இந்தியாவில், கையில் கழுத்தில் கிடக்கும் நகையிலிருந்து, கோயில் கலசங்கள் முதல், சேலை ஜரிகை வரை தங்கம் இருக்கிறது.
தங்கத்தால் செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தங்க பஸ்ப லேகியம் போன்ற மருந்துகளில் தங்கத்தைப் பயன்படுத்துகின்றனர்.
பல் போன பெரியவர்கள் தங்கத்தால் பல்செய்து மாட்டிக் கொண்டு சிரித்து மகிழ்கின்றனர்.
ஏழை அன்புத் தாய் தன் குழந்தையை என் தங்கமே…… பொன்னே! என்று அன்பு ஒழுகக் கொஞ்சி மகிழ்கிறாள்; தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கம், பொன், கனகம் எனப் பெயர் சூட்டி மகிழ்கின்றார்.
தங்க நாணயம்
அரிதாகக் கிடைக்கக் கூடிய உலோகம் தங்கம் என்பதால், அதற்கு மதிப்பு அதிகம். அதன் மங்களகரமான மஞ்சள் நிறம் கவர்ச்சியுடையது; துருப்பிடிக்காத உலோகம். அது மட்டுமல்லாமல், அதற்கு மற்றும் ஒரு சிறப்புண்டு.
ஒரு கிராம் தங்கத்தைக் கொண்டு நமது வீட்டு மேஜை மீது போடும் விரிப்பு அளவுக்கு மெல்லிதாகத் தகடு செய்து விடலாம். அதனால்தான், பழங்காலத்தில் மன்னர்கள் தங்கத்தில் நாணயம் என வெளியிட்டுள்ளனர்.
கனடா நாட்டைச் சார்ந்த ராயல் கனடியன் மில்ட் தயாரித்த தங்க நாணயம் துபாயில் நடந்த தங்கக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. அஃது உலகத்திலேயே மிகப் பெரிய தங்க நாணயம்.
24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட அதன் மதிப்பு 10 கோடி; அதன் எடை 100 கிலோ; நீளம் 50 செ.மீ; அகலம் 3 செ.மீ. அதில் இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
இது போன்று இந்தியாவைச் சேர்ந்த ‘டாடா கோல்டு பிளஸ்’ திருப்பூரில் 24505 கிராம் எடையும், 1829 மி.மி. விட்டமும், 140 மி.மீ. அகலமும் கொண்ட 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட பெரிய அளவிலான தங்க வளையலை அறிமுகம் செய்திருக்கிறது.
தங்கம் தரும் பிரச்சினைகள்
இப்படிப் பெருமை வாய்ந்த தங்கத்தால் பிரச்சனைகளும் ஏராளம். மனித நாகரிகம் உருவான காலத்திலிருந்தே இந்த மதிப்பு மிக்க உலோகத்திற்காக அடித்துக் கொண்டவர்கள் அதிகம்.
வரலாற்றில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றும் தாம், பெரும்பாலான போர்களுக்குக் காரணம்.
நமது குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள், பிரிவுகள், மனஸ்தாபங்கள் போன்றவைகளுக்கு முழுமுதற் காரணம் இம்மூன்றில் ஒன்றுதான்.
பெரும்பாலான திருட்டு, கொள்ளை, கொலை போன்றவற்றின் பின்னணியில் தங்கம்தான் இருக்கிறது.
தங்கத்தின் மீது அளவு கடந்த தாகம் கொண்டவர்கள் அதை வாங்கி, அதனைப் பாதுகாப்பதற்காகத் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியர்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் எப்பொழுதும் குறைந்ததுமில்லை; குறையப் போவதுமில்லை!
பெண்களின் திருமணத்தின்போது, ‘எத்தனை சவரன் நகைகள் போடுவீர்கள்?’ என்பதுதான், மாப்பிள்ளை வீட்டாரின் முதற் கேள்வியாக இன்றும் இருந்து வருகிறது.
சேமிப்பு சாதனம்
நடுத்தர வர்க்கத்தினர் தங்களது சேமிப்பைப் பணமாக வைத்திருப்பதைவிடத் தங்க நகைகளாக வாங்கிச் சேமித்து வைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர்.
அதற்கு வசதியாக வங்கிகளிலும் கூட 1 கிராம், 4 கிராம், 8 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று தங்கம் கிடைக்கிறது.
விழாக்களில் பலர் தங்கத்தை அன்பளிப்பாகக் கொடுத்துத் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.
அடிப்படைப் பொருட்களின் விலையோ நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. ஆனால் பணத்தின் மதிப்போ நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே சமயம் தங்கத்தின் மதிப்போ தினம் தினம் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
எப்படியாயினும், பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவே ஆர்வம் காட்டுகின்றனர். அவசரத்திற்கு அடகு வைத்துக் கடன் பெறுவது மிகவும் எளிது என்பதுகூடத் தங்கத்தை வாங்கக் காரணமாக இருக்கலாமோ!
