அசோலா

அசோலா என்னும் அற்புதப் பாசி

அசோலா என்னும் நீரில் வாழும் பாசியானது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கிறது.

வேளாண்மையில் நெற்பயிருக்கு உரமாகவும், களைகளைக் கட்டுபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் கால்நடைகளுக்கு விலை குறைந்த மற்றும் சத்து மிகுந்த மாற்றுத் தீவனமாகவும் பயன்படுகிறது.

இது பெரும்பாலும் மூக்குத்திச் செடி, கம்மல்பாசி என்று அழைக்கப்படுகிறது. இது வருடம் முழுவதும் இயல்பாக வளரக்கூடியது. அசோலா பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 

அசோலா என்றால் என்ன?

அலோலா என்பது பெரணி வகை நீரில் மிதக்கும் தாவரம் ஆகும். இது மிகச்சிறிய இலைகளையும், மெல்லிய வேர்களையும் கொண்டது. இவை பெரும்பாலும் நல்ல பச்சை நிறத்திலும், அபூர்வமாக லேசான பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

அசோலாவின் இலைகள் முக்கோண வடிவத்திலிருந்து பல கோண வடிவத்தில் காணப்படுகிறது. இவற்றின் இலைகள் 1 செமீ முதல் 2.5 செமீ வரை விட்டமுடையவை. இதன் வேர்கள் 2 செமீ முதல் 10 செமீ வரை நீளமுடையவை.

இத்தாவரம் சிறு இலைகளுடன் கூடிய மிதக்கும் தண்டினைப் பெற்றுள்ளது. தண்டின் இரண்டு பக்கங்களிலும் இலைகள் மாற்று வரிசையில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும்.

இலையின் மேற்புறம் தழைச்சத்தை சேகரித்து பசுமையாக காணப்படுகிறது. கீழ்புறம் பச்சையம் அற்று நீரில் அமிழ்ந்து காணப்படுகிறது.

இத்தாவர இலையின் உட்புறத்தில் தழைச்சத்தை கிரகிக்கும் அனாபினா அசோலா எனும் நீலப்பச்சைப்பாசி காணப்படுகிறது. இது தழைச்சத்தை கிரகித்து அசோலாவிற்கு கொடுக்கிறது.

 

அசோலாவின் வளரியல்பு

இத்தாவரம் அதிக அலைகள் இல்லாத அதிக நீரோட்ட வேகம் இல்லாத அமைதியான நீர்நிலைகளில் வளரக்கூடியவை. குளங்கள், சிறுஓடைகள், நெல் வயல்களில் வளரக்கூடியது. இது மிதக்கும் பண்பினைப் பெற்றிருந்தாலும் வயலில் சேற்றுடன் கலந்த மண்பரப்பிலும் வளரும் தன்மையுடையது.

 

அசோலாவின் வகைகள்

அசோலா பின்னேட்டா, அசோலா மெக்சிகானா, அசோலா பிலிக்குலாய்ட்ஸ், அசோலா கரோலினியானா, அசோலா மைக்ரோபில்லா, அசோலா நைலோட்டிகா ஆகியவை அசோலாவின் வகைகள் ஆகும்.

தமிழ்நாட்டில் அசோலா பின்னேட்டா பரவலாகக் காணப்படுகிறது. இந்த ரகம் அதிக தழைச்சத்தைக் கிரகித்து அதிக வெப்பநிலையைத் தாங்கி நன்கு வளரும் இயல்புடையது. அசோலா பிலிக்குலாய்ட்ஸ் எனும் ரகம் 10-15 செமீ ஆழமாக வேர்விட்டு மண்ணில் சத்துக்களை உறிஞ்சிக் கொடுக்கும்.

