அடுத்த கதை – சிறுகதை

அடுத்த கதை – சிறுகதை

முகிலனுக்கு வெகு நாட்களாகவே உள்ளூர‌ ஓர் குறை. எல்லோரும் அவன் எழுதும் கதைகளை ரசித்துப் படித்து பாராட்டும் போது ஸ்வர்ணா மட்டும் ஏன் எவ்வித அபிப்ராயமும் கூறுவதில்லை?

ஸ்வர்ணா வேறு யாருமல்ல; அவனுடைய மனைவிதான்.

அலுவலக நண்பர்கள் அனைவருமே அவனது கதைகளைப் படித்து விட்டு, அவரவர் அபிப்ராயங்களைக் கூறி வந்தார்கள்.

ஆரம்ப காலத்தில் அவனே ஒவ்வொருவரிடமும் கதைகள் பிரசுரமான பத்திரிக்கைகளை எடுத்துச் சென்று காண்பித்தது போய், இப்போதெல்லாம் அவர்களே வலிய இவனிடம் வந்து கங்கிராட்ஸ், சூப்பர்ப், வொண்டர்ஃபுல், மார்வலஸ் என அவனது கதைகளை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

‘முகிலன்’ என்ற பெயரிலேயே எழுதிக் கொண்டிருந்தவன், மனைவி ஸ்வர்ணா வந்ததும், அவள் பெயரையும் சேர்த்து ‘ஸ்வர்ணமுகி’ என்னும் புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தான்.

உறவினர்கள் கூட அவனது கதைகளைப் படித்துவிட்டு கடிதம் மூலமாகவோ, தொலைபேசியிலோ தங்கள் அபிப்ராயத்தைத் தெரிவித்து வந்தனர்.

கதை பிரசுரமான அடுத்தடுத்த வாரங்களில் வாசகர்கள் பலர், அவனது கதைகளைப் பாராட்டி எழுதிய கடிதங்கள் பத்திரிக்கைகளில் வெளிவரும்.

இப்படி அனைத்துத் தரப்பினரும் அவனது எழுத்துப் பணியைப் பாராட்டி உற்சாகப்படுத்தி வருகையில்; ஸ்வர்ணா மட்டும் ஏன் எதுவும் கூறாமலிருக்கிறாள் என்பதுதான் அவனுக்குப் புரியாத புதிர்; வருத்தம்.

தான் எழுதியதை ஆசையுடன் எடுத்துக் கொண்டு போய் அவளிடம் காண்பித்தாலும், எதுவும் பிடி கொடுக்காமல் பேசி வேலை இருப்பதாகவும், பிறகு படிப்பதாகவும் ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழித்து விடுகிறாள். அது போன்ற அனுபவங்கள் முகிலனுக்கு நிறையவே ஏற்பட்டிருக்கின்றன.

என்னதான் ஊர் உலகத்திலுள்ளவர்கள் அவனது கதைகள் குறித்து வாயாரப் புகழ்ந்தாலும், மனைவி வாயிலிருந்து ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை பாராட்டாக வராததுதான் அவன் மனதில் உள்ள பெருங்குறை.

அன்றொரு நாள், காலை அலுவலகம் வந்ததுமே நண்பர்கள் கூட்டமாக அவனிடம் வந்து அவனைப் பாராட்டு மழையால் நனைத்தார்கள். வாரப்பத்திரிக்கை ஒன்று நடத்திய சிறுகதைப் போட்டியில் முகிலனின் கதையை ஐயாயிரம் ரூபாய் முதல் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

பத்திரிக்கையை அவனிடம் காட்டி, “ட்ரீட் எப்போ?” என அவனை உலுக்கி எடுத்தார்கள்.

“இன்னிக்கே வச்சுக்கலாம். நீங்களே ஓட்டலைத் தேர்ந்தெடுங்கள்” என்றான் முகிலன்.

“என்னது ஓட்டலா? நோ… நோ… எல்லோரும் உங்க வீட்டுக்கு நைட் ஏழு மணிக்கு வர்றதா இருக்கோம். டின்னருக்கு ஏற்பாடு செய்.” எனக் கோரஸாகச் சொல்லி விட்டு நகர்ந்தனர்.

