காரட் பொரியல் செய்வது எப்படி?

Carrot Poriyal

தேவையான பொருட்கள்

காரட் : ½ கிலோ
சிறிய வெங்காயம் : 4
பச்சை மிளகாய் : 3
தேங்காய் துருவல் : ¼ மூடி
கடுகு : 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை : 1 கொத்து
எண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு

 

செய்முறை

முதலில் காரட்டை தோல் நீக்கி, காரட் துருவியால் துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சிறிது நேரத்தில் வதக்கவும். பிறகு காரட் துருவல் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து இவற்றை 7 நிமிடம் வேக விடவும். உப்பு சேர்க்கவும்.

பொரியலை அடுப்பில் இருந்து இறக்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கி வைக்கவும். சுவையான காரட் பொரியல் தயார். சிறிது நேரத்திற்கு பின் பரிமாறவும்.

 

மைதா கேக் செய்வது எப்படி?

Maida Cake

தேவையான பொருட்கள்

மைதா மாவு : 500 கிராம்
பால் : 200 மி.லி
முட்டை : 4
தேங்காய் எண்ணெய் : 1 லிட்டர்
டால்டா : 100 கிராம்
சீனி : 600 கிராம்
சோடா உப்பு : 2 டீஸ்பூன்

 

செய்முறை

சீனியையும், முட்டையும் நன்கு அடித்து கலக்கவும். அத்துடன் சோடாஉப்பு, டால்டா, பால் சேர்த்து கடைந்து கொள்ளவும். பின் மைதா சேர்த்து பிசைந்து சற்று கனமாக விரித்து டைமண்ட் வடிவில் கத்தியினால் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான மைதா கேக் தயார்.

(இதில் இனிப்பு பதிலாக காரம் சேர்த்து தயாரிக்கலாம். இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.)

 

கத்திரிக்காய் மசால் செய்வது எப்படி?

Brinjal Masala

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் : ½ கிலோ
வெங்காயம் : 100 கிராம்
தக்காளி : 100 கிராம்
மிளகாய் பொடி : 1 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி : 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் : 1 டீஸ்பூன்
பட்டை, சோம்பு,
இலவங்க இலை : தலா 1 டீஸ்பூன்
எண்ணெய் : 50 கிராம்
உப்பு : தேவையான அளவு

 

செய்முறை

கத்திரிக்காயை நான்காக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, இலவங்கம் தாளித்து அதில் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்துக் கிளறவும்.

நன்கு சுருண்டு வந்ததும் மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் தூள், கத்திரிக்காய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். பிறகு கால் டம்ளர் வெந்நீர் ஊற்றி வேக விடவும். தண்ணீர் நன்றாக வற்றியதும் அடுப்பிலிருந்து எடுக்கவும்.

 

கார சட்னி செய்வது எப்படி?

Kara Chutney

தேவையான பொருட்கள்

உரித்த வெங்காயம் : 4
வத்தல் : தேவையான அளவு
நல்லெண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு

 

செய்முறை

வெங்காயம், வற்றல், உப்பு சேர்த்து அரைத்து இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து எண்ணெயில் ஊற்றி நன்றாகக் கொதித்து கெட்டியாக வந்தவுடன் எண்ணெய்ப் பிரியவும் இறக்கவும்.சுவையான கார சட்னி தயார்.

 

சுசியம் செய்வது எப்படி?

Susiyam

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு : 500 மி.லி.
ஏலக்காய் : 5
உளுந்தம்பருப்பு : 125 மி.லி.
பச்சரிசி : 500 மி.லி. (மேல் மாவிற்கு)
வெல்லம் : 100 கிராம்
தேங்காய் : 1

 

செய்முறை

கடலைப்பருப்பை அரை வேக்காட்டில் அவித்து தண்ணீரை வடிகட்டி, வெல்லம், ஏலக்காய் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக ஆட்டி எடுத்து, தேங்காய்பூவையும் போட்டுக் கலந்து உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.

பின் பச்சரிசியையும், உளுந்து பருப்பையும் ஒன்றாக நனைய வைத்து அரை உப்புப் போட்டு பஜ்ஜிக்கு அரைப்பது போல் மாவாக ஆட்டி வைக்க வேண்டும்.

கடலைப்பருப்பு உருண்டைகளை மாவில் முக்கி தேங்காய் எண்ணெயை வாணலியில் காய வைத்து சுடவும்.சுவையான சுசியம் தயார்.