அச்சம் தவிர் – வெற்றி பெறுவாய்

அச்சம் தவிர் என்பதே பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியின் முதல் வரியாகும்.

ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களில் ஒன்று தைரியம். ஏனென்றால் தைரியம் இல்லாத மனிதனிடம் மற்ற நல்ல குணங்கள் அமைவது கடினம்.

அச்சம் அல்லது பயம் என்பது ஓர் அடிப்படை உணர்ச்சி. நம்மில் பலர் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்வதைவிட அதிகம் பயத்தையே உணர்கின்றோம்.

அச்சம் ஏன்?

ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்து விட்டால், பயம் என்பது இயல்பாகவே வந்து விடுகிறது.

இந்த உணர்வு பயம் என்று பொதுமைப் படுத்தப் பட்டாலும் கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக வெளிப் படுகிறது.

பயம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது விபரீத கற்பனையால் விளைவது.

பயங்களின் கூடாரம் என்பது தன்னம்பிக்கையின் சேதாரம்.

தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே ,பலர் முயற்சிக்கான முதல் அடியை எடுத்து வைப்பதில்லை

முதல் அடியை எடுத்து வைக்காதவர் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி.

வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பது, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.

தோல்வியும், வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது!

அச்சம் தவிர் – எப்படி?

தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்று தான் பொருள்.

வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால், தோல்வி குறித்த பயத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவதில்லை என்பதுதான் உண்மை.

விழிப்புணர்வு என்பது வேறு, பயம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால், அதுவே ஆளை விழுங்கும் பயமாக மாறி விடக் கூடாது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

தோல்வி குறிந்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை தரும்.

வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து குறித்த பயத்தில் `சீட் பெல்ட்’ போட்டுக் கொள்வது எச்சரிக்கை உணர்வு.

விபத்து குறித்த பயத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை, பயந்தாங் கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை.

தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது.

அதாவது பயம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது.

மொத்தத்தில் எப்படியாவது பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்.

இறுதியில் பயம் அர்த்தமற்றது என்று எண்ணுவீர்கள்.

பாரதி சொன்ன அச்சம் தவிர் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் நிறுத்துங்கள்.

மகிழ்வான, வெற்றிகரமான வாழ்வின் மந்திரம் என்பதே அச்சம் தவிர் என்பதை உணர்ந்து உங்களின் திறமைகளின் எல்லைகளை அறியுங்கள்.