மைசூர் பாகு செய்வது எப்படி?

Mysore Pak

தேவையான பொருட்கள்

கடலை மாவு : 250 கிராம்

சோடா உப்பு : 1 சிட்டிகை

சீனி : 750 கிராம்

டால்டா (அ) நெய் : 750 கிராம்

 

செய்முறை

கனத்த பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் கடலைமாவை ஒரு கையால் தூவிக் கொண்டே கட்டி சேராமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

மற்றொரு அடுப்பில் நெய்யை இளக வைத்து இடையிடையே கலவையில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். நெய் கக்கி பொங்கி வரும்போது சிறிது சோடா உப்பு போட்டு கிளறி நெய் தடவிய தாம்பளத்தில் கொட்டி கரண்டியால் தேய்த்து விட்டால் மைசூர் பாகு ரெடியாகி விடும். ஆறுவதற்கு முன் வில்லைகள் போடவும்.

 

பூந்தி செய்வது எப்படி?

Sweet Boondi

தேவையான பொருட்கள்

கடலை மாவு : 250 கிராம்

நெய் : சிறிதளவு

கேசரிபவுடர் : சிறிதளவு

சீனி : ½ கிலோ

ரீபைண்ட் ஆயில் தேவையான அளவு

 

செய்முறை

சீனியை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். கடலை மாவை தண்ணீர் சேர்த்து (கேசரி பவுடர் சிறிது சேர்த்துக் கொள்ளவும்) தோசைமாவு போல் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தேய்த்து எண்ணெயில் போடவும். எண்ணெயில் விழுந்த மாவு அதிகம் சிவக்காமல் வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போட்டு சிறிது நேரத்தில் எடுத்து ஒரு பாயில் போடவும். சுவையான பூந்தி ரெடி.

 

இனிப்பு பூரி செய்வது எப்படி?

Sweet Puri

தேவையான பொருட்கள்

மைதா மாவு : 200 கிராம்

அரிசி மாவு : 25 கிராம்

சோடா உப்பு : 1 சிட்டிகை

கேசரிப்பவுடர் : ½ தேக்கரண்டி

தயிர் : 200 மி.லி.

சீனி : 225 கிராம்

சுடுவதற்கு டால்டா அல்லது எண்ணெய்

 

செய்முறை

இரண்டு மாவுகளையும் கலந்து தயிர் சேர்த்த பணியார மாவு போல் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். சீனியில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கேசரி பவுடர் சேர்த்து, பாகு கம்பிப் பதமாக தயாரித்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி ஊற்றி வெந்ததும் எடுத்துச் சீனிப்பாகில் போட்டு பாகு குடித்ததும் எடுத்து வைக்கவும். சுவையான இனிப்பு பூரி ரெடி!

 

வெஜிடபிள் கோதுமை ரொட்டி செய்வது எப்படி?

Veg-Roti

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு : 250 கிராம்

காரட் : 50 கிராம்

கறிவேப்பிலை : சிறிதளவு

மல்லிதழை : சிறிதளவு

பீட்ருட் : 50 கிராம்

சின்ன வெங்காயம் : 100 கிராம்

உப்பு, கறிமசால் : சிறிதளவு

மிளகாய்தூள் : தேவைக்கு ஏற்ப

தண்ணீர் : தேவைக்கு ஏற்ப

 

செய்முறை

காரட், பீட்ருட் இரண்டையும் துறுவி வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில் துறுவிய காரட், பீட்ருட், உப்பு, மிளகாய்தூள், கறிமசால், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் போட்டு சப்பாத்தி மாவு போல் நைசாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

30 நிமிடம் கழித்து ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுடவும். சுவையான வெஜிடபிள் கோதுமை ரொட்டி ரெடி!

 

சமோசா செய்வது எப்படி?

Samosa

தேவையான பொருட்கள்

மைதா மாவு : 125 கிராம்

வற்றல்பொடி : 1½ தேக்கரண்டி

உருளை கிழங்கு : ½ கிலோ

மஞ்சள்பொடி : ¼ தேக்கரண்டி

பச்சைபட்டாணி : 100 கிராம்

பெரிய வெங்காயம் : ¼ கிலோ

மல்லிஇலை : 25 கிராம்

பச்சைமிளகாய் : 2

கடலை எண்ணெய் : ¼ கிலோ

இஞ்சி : சிறுதுண்டு

சீரகம் : ½ தேக்கரண்டி

கரம் மசாலா : 1 தேக்கரண்டி

முந்திரிபருப்பு : 1 தேக்கரண்டி

உலர்ந்ததிராட்சை : 1 தேக்கரண்டி

உப்பு : தேவையானது

கான் ப்ளார் மாவு : 3 தேக்கரண்டி

 

தாளிக்க‌

சீரகம் : ½ தேக்கரண்டி

கடுகு : ½ தேக்கரண்டி

கருவேப்பிலை:  1 கொத்து

 

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.  கான் ப்ளார் மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

வேக வைத்து மசித்த‌ உருளைக்கிழங்குடன்  பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, வற்றல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான உப்பு,  கரம் மசாலா வேக வைத்த பச்சை பட்டாணி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, மல்லி ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து பின் கலவையை நன்கு வதக்கி பின்னர் ஆறவைக்கவும்.

பிறகு மைதா மாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி தோசைக் கல்லில் போட்டு சப்பாத்தியின் இருபுறமும் லேசாக வேக வைத்து  ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் கான் ப்ளார் மாவுக் கரைசலைத் தண்ணீர் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு எண்ணெயில் போட்டு பொன் நிறமாகப் பொரித்து எடுத்துக்கொள்ளவும். சுவையான சமோசா ரெடி!