வாழிடம் பற்றி அறிவோம்

வாழிடம் என்பது விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வளர்ந்து வாழும் இடம் ஆகும்.

வாழிடம் என்ற சொல்லானது ஒரே உயிரினக் கூட்டமோ அல்லது பல்வேறு உயிரினக் கூட்டங்களோ வாழ்ந்து பெருகும் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கிறது.

வாழிடமானது கடல் போன்று பெரியது முதல் இலை போன்று சிறியது வரை இருக்கிறது. உயிரினங்கள் உயிர் வாழ வெவ்வேறு வாழிட வகைகள் தேவைப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக திமிங்கலம் வாழ கடல் தேவை. அதே நேரத்தில் தங்க மீன் வாழ நன்னீர் வாழிடம் தேவை.

சில உயிரினங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வாழிடங்களில் வாழ்கின்றன. பல உயிரினங்கள் ஒரே வாழிடத்தில் மட்டும் வாழ்கின்றன.

ஒவ்வொரு உயிரினமும் வளர்ந்து வாழ்வதற்கு குறிப்பிட்ட வாழ்வாதாரத் தேவைகள் தேவைப்படுகின்றன.

உயிரினங்களின் வாழ்வாதாரத் தேவைகளான மண், ஈரப்பதம், வெப்பநிலை, ஒளியின் அளவு, காலநிலை, உணவு ஆகியவற்றை ஒவ்வொரு வாழிடமும் பெற்றிருக்கின்றது.

உயிரினங்கள் தங்கள் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாழிடங்களில் வசிக்கின்றன.

 

வாழிடங்களின் வகைகள்

வாழிடமானது பொதுவாக நிலம், நீர் என்னும் இருபெரும் பிரிவுகளை உடையது.

நிலவாழிடமானது காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள், மலைகள், ஈரநிலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நீர்வாழிடம் நன்னீர் வாழிடம், கடல் வாழிடம் எனப் பிரிக்கப்படுகிறது.

நன்னீர் வாழிடமானது ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கடல்வாழிடம் உப்பு சதுப்பு நிலங்கள், கடற்கரை, திறந்த கடல், கடல்படுகை, ஆழமான நீர் முதலியவைகளைக் கொண்டுள்ளது.

 

நிலவாழிடம்

காடு
காடு

 

நிலவாழிடம் அதிக மாற்றங்களைக் கொண்டது. இவ்வாழிடத்தின் உயரம் கடல் மட்டத்திற்கு கீழே உள்ள பள்ளத்தாக்கில் தொடங்கி 28,000 அடி உயரம் வரை உள்ள மலைஉச்சி வரை உள்ளது.

இவ்வாழ்விடத்தில்; குறைந்த வெப்பநிலை -60 டிகிரி செல்சியஸாகவும், அதிக வெப்பநிலை 60 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது. எனவே நிலவாழிடத்தில் வெப்பநிலையானது கணிசமான அளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

இவ்வாழ்விடத்தில் உள்ள மண், மணல் மற்றும் பாறைகள் அதிகளவு இயற்பியல் மற்றும் வேதியியல் வேறுபாடுகளைப் பெற்றிருக்கின்றன.

இங்கு நிலவும் காலநிலை, மழைப்பொழிவு, ஈரப்பதத்தின் அளவு ஆகியவையும் பெரும் மாறுதல்களைக் கொண்டுள்ளன.

 

நீர்வாழிடம்

கடல்
கடல்

 

நீர் வாழிடம் நன்னீர் வாழிடம், கடல் வாழிடம் என இரு பிரிவுகளை உடையது. இதில் கடல் வாழிடம் அளவில் பெரியது.

 

இயற்கை வாழிடத்தின் முக்கியத்துவம்

இயற்கை வாழிடமானது எண்ணற்ற உயிரிகளுக்கு புகலிடமாக உள்ளது. ஒரு சில வாழிடங்கள் குறிப்பிட்ட உயிரினங்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வசிப்பிடத்தில் வளரும் உயிரிகளின் துணை இல்லாமல் சில மருந்துகளைத் தயாரிக்க இயலாது. எனவே வாழிடமானது மருந்துப்பொருள்களின் பெட்டகமாகத் திகழ்கிறது.

காட்டு வாழிடமானது பூமியின் நுரையீரலாகச் செயல்படுகிறது. இது கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி உயிரினங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது.

ஒரு குறிப்பிட்ட வாழிடமானது அதில் வாழும் உயிரினங்களுக்கு மட்டுமின்றி வேறு வாழிடங்களில் வாழும் உயிர்களுக்கும் உணவினை வழங்குகிறது.

 

இயற்கை வாழிடத்தில் உண்டாகும் பாதிப்புகள்

பூமியில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட உயிரினங்கள் காடுகளில் வாழ்கின்றன.

200 ஆண்டுகளுக்கு முன்பு 4 2.5 பில்லியன் ஏக்கராக இருந்த காடுகளின் பரப்பு தற்போது 2.5 பில்லியன் ஏக்கராக குறைந்துள்ளது.

இதனால் காட்டு வாழிடம் பாதிக்கப்பட்டதோடு அதிலுள்ள உயிரினங்களும் அழிந்து விட்டன. இது பல்லுயிர் தன்மையில் வேறுபாட்டினை உண்டாக்கிவிட்டது.

காட்டு வாழிடங்கள் பாதிப்பட்டதற்கு காட்டினை அழித்தலே காரணமாகும்.

ஈரநிலங்களின் பரப்பு இன்றைக்கு பெரிதும் சுருக்கப்பட்டுள்ளது. ஈரநிலங்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டு மனிதர்களின் வசிப்பிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

ஈரநிலங்கள் நிலத்தடி நீராதாரத்தை பாதுகாப்பதோடு நல்ல நீர் கிடைக்கும் வழிவகை செய்கிறது. எனவே ஈரநிலத்தை அழிக்கும்போது அதில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மக்கள் நலமும் பாதிக்கப்படுகிறது.

மலைகளில் உள்ள கனிமங்கள் மற்றும் அவற்றின் இயற்கை வளத்திற்காக சுரட்டப்படுகின்றன. இதனால் மலைவாழிடம் பாதிப்படைகிறது.

நன்னீர் வாழிடங்கள் இன்றைக்கு திட மற்றும் திரவ மாசுபடுத்திகளாலும், அதிக மீன்பிடித்தலாலும் பாதிப்படைந்துள்ளன.

கடல் வாழிமானது நிலம் மற்றும் நன்னீர் நிலைகளிலிருந்து வரும் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றால் பெரும் பாதிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தீவுப்பகுதிகள் புவிவெப்பமயமாதலின் காரணமாக பரப்பளவில் சுருங்கியும், சில இடங்களில் காணாமலும் போய்க் கொண்டிருக்கின்றன.

இயற்கை வாழிடங்கள் பாதிப்படைய மனிதனின் செயல்பாடுகள் பெரும் பங்க வகிக்கின்றன. மனிதன் தனது முன்னேற்றத்திற்காக இயற்கை வாழிடத்தை அதிகஅளவு இன்றைக்கு பாதிப்படையச் செய்துள்ளான்.

எனவே நாம் நம்முடைய சந்ததியினரைக் கருத்தில் கொண்டும், உயிர் பல்லுயிர் தன்மையைக் காக்கும் பொருட்டும் இயற்கை வாழிடத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் செயலாற்ற வேண்டும்.

இயற்கை வாழிடங்களையும், அதில் உள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்.

– வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.