அஞ்சல் துறையானது, தபால்களை சம்பந்தப்பட்டவருக்கு ஒழுங்காக, முறையாக, குறிப்பிட்ட காலத்தில் தாமதமின்றி கிடைக்க செய்யும் வகையில் நாம் எழுதும் தபால்களில் (PINCODE) ‘பின்கோடு’ என்கிற அஞ்சல் குறியீட்டு எண்ணை அறிமுகப்படுத்தியிருப்பதை நாம் அறிவோம்.
‘பின்கோடு’ என்றால் என்ன?
அதாவது ஆங்கிலத்தில் ‘POSTAL INDEX NUMBER’ என்பதன் சுருக்கமே ‘PIN’ என அழைக்கப்படுகிறது.
இந்தியாவிலுள்ள அனைத்து மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கும் தபால்களை எளிதாகப் பிரிக்கும் வகையில் இந்த ‘அஞ்சல் குறியீட்டு எண்’ ஆறு இலக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு இலக்கமும் தகுந்த பொருள்களைக் கொண்டது.
உதாரணமாக ‘753 000’ என்கிற அஞ்சல் குறியீட்டு எண்ணை எடுத்துக் கொண்டால், இதில் முதல் இலக்கமான 7 நாட்டிலுள்ள அந்த குறிப்பிட்ட மண்டலத்தை அல்லது மாநிலத்தைக் குறிக்கும்.
இரண்டாவது, மூன்றாவது இலக்கங்களான 5, 3 துணை மாநிலத்தையும் (Sub-Zonic) தபால்கள் எந்த வழியாக அனுப்பப்படுகின்றன (Chosen Roster) என்பதையும் குறிக்கின்றன.
ஆக, முதல் மூன்று இலக்கங்களும் (758) சேர்த்து ‘எந்த மாநிலம், மாவட்டத்தை சேர்ந்தவை’ என்பதை தெரியப்படுத்துகிறது. கடைசி மூன்று இலக்கங்களான ‘001’ என்பது குறிப்பிட்ட மாவட்டத்தில் பட்டுவாடா செய்யப்பட வேண்டிய அஞ்சலகத்தைக் குறிக்கின்றன.
ஆக, ஆறு இலக்கங்களும் தபாலானது எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில், எந்த அஞ்சலகத்திற்கு போய்ச் சேர வேண்டும் என்பதை எளிதில் அறியும் பொருட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்திய அஞ்சல் துறையானது நம் நாட்டை எட்டு மண்டலங்களாகப் பிரித்திருக்கிறது.
முதல் மண்டலம் டெல்லி, அரியானா, பஞ்சாப், சண்டிகர், இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களையும்
இரண்டாவது மண்டலம் உத்திரப்பிரதேசத்தையும்
மூன்றாவது மண்டலம் ராஜஸ்தான், குஜராத், டையூ டாமன், தாத்ரா நாகர்ஹர்வேலி ஆகியவைகளையும்
நான்காவது மண்டலம் மகாராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசம் ஆகியவைகளையும்
ஐந்தாவது மண்டலம் ஆந்திரா, கர்நாடகம் ஆகியவைகளையும்
ஆறாவது மண்டலம் தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு ஆகியவைகளையும்
ஏழாவது மண்டலம் மேற்கு வங்காளம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஒரிசா, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகலாயா, நாலாந்து, திரிபுரா ஆகியவைகளையும்
எட்டாவது மண்டலம் பீஹாரையும் கொண்டதாகும்.
அஞ்சல் குறியீட்டு எண்ணை குறிப்பிடுவதற்கு வசதியாக அஞ்சலட்டை, உள்நாட்டு உறை மற்றும் பணம் அனுப்பப் பயன்படும் அட்டை போன்ற அனைத்து அஞ்சலகத் தபால்களிலும் முன்பக்க வலது புறத்தில் ஆறு கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, நாம் தபால்களை அஞ்சல் பெட்டியில் சேர்க்கும் முன், இந்த கட்டங்களில் நாம் அனுப்பும் ஊருக்கான சரியான அஞ்சல் குறியீட்டு எண்ணை குறிப்பிட்டிருக்கிறோமா? என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
தபால்கள் அனுப்பப்படும் ஊருக்கான அஞ்சல் குறியீட்டு எண்ணை நாம் இணையத்தில் பார்த்து அல்லது அருகாமையிலுள்ள அஞ்சலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998