கம்மம் நகரில் உதயா ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அவனுடைய அம்மாவும் அப்பாவும் தங்களுடைய சக்திக்கு மீறி அவனைப் படிக்க வைத்திருந்தனர்.
உதயா தன் கடின உழைப்பாலும் முயற்சியாலும் கவனத்துடனும் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராக பட்டம் பெற்றான். உதயாவுக்கு ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
ஊரார் உறவினர்களும் நண்பர்களும் தாய் தந்தையரும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஆஸ்திரேலியாவில் டாக்டர் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருந்த உதயாவுக்கு 34 வயதாகியது. உதயாவின் தாய் தந்தையர் தங்கள் உறவினர் வீட்டில் பெண் கேட்டு பேசி முடித்தனர்.
சில மாதங்கள் சென்றன.
இந்நிலையில் உதயா தன் தாய் தந்தையருக்கு போன் செய்து தனக்கு ஒரு மாத காலம் விடுப்பு கிடைத்திருப்பதால் ஊருக்கு வருவதாக சொல்ல, உதயாவின் பெற்றோர்கள் ஆறுவமுடன் திருமண ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர்.
உதயா குறித்த நேரத்தில் வந்திரங்க, 2020 பிப்ரவரி 20ஆம் தேதி திருமண நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக கோலாகலத்துடன் நடைபெற்றது.
உதயா தன் உறவுக்கார பெண் வானதியை மனமகிழ்ச்சியுடன் கரம் பிடித்தான்.
உதயா இல்லற வாழ்வை தொடங்க ஆரம்பித்த நேரம் ஆஸ்திரேலியாவிலிருந்து அவசர அழைப்பு வந்தது.
உதயா திருமணம் முடிந்து ஒன்பதே நாட்கள் ஆன நிலையில் தன் குடும்ப உறவினர்கள், தாய், தந்தை, நண்பர்கள் என அனைவரிடமும் சொல்லிவிட்டு தன் மனைவி வானதியிடம் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.
அறையில் வானதி முறைத்தபடி உட்கார்ந்திருந்தாள்.
“வானதி என் செல்லம்ல… என் தங்கம் இல்ல… கோவிச்சுக்காதடா.. நான் என்ன நானாகவா ஆசைப்பட்டு போறேன். என்னோட சூழ்நிலை. என்னோட உயர் அதிகாரி அவசரமா கூப்பிடும் போது முடியாதுன்னு சொல்ல முடியுமா?”
” …ஊகும். முடியாது. அதுக்குத்தான் சொல்றேன் என்னையும் கூட கூட்டிட்டு போங்கன்னு.”
“முடியாதுடா செல்லம். இது என்ன பக்கத்து ஊரா? பஸ் ஏறி போறதுக்கு… கொஞ்ச நாள் பொறுத்துக்க … நான் ஆஸ்திரேலியாக்கு போய் உனக்கு உண்டான அங்க உள்ள ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு சீக்கிரமா வந்து உன்னைய அழைச்சிட்டு போறேன்” என்று சொல்லி சமாதானப்படுத்தி விட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றான்.
அதன் பின் உதயா அடிக்கடி தன் மனைவியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டும் சமாதானம் செய்து கொண்டும் இருந்தான்.
சில மாதங்கள் சென்றிருக்கும்.
ஒரு நாள் அதிகாலை உதயா தான் தங்கி இருந்த அறையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். திடீரென்று ரத்த வாந்தி எடுத்தான். அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவனுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
டாக்டர் ஆன அவனுக்கு நோயின் வீரியம் தெரிந்திருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.
இப்போதுதான் இல்லற வாழ்க்கை தொடங்கி இருக்கும் அவனுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் மரணம் அடைந்து விடுவோம் என்று தெரிய வர அவனால் எதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.
இடி இறங்கியதை போல் உணர்ந்த அவன் தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு மன தைரியத்துடன் மீண்டும் எழுந்தான்.
‘இப்போது என்ன செய்வது? என் ஆயுள் காலம் முடியப் போகுது. அப்படி நான் இறந்து விட்டால் என்னுடன் ஒன்பதே நாட்கள் சேர்ந்து வாழ்ந்த இளம் மனைவி விதவை ஆகணுமா? அவளின் வாழ்க்கை என்னவாகும்? அவளின் ஆசை, அவள் வாழ்நாள் கனவு என்ன ஆவது? மொத்தமும் பாழாகி விடுமே! அவள் என்ன குற்றம் செய்தாள்? அவளுக்கு ஏன் இந்த தண்டனை? வேண்டாம்! என்னால் இனி யாரும் பாதிக்கக் கூடாது!’ என்று ஒரு முடிவுக்கு வந்த அவன் தன் மனைவிக்கு வீடியோ காலில் தன் நிலை பற்றி மெல்ல மெல்ல பக்குவமாக எடுத்துரைத்தான்.
முதலில் அழுது ஆர்ப்பாட்டம் செய்த வானதி, படித்திருந்த பெண் என்பதால் பின்பு தன் மனதை தேற்றிக்கொண்டாள்.
தன் கணவன் எடுத்துரைத்ததில் நியாயம் இருப்பதை உணர்ந்த அவள் தன் கணவனின் ஆத்மாவாவது சாந்தி அடையட்டும் என்று அதற்கு சம்மதித்தாள்.
உதயா கூறியபடி இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து வானதி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக எந்தவித இடையூறுகளையும் சந்திக்க நேராமல் இருக்க அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தான் உதயா.
‘நான் இறந்த பின் என்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்’ என்று கூறி அதற்குரிய விமான கட்டணம் முழுவதும் ஆஸ்திரேலியா அரசுக்கு செலுத்தினான்.
மேலும் தன் உடலை எடுத்துச் செல்ல பயன்படக்கூடிய பெட்டி உட்பட மற்ற பொருட்களுக்கும் தன்னை சுமந்து செல்ல கூடியவர்களுக்கும் என்று அனைத்திற்கும் பணம் செலுத்தி விட்டு அவ்வப்போது தன் குடும்ப உறவினர்களிடமும் தன் தாய் தந்தையர்களிடமும் நண்பர்களிடமும் வீடியோ காலில் பேசி ஆறுதல் படுத்தி வந்தான்.
இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசம் அடைய உடன் இருந்த நண்பர்களிடம் “நான் இன்னும் ஓரிரு மணிகளே உயிருடன் இருப்பேன்” என்று சொன்னான்.
சொன்னது போலவே அன்றே உதயாவின் மூச்சுக்காற்று காற்றோடு கலந்தது.
உதயாவின் உடல் விமானத்தில் எடுத்து வரப்பட்டு கம்மம் நகரில் உறவினர்கள் நண்பர்களால் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது .
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!