அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை

அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்ற பழமொழியை கூட்டத்தில் வயதான பெண் ஒருத்தி கூறுவதை கழுதைக்குட்டி கதிர் கேட்டது. பழமொழி குறித்த வேறு ஏதேனும் செய்திகள் கிடைக்கிறதா என்று ஆர்வமுடன் கூட்டத்தினர் கூறுவதைக் கேட்கலானது.

அப்பொழுது இளம்பெண் ஒருத்தி “பாட்டி இந்த பழமொழியை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதற்குரிய விளக்கம் தெரியாது. இந்த பழமொழியின் விளக்கத்தைக் கூறுங்களேன்.” என்று கேட்டாள்.

அதற்கு பாட்டி “கிராமங்களில் மிகச் சாதாரணமாக யாராவது தவறுகள் செய்ய நேரும் போது ‘அஞ்சுவிரலும் ஒன்னாவா இருக்கு?’ என்று கேட்பது உண்டு.

அதேபோல் அதிகமாக குழந்தைகளைப் பெற்றவர்களிடம் அக்குழந்தைகள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று கேட்டால் ‘என்னமோ அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை’ என்று கூறுவர்.

கிராமங்களில் சில காரியங்களுக்காக வெளியில் சென்று திரும்பியவர்களிடம் “போன காரியம் எப்படி?” என்று கேட்டால் “அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!” என்று கூறுவார்கள்.

இப்படியாக பல இடங்களிலும் பலராலும் கூறப்பட்டு வரும் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள்தான் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்” என்று பழமொழியின் விளக்கத்தினைக் கூறத் துவங்கினார்.

பழமொழிக்கான விளக்கம்

பஞ்ச பூதங்களைப் பற்றி அறியாதவர் யாரும் இருக்க முடியாது. நீர், நிலம், காற்று ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்தினையும் பஞ்ச பூதங்கள் என்றழைப்போம். இந்தப் பஞ்ச பூதங்கள் தமது பணிகளை சரிவர செய்தால்தான் உயிர்கள் வாழ முடியும்.

நிலம் – உயிர்களுக்கு தேவையான உணவுகளை கொடுக்கக்கூடிய நல்ல நிலமாக இருக்க வேண்டும்.

நீர் – உயிர்கள் அருந்தி தாகம் தீர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

காற்று – உயிர்களின் சுவாசத்திற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.

ஆகாயம் – சூரியக் கதிர்களை பூமியில் விழாதவாறும் மழை மேகங்களை தன்னகத்தே கொண்டதுமாக இருக்க வேண்டும்.

நெருப்பு – உணவுக்காகவும் பிற சக்திகளை தருவதற்கும் ஏற்ற வகையில் அமைய வேண்டும்.

இவ்விதமாக இந்தப் பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். இல்லையேல் உயிர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கிவிடும்.

எனவே இந்த ஐந்தில் கண்டிப்பாக ஏதேனும் இரண்டு பழுதடைந்தால் உலகம் அழியும் என்பதை உணர்த்தவே ஐந்துக்கு ரெண்டு பழுதில்லை. அதாவது ஐந்தும் நல்ல விதமாகவே உள்ளது.

எனவே உலகம் அழியாது என்று விளக்கமளிக்க தோன்றியதுதான் இந்த ‘அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை’ என்ற பழமொழியாகும்.

 

ஆனால் இன்றோ ஆகாயம் கெட்டு ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததால் அமில மழை பெய்கிறது. காலநிலை மாறுதல் உண்டாகி வருகிறது. மழை பெய்யாது பூமி வறண்டு காணப்படுகிறது.

காற்று மாசுபடுத்தப்பட்டு பிராண வாயுவின் அளவு குறைந்து கரியமல வாயுவின் அளவு அதிகமாகி பல்வேறு நோய்களை உயிர்களுக்கு உண்டாக்கி வருகிறது.

நீர் மாசுபாடு அடைந்ததின் விளைவாக பல்வேறு நோய்களும், நல்ல நீர் குடிப்பதற்கு காசு கொடுத்து வாங்கும் அவலமும் உண்டாகிவிட்டது.

நிலம் மாசுபடுத்தப்பட்டு புல்கூட முளைக்காத வறண்ட நிலங்களாக மாறியும் விளை நிலங்கள் தரிசுகளாக மாறியும் எதிர்கால வாழ்வை கேள்விக் குறியாக்கிவிட்டது. இவ்வாறாக பஞ்சபூதங்கள் ஐந்தும் பழுதானதால் உலகம் பெரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி உள்ளது.” என்று கூறினாள்.

 

பழமொழியின் விளக்கம் கிடைத்தவுடன் கழுதைக்குட்டி கதிர் வட்டப்பாறையை நோக்கி ஓடியது. அங்கே எல்லோரும் வழக்கம் கூடியிருந்தனர்.

காக்கை கருங்காலன் “என் அருமைக் குஞ்சிகளே, குட்டிகளே உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

கழுதைக்குட்டி கதிர் “தாத்தா நான் இன்றைக்கு அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்ற பழமொழியைக் கூறுகிறேன்” என்றுகூறி தான்கேட்டது முழுவதையும் விளக்கிக் கூறுகிறது.

காக்கை கருங்காலனும் “இந்த பழமொழிக்கு நான்அறிந்த வேறு ஒரு விளக்கத்தையும் கூறுகிறேன் கேளுங்கள்.

சைவக்கடவுளான சிவபெருமானை நமசிவாய மற்றும் சிவாயநம என்ற மந்திரங்களைக்கூறி வழிபாடு நடத்துவார்கள். இந்த ஐந்தெழுத்து மந்திரத்திற்குப் பதில் சிவ என்ற இரண்டெழுத்து மந்திரத்தையும் கூறிவழிபடுவர்.

ஐந்தெழுத்திற்குப் பதில் இரண்டெழுத்து மந்திரத்தை கூறிவழிபடுவதும் நல்லது என்று சைவப்பெருமக்கள் கூறுவர். இதனைக் குறிக்கவே அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்ற பழமொழியைக் கூறுவர். சரி நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்” என்று கூறி வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.