ஒருசமயம் பகவான் சேத வனத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த காலத்தில் பிரசேன ஜித் என்ற அரசனது இராச்சியத்தில் அங்குளிமால் என்று ஒரு திருடன் இருந்தான்.
அவன் மிகவும் கொடியவன்; எதற்கும் துணிந்தவன்; அடிதடிக்கும், கொலைக்கும் அஞ்சாதவன். அவன் நெஞ்சில் சிறிதும் இரக்கம் இருந்ததில்லை. அவன் எத்தனையோ கிராமங்களைச் சூறையாடியும் மக்களைக் கொன்றும் பாழாக்கியிருக்கிறான்.
ஒருநாள் பகவான், அங்குளிமால் இருந்து வந்த வழியே போய்க் கொண்டிருந்தார்.
அங்கே இடையர்களும் குடியானவர்களும் பகவானை அணுகி, “சுவாமி, தாங்கள் இந்த வழியே போகவேண்டாம். அங்குளிமால் என்ற திருடன் இருக்கும் இடமாகும் இது. அவன் மனிதர்களைக் கொன்று கொன்று அவர்கள் விரல்களை மாலையாக கோர்த்து அணிகிறான். இருபது, முப்பது, ஐம்பது, அறுபது பேர் சேர்ந்து வந்தாலும் அவனிடமிருந்து தப்பி போக முடிவதில்லை. அவன் எல்லோரையும் கொன்றுவிடுகிறான்” என்று சொன்னார்கள்.
ஆனால் பகவான் வாய்திறவாது நடந்து கொண்டேயிருந்தார்.
அப்போது அந்த இடையர்கள் முதலியோர் மீண்டும் வந்து அவரை தடுத்தார்கள். பிறகும் அவர் நடையை நிறுத்தவில்லை. மூன்றாம் முறை வந்து தடுத்து மன்றாடியும் அவர் கேளாது போய்க் கொண்டிருந்தார்.
அங்குளிமாலே வெகு தொலைவில் இருந்து பகவான் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான்.
பார்த்தவன் ‘இது என்ன ஆச்சரியம்! 40, 50 பேர் சேர்ந்து கூட்டமாய் வருகையிலும் என்னிடமிருந்து எவரும் தப்ப முடிவதில்லையே! இந்த சிரமணன் தனியே வந்து கொண்டு இருக்கிறானே. இவன் என்னை ஒரு மனிதனாகவே நினைக்கவில்லை போலும். இவனைக் கொல்லாமல் விடக்கூடாது’ என்று எண்ணினான்.
உடனே கேடயம், வாள், வில், அம்பு ஆகியவைகளுடன் பகவானை நோக்கி விரைந்து வந்தான். எவ்வளவு ஓடியும் விசையாக நடந்து செல்லும் பகவானை அவனால் பிடிக்க முடியவில்லை.
அப்போது அவன், ‘இது என்ன ஆச்சரியம்! ஓடும் யானையையும், குதிரையும், தேரையும் கூட சுலபமாய்ப் பிடித்துவிடும் என்னால் சாதாரண நடையில் செல்லும் இந்த சிரமணனைப் பிடிக்க முடிய வில்லையே!’ என்று எண்ணியவனாய், “ஏ சிரமணா, நில்லு! மேலே செல்லாதே” என்று உரக்கக் கூவினான்.
இதைக் கேட்ட பகவான், “அங்குளிமால், நான் நிற்கிறேன். நீயும் நில்லு” என்றார்.
அவன், “ஏ சிரமணா, நீ நடந்து கொண்டே நிற்பதாக சொல்லுகிறாயே, அதோடு இராது என்னையும் நிற்கச் சொல்கிறாய். நடக்கும் நீ நிற்பவனானால் என்னை மட்டும் ஏன் நிற்கவில்லை என்கிறாய்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “அங்குளிமால், நான் எந்த உயிரையும் வதைப்பதில்லை என்ற விரதம் பூண்டிருப்பதால் என்றும் நிலைத்தவனே, நிற்பவனே! நீயோ சிறிதும் அடக்கமில்லாத மனிதன். இதனால் நீ நிலைக்காது இருக்கிறாய்” என்றார்.
பகவானின் வார்த்தைகள் அங்குளிமாலின் மனதை ஆட்கொண்டு விட்டன. தான் நெடுநாளாகச் செய்து வந்த பாவங்களை விட்டொழிப்பதென்று முடிவு செய்தான்.
அவன் தன் வாளையும் பிற ஆயுதங்களையும் ஆங்காங்கு குகையிலும், நீர் அருவியிலும், ஆற்றிலும் விட்டெறிந்து விட்டு பகவான் அடிகளில் வந்து விழுந்து தனக்கு துறவு அளிக்கும்படி வேண்டினான்.
பகவான் “எழுந்து வா, பிஷு” என்று சொல்லி அவனுக்கு தீட்சை அளித்தார்.
அங்குளிமால் துவர் ஆடை அணிந்து கையில் கப்பறை ஏந்தி சிராவத்தியின் தெருக்களில் பிச்சை வாங்கப் போனான்.
இவன் யாரென்று எல்லோரும் புரிந்து கொண்டார்கள். இதனால் ஒருவன் அவன் மீது கல்லெறிந்தான்; இன்னொருவன் கொம்பு கொண்டு அவன் தலையிலும் உடலிலும் அடித்தான்; இன்னொருவன் கருங்கல்லை அவன் மீது வீசினான்.
இதனால் அவன் உடலெல்லாம் காயம் ஆகி ரத்தம் வழிந்தது; தலை உடைந்துவிட்டது; கப்பறை துண்டு துண்டாகி விட்டது; ஆடையெல்லாம் கிழிந்து போயிற்று. இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு அவன் பகவானிடம் சென்றான்.
அவனைத் தொலைவிலிருந்தே பார்த்த பகவான், “ஏ பிராம்மணா, நீயே ஒத்துக்கொண்டு விட்டாய். நீ செய்த எந்த பாபங்கள் பல்லாயிரமாண்டுகள் நரகத்தில் இருந்தாலும் தொலையாதவை. அவைகளை இந்தப் பிறவியிலேயே போக்கிக் கொள்கிறாய்” என்றார்.
அங்குளிமால் தனிமையில் தியானத்தில் அமர்ந்து எல்லையில்லா அமைதியையும் இன்பமும் எய்தினான்.
அவன், “ததாகதர் மூலமாய் எந்த தண்டனையும் ஆயுதங்களின் உதவியும் இல்லாமல் அடக்கப்பட்டு விட்டேன். முன்பு இம்சையையே தொழிலாகக் கொண்டிருந்தவன் இப்போது அஹிம்சை வழிக்குத் திரும்பி விட்டேன். புத்தர் பெருமான் எனக்கு அடைக்கலம் அளித்து, என் பாவங்களைப் போக்கி, என்னைக் கடைத் தேற்றி விட்டார்” என்றான்.
(மஜ்ஜிம நிகாயம், அங்குளிமால் ஸுத்தந்தம், 2-4-6)
ஞாழல், புதுக்கோட்டை
(இந்த “அங்குளிமால்” என்னும் கதை கிருஷ்ண தத்தபட் எழுதிய “பௌத்தம்” என்னும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
மறுமொழி இடவும்