 

அசோலாவில் உள்ள சத்துக்கள்

இத்தாவரத்தில் 25-35 சதவீதம் புரதச்சத்து, 10-12 சதவீதம் தாதுஉப்புகளையும், 7-10 சதவீதம் அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட், பீட்டா கரோட்டீன்கள், வைட்டமின்கள், எண்ணெய்சத்துக்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

 

அசோலா வளர்ப்பிற்குத் தேவையான சூழ்நிலை

பொதுவாக அசோலாவானது 25-50 சதவீத வெளிச்சத்தில் நன்கு வளரும். மிகஅதிகமான அல்லது மிகக்குறைவான சூரிய ஒளி இத்தாவர வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே போதுமான வெளிச்சம் உள்ள நிழல் பகுதி இத்தாவரத்திற்கு ஏற்றது.

இத்தாவர வளர்ச்சிக்கு தண்ணீர் முக்கியமானது. சுமார் 4 அங்குல உயரத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டம் குறைவாக இருந்து இத்தாவர வேர் தரையைத் தொட்டால் இதன் வளர்ச்சி பாதிப்படையும்.

20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இத்தாவரம் நன்கு செழித்து வளரும்.

காற்றின் ஈரப்பதம் 85-90 சதவீதம் இருக்க வேண்டும். ஈரப்பதம் 60 சதவீதத்திற்கு கீழே செல்லும்போது இத்தாவரம் காய்ந்து விடும்.
தண்ணீரின் கார அமிலத் தன்மை 5-7 பி.எச் அளவிற்கு இருக்க வேண்டும்.

 

அசோலா வளர்ப்பு முறை

இத்தாவரத்தை நாமே பாத்திகள் அமைத்து வளர்க்க முடியும். அதற்கு கீழ்கண்ட முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

அசோலா வளர்ப்பு
அசோலா வளர்ப்பு

 

இடத்தினை தயார் செய்தல்

மரநிழல் பகுதியாக இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும். அல்லது அப்பகுதியில் செயற்கை முறையில் நிழலினை உருவாக்க வேண்டும். அதாவது நேரடி சூரியஒளி ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

இடத்தின் அளவு 6’X 3’ இருக்க வேண்டும்.

புல், பூண்டுகள், மர வேர்கள் இல்லாமல் இடத்தினை சுத்தம் செய்ய வேண்டும்.

இடம் குண்டும் குழியாக இல்லாமல் சமதளமாக இருக்குமாறு செய்ய வேண்டும்.

 

செய்முறை

தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அரைஅடி பள்ளம் தோண்ட வேண்டும். குழிமீது சில்பாலின் சீட் ஒன்றைப்பரப்பி விளிம்புகளைக் கரைமீது படியும்படி வைத்து மேலே செங்கற்களை அடுக்கி தாளானது பற‌க்காமல் இருக்குமாறு செய்ய வேண்டும். இப்பொழுது தண்ணீர் வடியாத தொட்டி கிடைத்து விட்டது.

இதனுள் நான்கு அங்குல உயரத்திற்கு தண்ணீர் நிரப்ப வேண்டும். இதனுள் முப்பது கிலோ தோட்டத்து மேல் மண், ஐந்து கிலோ உலர்ந்த நாட்டு பசுஞ்சாணம், 500 கிராம் பாறைத்தூள் அல்லது ஆழ்குழாய் கிணறு தோண்டும்போது வெளிவரும் பாறைத்தூள், 100 கிராம் அசோலாவை இட்டுஅன்றாடம் தண்ணீர் குறையாமல் வளர்ப்பு விலங்குகள் சிதைக்காமலும் பார்த்தக் கொள்ள வேண்டும்.

ஒரு வாரம் செல்லும்போது பாத்தி முழுவதும் அசோலாவின் இனப்பெருக்கம் நடைபெற்றிருக்கும். இதிலிருந்து 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

 

பராமரிப்பு

தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கிவிட வேண்டும். தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 5 நாட்களுக்கு ஒருமுறை 1 கிலோ உலர்ந்த நாட்டு பசுஞ்சாணம், ஒரு கைபிடி பாறைத்தூள் அல்லது ஆழ்குழாய் கிணறு தோண்டும்போது வெளிவரும் பாறைத்தூள் போட வேண்டும்.