நிலத்தை விற்பது – அடகு வைத்து வங்கியில் பணம் பெறுவது எல்லாம் இக்காலத்தில் அரிது.
‘எங்கோ இடிஇடித்தால் எங்கோ விளக்கணையும்’ என்பார்கள். அது போல, அமெரிக்காவில் டாலர் வீழ்ச்சியடைந்தால், நமது ஊரில் தங்கத்தின் விலை உயரும்.
அமெரிக்காவில் வங்கிகள் கடனை வாரி வாரி ஒரு சமயம் வழங்கின. ஆனால், அவற்றை வசூலிப்பதில் தற்பொழுது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கே நெருக்கடி என்றால், இங்கே தங்கம் விலை உயருகின்றது.
திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது பெட்ரோல். தங்கமும் திரவத் தங்கமான கச்சா எண்ணெயும் அக்காவும் தங்கையும் போல் உலகளவில் விளங்குகின்றன.
தங்கமும் கச்சா எண்ணெயும் 1:15 என்ற விலை விகிதத்தில் இருந்தன. அஃதாவது ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலைக்கு 15 பேரல் எண்ணெய் என்று இருந்த நிலை, தற்பொழுது 1:8 என்று மாறியிருக்கிறது. அஃது என்ன அவுன்ஸ் என்கிறீர்களா? ஓர் அவுன்ஸ் என்பது 3.10 கிராம்.
ஆபரணத் தங்கத்தின் தரம் நாட்டிற்கு நாடு வேறுபட்டிருக்கிறது.
விலை குறைவாக இருக்கிறது என உறவினர்கள் மூலம் வெளிநாட்டு நகைகள் வாங்குபவர்கள், இந்த விபரத்தைத் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
இந்தியா, இலங்கை, அரபு நாடுகள் – 22 காரட்; சீனா, தைவான், ஹாங்காங் – 24 காரட்; வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் – 21 காரட்; தெற்கு ஐரோப்பிய நாடுகள் – 18 காரட்; ரஷ்யா – 14 காரட்; அமெரிக்கா வடக்கு ஐரோப்பிய நாடுகள் – 8 முதல் 18 காரட் என நகைகளில் பயன்படுத்துகிறார்கள்.
உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதியளவு தங்கம் தரும் நாடு தென்னாப்பிரிக்கா. ஓர் ஆண்டிற்கு 700 டன் தங்கம். எனவே, தென்ஆப்பிரிக்காதான் தங்க உற்பத்தியில் முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், சமீபத்தில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சீனா – தென் ஆப்பிரிக்கா – அமெரிக்கா – ஆஸ்திரேலியா – இந்தோனேஷியா எனப் பல உலக நாடுகளில் தங்கம் உற்பத்தியாகிறது. நமது இந்தியாவிலும் ‘கோலார்’ தங்க வயலில் தங்கம் உற்பத்தியானாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கில்லை. ஆனால், தங்கத்தின் மீது தீராக் காதல் கொண்ட இந்தியர்கள் அதனை வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
ஏழைக்கு எட்டாக் கனி
நகைகளாக நடுத்தரக் குடும்பத்தினர் வாங்குவதைவிடப் பதுக்கல்காரர்களும், கருப்புப் பண முதலைகளும் தங்கள் கையிருப்பைத் தங்கமாக மாற்றி, பதுக்கி வைத்திருப்பதுதான் மிகுதி.
ஆனால், ஏழைகளுக்கு எட்டாக் கனியாய் இருக்கின்றனர் அக்காளும் தங்கையுமான பெட்ரோலும், தங்கமும். அவர்கள் என்று இரக்கம் காட்டுவார்களோ?; இறங்கி வருவார்களோ?; தெரியவில்லை. இரண்டு பேரும் நேர்விகிதங்கள்.
உலகம் முழுவதும் 1,45,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். இதில் 13,000 டன் இந்தியாவில் இருக்கிறதாம். மேலும், ஆண்டிற்கு 950 டன் தங்கத்தை இந்தியர்கள் வாங்கி விடுகின்றனர்.
இதில் பெரும்பாலான தங்கம் எதற்கும் பயனில்லாமல் பரணில், பஞ்சு மெத்தைக்குள், வங்கி லாக்கர்களுக்குள் ஏழைகளுக்கு எட்டாமல் சுகமாக முடங்கிக் கிடக்கிறது. இந்தப் பட்டியலைப் பார்த்தால் தங்கத்தின் விலை உயர்ந்த வேகம் புரியும்.