அவர்கள் சென்றதும் வீட்டிற்கு டயல் செய்து ஸ்வர்ணாவிடம் விஷயத்தை எடுத்துச் சொன்னான். எல்லாவற்றுக்கும் “ஓ.கே. சரிங்க.” என்று மட்டும்தான் பதில் வந்தது.

‘சுத்த ரசனையற்ற ஜென்மமாயிருக்காளே? எவ்வளவு சந்தோஷப்பட வேண்டிய விஷயத்தைச் சொல்லியிருக்கேன். எந்தவித ரியாக்ச‌னும் இல்லாமல் இருக்காளே’ என‌ முகிலனின் மனம் புழுங்கியது.

அன்று இரவு முகிலனின் வீடு அமர்க்களப்பட்டது. ஒரு இடம் விடாமல் அவனது நண்பர்கள் ஆண்களும், பெண்களுமாக வீட்டை உரிமையுடன் சுற்றிப் பார்த்தனர்.

ஆள் ஆளக்கு வீட்டுப் பராமரிப்பு குறித்துப் புகழ்ந்து தள்ளினர். டின்னரில் ஒவ்வொரு அயிட்டத்தையும் ரசித்து, ருசித்துச் சாப்பிட்டனர். ஸ்வர்ணாவின் கைவண்ணம் சாப்பாட்டில் மட்டுமின்றி, வீட்டை வைத்திருக்கும் பாங்கிலும் தெரிவதாக அவளிடமே தெரிவித்தனர்.

சமையலறை சென்று ஸ்வர்ணாவிடம் “மேடம் நீங்களும் முகிலனும் நல்ல ஜோடி. நீங்க ஒரு உதாரண குடும்பத்தலைவி. உங்க திறமையையும் கைவண்ணத்தையும் வீட்டுப் பராமரிப்பிலும் சமையலிலும் காட்டறீங்க.

முகிலனோ அவரது திறமையை எழுத்தில் காண்பிக்கிறார். சரியான பொருத்தம் தான். இவ்வளவு பெரிய எழுத்தாளராயிருக்கும் உங்க வீட்டுக்காரரின் வெற்றிக்குப்பின் நீங்கள்தான் இருக்கிறதாய் நினைக்கிறோம். சரி தானே?

உங்க கணவரின் எழுத்து பற்றிய உங்க அபிப்ராயம் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்…” என

அலுவலகப் பெண்கள் இருவர் கேட்டதும், ஸ்வர்ணா பேச ஆரம்பித்தாள்.

“நீங்க எல்லோருமே என்னை ரொம்பவும் தான் புகழறீங்க. ஒரு மனைவியின் கடமையைத்தான் நான் செஞ்சுக்கிட்டிருக்கேன். அவ்ளவுதான்…”

நண்பர்கள் கிளம்புவதை ஸ்வர்ணாவிடம் தெரிவிக்க யதேச்சையாய் சமையலறைப் பக்கம் வந்த முகிலன் அலுவலகப் பெண்களிடம் ஸ்வர்ணா பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று கொண்டான். அவர்கள் பேசியதையும் கேட்டான். ஸ்வர்ணா தொடர்ந்தாள்.

“அவர் இன்னும் வளரணும். நாவல், தொடர்கதைன்னு எழுதி மேன்மேலும் கொடி கட்டிப் பறக்கணும். நிறைய பரிசுகள், விருதுகள் வாங்கணும். அவ்வளவு ஆசை எனக்கு.

அவர் இல்லாத நேரத்தில், ஒழிந்த நேரத்தில் அவர் கதை ஒவ்வொன்றையும் படிச்சு ரசிச்சிருக்கேன். அவருடைய கதைக்கரு, சொல்லும் பாணி, எழுத்தின் நடை, சமுதாயத்தின் சிந்தனையைத் தட்டி எழுப்பும் எழுத்தாற்றல் அனைத்துமே எனக்குப் பிடிச்சிருக்கு.

அவருக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாற்றலைக் கண்டு பிரமிச்சுப் போய் இருக்கேன். வீட்டைப் பற்றிய எந்தக் கவலையும் அவருக்கு ஏற்படாதபடி நானே எல்லாவற்றையும் கவனிச்சிக்கிறேன். கதை எழுதும் சமயம் அவர் கவனம் சிதறாமல், திசை மாறாமல் இருக்கும்படி நடந்து கொள்கிறேன்.

