இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் பலவற்றை வழங்கியுள்ளது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
இந்திய அரசியலமைப்பு மூன்றாவது பகுதியில், அரசியலமைப்புச் சட்ட பிரிவு 13 முதல் 35 வரை உள்ள பிரிவுகள் சில உரிமைகளை அடிப்படை உரிமைகளாக அங்கீகரிக்கின்றன. அவை
1. சமத்துவ உரிமை – பிரிவு 14-18 வரை
2. சுதந்திர உரிமை – பிரிவு 19-22 வரை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை – பிரிவு 23-24 வரை
4. சமய சுதந்திர உரிமை – பிரிவு 25-28 வரை
5. பண்பாடு மற்றும் கல்வி உரிமை – பிரிவு 29-30 வரை
6. அரசியலமைப்பிற்கு தீர்வுக் காணும் உரிமை – பிரிவு 32
சமத்துவ உரிமை
சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே சட்டரீதியாக அனைவரும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும். நமது அரசியலமைப்பு அனைத்து குடிமக்களின் சமத்துவ உரிமைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.
கீழ்கண்ட உரிமைகள் சமத்துவ உரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
1.சமயம், சாதி, பால், இனம் மற்றும் நிறம் அடிப்படையில் எவரையும் வேறுபடுத்தக்கூடாது – (சரத்து 15)
2.பொதுப்பணி மற்றும் வேலைவாய்ப்பு நியமனங்களில் சமவாய்ப்பு அளித்தல் – (சரத்து 16)
3.தீண்டாமை ஒழிப்பு – சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினர்களின் நலனைப் பாதுகாத்தல் -(சரத்து 17)
4.அரசு அனுமதியின்றி பெறும் இராணுவம் மற்றும் கல்வி தவிர பட்டங்களைத் தடை செய்தல்-(சரத்து 18)
சுதந்திர உரிமை
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19-ல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம், அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது. அதன்படி
1. பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை
2. ஆயுதமின்றிக் கூட்டங்களை அமைதியாக நடத்தும் உரிமை
3. சங்கங்கள் மற்றும் கழகங்கள் ஏற்படுத்தும் உரிமை
4. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்லும் உரிமை
5. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வாழும் உரிமை
6. ஒருவர் எந்தத் தொழிலையும் அல்லது எந்தப் பணியையும் மேற்கொள்ளும் உரிமை
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 20-ன்படி ஒருவரைத் தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது. மேலும் ஒரே குற்றத்திற்காக ஒருமுறைக்கு மேல் தண்டிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறது. யாரையும் சுயவிருப்பமின்றி சாட்சியாக்க கட்டாயப் படுத்தக்கூடாது.
இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு-21 தனிமனித வாழ்வு மற்றும் தனி மனித சுதந்திரத்தை உறுதி செய்கிறது. தனது சுதந்திரத்தினை மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அனுபவிக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 22-ன்படி எவரையும் விசாரணையின்றி கைது செய்யக்கூடாது. மேலும் மக்கள் விசாரணையின்றி கைது செய்யப்படும்போது பாதுகாப்பு அளிப்பதோடு மட்டுமில்லாமல் கைது செய்வதற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படி கேட்கவும் உரிமையை அளிக்கிறது.
சட்ட வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கிரிமினல் வழக்குகளில் நீதிபதி முன் ஆஜர்படுத்தவும் பாதுகாப்பு அளிக்கிறது.
சுரண்டலுக்கு எதிரான உரிமை
ஒருவரை கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றியோ வேலை செய்ய வைத்தல் கூடாது என்று இந்திய அரசியலமைப்பு 23-வது பிரிவு கூறுகிறது.
அடிமைமுறை, பெண்களையோ, குழந்தைகளையோ மனித வியாபாரத்திற்கு தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது.
மாற்றுத்திறன் உடையவர்களையும் (ஊனமுற்றோர்) பயன்படுத்தக் கூடாது.
14 வயதிற்குகீழ் உள்ள குழந்தைகளை குழந்தைத் தொழிலாளர்களாக தொழிற்சாலை மற்றும் சுரங்கத் தொழிலில் அல்லது பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடைச் செய்ய பிரிவு 24 வழி செய்கிறது.
சமயச் சுதந்திர உரிமை
நமது அரசியலமைப்பு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமய சுதந்திரத்தினை அளிக்கிறது. எல்லா சமயங்களும் ஒரே மாதிரியாகக் கருதப்பட வேண்டும்.
இந்தியா சமய சார்பற்ற நாடு என்பதால் அரசு என்பது மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவே தவிர மனிதனுக்கும் கடவுளுக்கும் அல்ல என்பதனை வலியுறுத்துகிறது.
அனைத்து சமய அமைப்புகளும் தங்களது விவகாகரங்களை நிர்வகித்துக் கொள்ள சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 25-ல் மதத்தைப் பின்பற்றி பரப்புவதற்கான சுதந்திரம் உண்டு என்று உத்திரவாதம் அளிக்கிறது.
மேலும் மதச்சார்பான நிறுவனங்களை நிறுவவும், நடத்தவும், தருமப்பணிகளை மேற்கொள்ளவும் உறுதியளிக்கிறது. குறிப்பிட்ட சமயத்தின் பராமரிப்பிற்கும், வரி செலுத்துவதற்கும் பிரிவு 27 உரிமையை வழங்குகிறது.
அரசியலமைப்பு பிரிவு 28 கல்வி நிறுவனங்களில் எந்தவிதமான சமயப் போதனைகளையோ அல்லது வழிபாட்டையோ மத நிறுவனங்களைத் தவிர அரசு நிதிபெறும் கல்வி நிறுவனங்கள் பின்பற்றக் கூடாது.
பண்பாட்டு கல்வி உரிமைகள்
இந்தியா பல மொழிகள், எழுத்துக்கள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட நாடு. அரசியலமைப்பு பிரிவு-29-ன்படி சிறுபான்மையினர் மொழி, எழுத்துப் பண்பாட்டைப் பாதுகாக்கிறது.
பிரிவு-30 சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவவும் மற்றும் நிர்வகிக்கவும் உரிமை வழங்குகிறது.
அரசியலமைப்பிற்கு தீர்வு காணும் உரிமை
நமது அரசியலமைப்புப் பிரிவு-32 குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது நேரடியாக மக்கள் உச்சிநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பாதுகாப்பினைப் பெற உதவுகிறது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் நீதி ஆணைகள், ஆட்கொணர் நீதிப் பேராணை, கீழ்மன்றத்திற்கு வரும் கட்டளை நீதிப் பேராணை, வழக்கு விசாரணைத் தடை ஆணை, உரிமை வினா நீதிப் பேராணை, பத்திரத்தைக் கொண்டு வந்து முன்னிலைப்படுத்தக் கீழ்நீதிமன்றங்களுக்கு இடப்படும் கட்டளை போன்ற நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.
கல்வி உரிமை
பிரிவு 21-ஏ, 2009-ல் இலவச கட்டாயக் கல்வி ஆறு வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நமது உரிமைகளை நாம் அனுபவிக்க வேண்டும். மற்றவர்களுடைய உரிமைகளை மதித்து நடக்க வேண்டும்.
மறுமொழி இடவும்