ஆண்டு ஒரு பவுன் (8 கிராம்) விலை
1930 14.80
1940 29.20
1950 79.36
1960 89.70
1970 1064.00
1980 2720.00
1990 3504.00
2000 4964.00
2005 6224.00
2015 20,000.00
செய்கூலி, சேதாரம்
தங்கத்தின் விலை இவ்வாறவாக இருந்த போதிலும், நமது நாட்டில் நகைக் கடையினர் செய்கூலி, சேதாரம், இனாம் என்று விளம்பரப்படுத்துகின்றனர்.
இஃது எலிப்பொறிக்குள் வடை வைத்துப் பிடிக்கும் தொழில்நுட்பம்.
தொழில் நுட்பம் மிகுந்த வேலைப்பாடுடன் நாம் செய்யும் நகைக்குக் கூட கூலி எவ்வளவு எனப் பார்த்தால் நம்மூர் கொத்தனார் சம்பளத்தைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.
ஆனால், ‘சேதாரம்’ என்ற ஒரு மாபெரும் ஆயதத்தைக் கொண்டு நம்மை வீழ்த்தி விடுவார்கள். நாம் வாங்கும் நகையின் எடையில் 20% வரை சேதாரம் என்று வாங்கும் படுபாதகர்கள் கூட இருக்கிறார்கள். இந்த விகிதாச்சாரம் மனிதருக்கு மனிதர் வேறுபடும்.
நாம் செய்கூலியின் மறுபெயர்தான் சேதாரம் என்று கருதி மன அமைதி கொள்ள வேண்டியதுதான்.
ஓற்றைப் பட இலக்கத்தில் அதிக பட்சம் (9%) சேதாரம் என நம்மிடம் பெற்றால் இவர் ஓரளவு கௌரவமான நேர்மையானவர்; நம்மிடம் ஒரு மரியாதை வைத்திருக்கிறார் என்று நாம் நினைத்துக் கொள்ளலாம்.
தங்கத்தின் தரத்தினைச் சோதிப்பதற்கு ‘உரை கல்’ என்று ஒன்று இருக்கும். தங்க நகைகள் மட்டுமல்லாது, தங்கக் கட்டிகளை முன்பெல்லாம் காசுகளாகப் பயன்படுத்தினர். அதன் தரத்தை அறிவதற்கு இந்த உரை கல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதில் இருந்துதான், தரத்தை அறிவதற்குப் பயன்படும் ‘உரை கல்’ என்ற சொல்லாட்சி இலக்கியங்களிலும் இடம் பெற்றது. ஆனால், நீண்ட அனுபவம் உள்ள வியாபாரி, பார்வையிலேயே தரத்தைச் சரியாகக் கூறி விடுவார்.
இந்த இடத்தில் ஆர்க்கிமிடீஸ் கதை நினைவுக்கு வருகிறது. கிரேக்க அரசன் செய்வித்த கிரீடமானது சுத்தத் தங்கமா? என்பதைக் கண்டறிய ஆலோசனை கேட்ட கிரேக்க மன்னனுக்குச் சரியான பதில் ஆர்க்கிமிடீசுக்குக் குளியலறையில் கிடைத்தது.
‘யுரெகா’ என்ற மகிழ்ச்சியில் அரைகுறை ஆடையுடன் கத்திக் கொண்டே அரண்மனைக்கு ஓடினார். அவர் கண்டுபிடித்த தத்துவம் இன்னும் அவர் பெயராலேயே வழங்கி வருகிறது.
தங்கத்தின் தரத்தை அளந்திட, அன்றே போராடியுள்ளனர். ஆனால், இன்று கணிப்பொறி மூலம் தங்கத்தின் தரத்தினை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் நிலை வந்திருக்கிறது. இருந்த பொழுதும், இதன் பயன்பாடு இன்னும் சிறு நகரங்கள் மற்றும் கிராமத்தை எட்டவில்லை.
உரை கல்லில் மிக அழுத்தமாக நான்கு முறை இடமும் வலமும் தேய்க்கும் பொழுது 400மி.கி. காணாமல் போய்விடும். நகை உரிமையாளருக்கு அன்றைய தினம் சேதாரம்; வியாபாரிக்கு அன்றைய தினம் வருமானம்.
கடைகளில் தங்க நகைகள் வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். பாலில் தண்ணீர் கலந்தால் வழக்கு; பெட்ரோல், டீசல், தேயிலை, ஆகியவற்றில் கலப்படம் செய்தால் வழக்கு. ஆனால், தங்கத்தில் செம்பு கலந்தால், வழக்கில்லை. இதை யாரிடம் போய்ச் சொல்லுவது?
916 முத்திரை
22 கேரட் தங்கம்; என்று வாங்கப்படும் தங்கத்தின் தரம் 14 கேரட்தான் இருக்கும். ஆனால், இப்பொழுது பெரும் நகரங்களில் நிலைமை சற்று மாறியிருக்கிறது. இன்று கடைகளில் வாங்கும் நகைகளில் ‘916’ முத்திரை இருக்கிறதா? என்று கேட்கும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
916 என்பது ஆபரணத் தங்கத்தில் 91.6% சுத்த தங்கம் இருக்கிறது என்பதைக் குறிக்கும்.