அவருடைய கதைகளை நான் பாராட்டியதோ, புகழ்ந்ததோ இல்லை. சமயத்தில் பாராட்டும் புகழும்கூட தொய்வுக்கு வழி வகுக்கும். வலுக்கட்டாயமாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு வாய் மூடி மௌனம் சாதித்து வருகிறேன். ஒரே ஒரு குறை மட்டும் அடி மனசுல ரொம்ப நாளா இருக்கு.”

“அப்படி என்னங்க உங்க குறை?”

“நீங்க எல்லோரும் என்னை எவ்வளவு பாராட்டினாலும் புகழ்ந்தாலும் எனக்கு என்னவோ மனசுல திருப்தியில்லை. நிறைவு இல்லை. அடி மனசுல அந்தக்குறை உறுத்திக்கிட்டேயிருக்கு. ஏக்கமாகக்கூட இருக்குன்னு சொல்லலாம்…”

“சொல்லுங்க மேடம், என்ன அது?”

முகிலனும் ஆர்வம், குழப்பம் மேலிட உன்னிப்பாகக் காதைத் தீட்டிக் கொண்டு நின்றான்.

ஸ்வர்ணா மேலே தொடர்ந்தாள்.

“ஒரு மனித யந்திரமாகத்தான் அவர் செயல்பாடுகள் இருக்கே தவிர, அவர் வாயிலிருந்து ஆத்மார்த்தமான ஒருவார்த்தை, ஒரே ஒரு வார்த்தை நீங்க எல்லோரும் சொல்கிற மாதிரி வரலையே.

சொந்தக்காரங்க மத்தியிலும் அவங்கவங்க செயல்பாடுகளை மனசார பாராட்டுகிறவரு தன்னோட மனைவியை உற்சாகப்படுத்த, அவளின் செயல்பாடுகளை ரசிக்க, புகழ, பாராட்ட மனசு வரலியே.

அனைத்து விஷயங்களிலும், ஒருவருக்கொருவர் அவைகளை அங்கீகரிக்கும் தன்மையைப் பெறணும். அதாவது அங்கீகாரம் கணவன் மனைவிக்குள்ளே இருக்கணுமில்லையா?”

ஸ்வர்ணா தனது மனக்குறையை அலுவலகப் பெண்களிடம் இப்படி எடுத்துச் சொல்லி வெளிப்படுத்தியதும் வெளியே நின்று கொண்டு அவ்வளவையும் காதுபட கேட்டுக் கொண்டிருந்த முகிலன் ஆடிப் போனான்; நொறுங்கிப் போனான்.

இவ்வளவு நாட்களும் ஸ்வர்ணா மேல் வைத்திருந்த தவறான அபிப்ராயத்திற்காக வெட்கப்பட்டான்.

தன் கவனம், ஈர்ப்பு எல்லாம் இவ்வளவு காலமும் தன்னைச் சுற்றியும் வெளி உலக நபர்களைச் சுற்றியும்தான் ஏற்பட்டுக் கொண்டிருந்ததை நினைக்கையில் அவன் மீது அவனுக்கே ஒருவித வெறுப்பு ஏற்பட்டது.

எதுவுமே தெரியாமல் அப்போது தான் வருவது போல் சமையலறையினுள் நுழைந்து “வெல்டன் ஸ்வர்ணா! டின்னர் அற்புதம். இவங்க பாராட்டுக்கள் எல்லாம் உன்னை மட்டுமே சேரும். ஐயாம் ரியலி பார்சுனேட். உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கு.” என்றவாறே அவளது இரு கைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டான்.

இருவருமாக வெளியே வந்து நண்பர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டினுள் நுழைந்ததும் முகிலன் ஸ்வர்ணாவை தன்னோடு அணைத்துக் கொண்டு சொன்னான்.

“ஸ்வர்ணா! ஒருவர் செயல்பாடுகளை இன்னொருவர் அங்கீகரிக்கும் தன்மை கணவன்-மனைவிக்குள் எவ்வளவு அவசியம் என்பதை இன்றைக்குத்தான் இப்போதுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுவும் உன் மூலமாகத்தான். இதுதான் என் அடுத்த கதையின் கரு. ஓ.கே.?”

“ஓ.கே!” என்றவாறே மத்தாப்பூச் சிதறல்களாய் சிரிப்பை உதிர்த்தாள் ஸ்வர்ணா.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998