பூச்சி தொல்லை வந்தால் ஐந்து மில்லி லிட்டர் வேப்பெண்ணையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு நீரினை வெளியேற்றி புதுநீரைச் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்றிவிட்டு புது மண்ணைச் சேர்க்க வேண்டும். ஆறுமாதத்திற்கு ஒரு முறை அசோலாவைத் தவிர ஏனைய பொருட்களை மாற்றிவிட வேண்டும்.

அதிவேகமாக வளரும் தன்மையுடையதால் அசோலாவை தினமும் அறுவடை செய்து புதிதாக வளருவதற்கு இடவசதி செய்த தரவேண்டும்.

 

அசோலாவின் பயன்கள்

வேளாண்மையில்

ஒரு ஏக்கர் வயலுக்கு இரண்டு சென்ட் நாற்றாங்கால் தேவைப்படும். ஒரு சென்ட் நிலத்தில் பாத்தி கட்டி 4 அங்குலம் தண்ணீர் நிரப்பி 10 முதல் 15 கிலோ உலர்ந்த நாட்டு பசுஞ்சாணம், 2-3 கிலோ கிராம் பாறைத்தூள் அல்லது ஆழ்குழாய் கிணறு தோண்டும்போது வெளிவரும் பாறைத்தூள் போட வேண்டும்.

பின்னர் 8-10 கிலோ அசோலாவை போட்டு 15 நாட்களில் 80-100 கிலோ அசோலாவைப் பெறலாம். இவ்வாறு உற்பத்தி செய்த அசோலாவை நெற்பயிர் இட்ட ஒரு வாரத்தில் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ உரமாகப் போடலாம்.

இத்தாவரத்தை நெற்பயிரோடு சேர்த்தும் வளர்க்கலாம். 20-25 நாட்களில் நன்கு வளர்ந்து ஒரு ஏக்கர் முழுவதும் பரவி விடும். இத்தாவரத்தை நுண்ணுயிர் உரமாகப் பயன்படுத்தவதால் 20-30 சதவீதம் உரச் செலவை குறைக்கலாம். களை வளர்வது கட்டுப்படுத்தப்படுவதோடு நீர் ஆவியாதலும் தடுக்கப்படும்.

 

கால்நடை வளர்ப்பில்

அசோலாவில் லிக்னின் மற்றும் நார்சத்து அதிகம் இருப்பதால் கால்நடைகள், கோழி, பன்றி மற்றும் மீன் ஆகியவற்றிற்கு உணவாகக் கொடுக்கலாம்.

அறுவடை செய்த அசோலாவை மாட்டு சாணத்தின் வாசனை போகும்வரை நன்கு அலசி தனியாகவோ, தவிடு அல்லது மாட்டுத் தீவனத்துடன் 1:1 என்ற விகிதத்தில் கலந்து கொடுக்கலாம்.

பசுவிற்கு இரண்டு கிலோவரை இத்தாவரத்தை தீவனமாகக் கொடுக்கும்போது 15-20 சதவீதம் வரை பால் உற்பத்தி அதிகரிக்கும். பிண்ணாக்குப் பதிலானது என்பதால் பிண்ணாக்கு செலவு 25-40 சதவீதம் வரை குறையும். பாலின் தரம் அதிகரிப்பதோடு பால்நடைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

அசோலாவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 1-1.5 கிலோவும், இறைச்சிக் கோழி, வான்கோழிகளுக்கு 20-30 கிராமும், ஆடுகளுக்கு 300-500 கிராமும், வெண்பன்றிக்கு 1½-2 கிலோவும், முயலுக்கு 100 கிராமும் கொடுக்கலாம். இத்தாவரத்தை உண்ணும் வாத்து, கோழி, பன்றி, முயல் போன்றவற்றின் எடை அதிகரிக்கும்.

இத்தாவரத்தை உண்டு வளரும் கோழியின் முட்டையானது மனிதர்களுக்கு கண் பார்வையைத் தெளிவடையச் செய்யும். இத்தாவரத்தை வளர்க்கும் இடத்தில் கொசுக்களின் தொல்லை இருக்காது.

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.