இதற்குக் கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ஜார்ஜ்க்கு, நாம் நன்றி சொல்ல வேண்டும். ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் வாங்கும்போது, 30 ஆயிரம் ரூபாய் ஏமாற்றப்படுகின்றனர்.
இந்த ஏமாற்று வேலையை தடுக்க 1999இல் கேரள உயர்நீதி மன்றத்தை ஜார்ஜ் அணுகினார். நீதி மன்றமும் அவருடைய கருத்து சரி என்று முடிவு செய்தது.
தங்கத்தில் 916 முத்திரை இருக்கிறதா? என்று கேட்கும் நாம் ஜார்ஜை மறக்கக் கூடாது. மத்திய அரசு தங்கத்தின் தரத்தை நிர்ணயம் செய்ய, ‘ஹால்மார்க்’; முத்திரை உடைய நகைகளை மட்டுமே விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதுவும் பெரும் நகரில்தான் நடைமுறைப்படுத்தப்பபட்டுள்ளது. அதிலும் சிக்கல்கள் உள்ளன; எதிர்காலம் நம்பிக்கை தருவதாக உள்ளது.
பல டன் மணலில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை எடுக்கிறார்கள். நவீன அறிவியல் உலகில் சேதாரத்திற்கு இடமே இல்லை.
இதையெல்லாம் நாம் தெரிந்தும் தெரியாதது போல் இருந்துவிட வேண்டியது இருக்கிறது. தங்கத்தின் விலை அதிகமாக அதிகமாகச் சேதார விகிதம் குறைய வேண்டும். அதுதான் தொழில் தர்மம். ஆனால், அப்படி குறைக்கப்படுவதில்லை.
பல கோடி ரூபாய் முதலிட்டு ஐந்து நட்சத்திரபாணியில் கட்டிடங்கள் கட்டி, கவர்ச்சிகரமான பேச்சாலும், விளம்பரத்தாலும் கவர்ந்திழுத்து, சேதாரம் என்னும் படுகுழியில் பாமரன் தள்ளப்படுகிறான். அவனை எந்த நுகர்வோர் சங்கமும் கண்டு கொள்வதில்லை; சங்கங்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை.
இந்திய அரசின் ‘ஹால்மார்க்’ முத்திரை என்பது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், தங்கத்தின் தரத்தைச் சரிபார்த்து, சரியான தரத்திற்கு வழங்கப்படும் முத்திரை ஆகும். இந்நிறுவனங்களை Bureau of Indian Standards – ‘BIS’ என்று கூறுவார்கள்.
தங்க நகைகளை உரசாமல், உருக்காமல் கம்ப்யூட்டர் உதவியுடன் நகையில் உள்ள அனைத்து உலோகங்களையும் பிரித்துத் தரம் அறியலாம். இதனை ‘Gold Purity Analyser’ என்று கூறுவர். இம்முறையில் மிகத் துல்லியமாகச் சில நிமிடங்களில் நகைகளின் தரத்தினை உறுதி செய்து கொள்ளலாம்.
இந்த வசதிககள் பெரிய நகரங்களில் மட்டுமே உள்ளன. இவ்வசதியின்மையினால் பெரிதும் பாதிக்கப்படும் பாமரர்கள் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும்தாம் இருக்கிறார்கள்.
நகை வாரியம்
நமது அரசு மக்களின் நலனுக்காக மீன் வள வாரியம், முட்டை வாரியம், பனை வாரியம், கேபிள் வாரியம், மணல் வாரியம் என்றெல்லாம் செயல்படுத்தி வருவது போல், நகை வாரியம் அல்லது தங்க வாரியம் என்று ஒன்றை ஆரம்பித்துப் பாமர மக்களைக் காப்பாற்ற முன்வரக் கூடாதா?
ஏதாவது ஒரு வங்கியுடன் இணைந்து செயல்பட்டால் பாமரருக்கும் அரசுக்கும் நல்லது. நஷ்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் சர்வோதய, கதர் வாரியங்களுடன் இணைந்தாவது ‘நகை வாரியம்’ செயல்படலாமா?
சேதாரம் ஒருபுறம்; செய்கூலி ஒருபுறம்; கல் ஆபரணங்களில் மறைந்திருக்கும் அரக்கு என்னும் அரக்கன் ஒருபுறம், இதற்கு மேலாக நம்மை வாட்டும் ‘வாட்’ வரி ஒருபுறம். இத்தனையும் மீறி, பாமரன் மகளிருக்கு நகை செய்ய வேண்டியிருக்கிறது. ‘அட!……… தங்கமே….. தங்கம்’.
– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்