற்போது பூமியில் கார்பன் எவ்வடிவில் இருக்கின்றது என்பது பற்றிப் பார்ப்போம்.

பூமியின் காற்று மண்டலத்தில் கார்பன், இயற்கையாகவே கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவாக இருக்கிறது. பூமியில் சுமார் 0.03 சதவீதமே இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு உயிர்கள் பூமியில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இயற்கையில் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவானது சூரிய ஒளியை காற்று மண்டலத்தில் நிலைநிறுத்துகிறது. இதனால் பூமியானது உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான சராசரி வெப்பநிலையை பெற்றிருக்கிறது.

கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவானது சூரிய ஒளியை நிலைநிறுத்தவில்லை எனில் பூமியின் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே சென்றுவிடும்.

 

 

கார்பனானது கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவாக நீர் சூழ்நிலை மண்டலத்திலும் இருக்கின்றது.

கார்பன்-டை-ஆக்ஸைடு சேர்மம் வாயு தானே? பின்னர் எப்படி இது நீர் சூழ்நிலையில் இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுதான். ஆனால் நீரில் கரையக்கூடிய வாயு. அதாவது நீரும், கார்பன்-டை-ஆக்ஸைடு வாயும் ஒன்றுடன் ஒன்று கலக்க கார்போனிக் அமிலம் உருவாகிறது.

கார்போனிக் அமிலமானது மிகமிக வலிமை குறைந்த அமிலம் ஆகும். அதாவது மீண்டும் கார்பன்-டை-ஆக்ஸைடையும், நீரினையும் தரவல்லது.

இயற்கையாகவே மழைநீரின் பிஎச் மதிப்பு 5.6 ஆக இருப்பதற்கும் இவ்வமிலமே காரணம். பிஎச் மதிப்பு என்பது அமில கார தன்மையை குறிக்கும் அளவீடாகும். கார்போனிக் அமிலத்தால் நமக்கு தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காற்று மண்டலத்தில் இருக்கும் இவ்வாயுவானது நீர்நிலைகளின் புறப்பரப்பில் கரைந்து பின்னர் பல விதங்களில் உருமாற்றம் அடைகிறது.

அதாவது நீரில் வாழும் தாவரங்கள் நீரில் இருக்கும் இவ்வாயுவை எடுத்துக்கொண்டு ஒளிர்ச்சேர்கை வினையை நிகழ்த்தி கார்போஹைட்ரேட்டை தயார் செய்கிறது.

சிலவகை உயிரினங்கள் தங்களை பாதுகாக்கும் ஓட்டின் மூலப்பொருளான கால்சியம் கார்பனேட்டை உண்டாக்கிக் கொள்ளவும் நீரில் இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடை பயன்படுத்திக் கொள்கின்றன.

 

 

தற்போது நிலப்பரப்பில் இருக்கும் கார்பனைப் பற்றிப் பார்ப்போம்.

பூமியின் நிலத்திற்கு அடியில் கார்பன் நிலக்கரி வடிவில் நமக்கு கிடைக்கிறது. நிலக்கரி என்பது கார்பனின் தனிம நிலையாகும்.

குறிப்பாக ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் வடஅமெரிக்கா பகுதிகளில் பெருமளவு நிலக்கரி படிமங்கள் இருக்கின்றன.

இது தவிர கார்பனானது தனிம நிலையில் கிராஃபைட், வைரம் போன்றவற்றின் வடிவில் நமக்கு கிடைக்கிறது. சீனா, இந்தியா, வடகொரியா, மெக்ஸிகோ, பிரேசில், செக் குடியரசு மற்றும் உக்ரைன் முதலிய நாடுகளில் கிராஃபைட் அதிகளவில் கிடைக்கிறது.

ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வைரம் கிடைக்கிறது.

மேலும் பாறைகளிலும் கார்பனானது கால்சியம் கார்பனேட் மற்றும் மெக்னீசியம் கார்பனேட்டாக இருக்கின்றது.

தாவரங்கள், விலங்குகள் முதலிய எல்லா உயிரினங்களிலும் கார்பன் பலவகையான சேர்மமாக இருக்கின்றது.

குறிப்பாக ஆற்றல் மற்றும் வடிவத்தை தரும் முக்கிய மூலக்கூறுகளான கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள் மற்றும் புரதங்களின் முக்கிய ஆக்கப்பொருளாக கார்பன் இருக்கிறது.

உதாரணமாக மரக்கட்டை, செல்லுலோஸ் (எண்ணற்ற குளுக்கோஸ் மூலக்கூறுகள் ஆன பலபடி) எனப்படும் கார்போஹைட்ரேட்டால் ஆனது.

நிறமூட்டியாகவும், சுவையூட்டியாகவும் கார்பன் சேர்மங்கள் இருக்கின்றன. உதாரணமாக தக்காளி மற்றும் தாவர இலைகளின் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திற்கு முறையே பச்சையம் மற்றும் கரோடினாய்டு நிறமியே காரணம். இவைகள் எல்லாம் கார்பனின் சேர்மங்களாகும்.

இனிப்பு மற்றும் புளிப்பு சுவைக்குக் காரணமான குளுக்கோஸ் மற்றும் சிட்ரிக் அமிலமும் கார்பனின் சேர்மங்களாகும்.

உயிரினத்தின் அடிப்படை அலகான செல்லின் புறப்பகுதியானது லிப்பிடு எனப்படும் கார்பனின் சேர்மத்தால் உண்டாக்கப்பட்டு இருக்கின்றது.

இரத்தம், தசை, தோல், முடி முதலியவற்றிலும் கார்பனின் சேர்மங்கள் காணப்படுகின்றன.

உயிரினத்தின் மரபுப் பொருளான ரிபோநியூக்ளிக் அமிலம் மற்றும் டிஆக்ஸி நியூக்ளிக் அமிலம் ஆகியனவும் கார்பனின் சேர்மங்களாகும்.

ஆக காற்றில், நீரில் நிலத்தில் தாவர மற்றும் விலங்குகளின் உடலில் மனிதர்களாகிய நம்மில் மற்றும் பிரபஞ்சத்தில் கார்பன் சேர்மங்கள் இருக்கின்றன.

– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை
கன்செப்ஷன் ப‌ல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com
கைபேசி: +91 9941633807

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.