“ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் போன்ற தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில், யாரோ மாடு மேய்க்கிற பெண் சாமி வந்து ஆடி அருள் வாக்கு சொல்வதை நம்பிக் கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து உறுதியாகக் கட்டியுள்ள அணை உடைந்து விடும்; அதை தடுக்க வேண்டும் என்று ஒரு ஊரே திரண்டு வந்து மனு கொடுக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?” என்று கலெக்டர் தலையில் அடித்துக் கொண்டார்.
ஆலந்துறை கிராமத்தை ஒட்டி ஓடும் அரசலாறு நேரே போய் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்க கடலில் சங்கமிக்கின்றது.
அதன் குறுக்கே பாசனத்திற்கு தேவையான தண்ணீரை தேக்க கட்டியிருக்கும் அணைதான் ஆலந்துறை அணை.
இதில் என்ன விசேஷம் என்றால் கடந்த இரண்டு வருடமாக பருவ மழை பொய்த்து போய் ஆறும் அணையும் வறண்டு கிடக்கின்றன.
மழை, வெள்ளம் இல்லை; தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்க்கிற அளவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அணையுமில்லை. தீவிரவாதிகளும் இல்லை. எப்படி அணை உடையும்?
கலெக்டரும் அதிகாரிகளும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. மனு கொடுக்க வந்த கிராமவாசிகளுக்கும் அணை உடைந்து விடும் என்று சொல்வதில் நம்பிக்கை இல்லைதான்.
ஆனால் பட்டம்மாள் சாமி வந்து ஆடும் போதெல்லாம் “ஆலந்துறை அணை உடைகிறது, ஆலந்துறை அணை உடைகிறது” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.
நல்லதோ கெட்டதோ பட்டம்மாள் சாமி ஆடி சொல்லிய எல்லாமும் ஒன்றன் பின் ஒன்றாய் நடந்தேற, எல்லோருக்கும் அணை உடைந்து விடும் என்ற பயம் தொற்றிக் கொண்டது. அணையை பாதுகாக்க சொல்லி மனு கொடுக்க வந்து விட்டார்கள்.
கலெக்டரும் வேறு வழியின்றி அணையை ரோந்து போலீசார் தினமும் ஆய்வு செய்ய உத்தரவு போட்டார். “கலெக்டராவது; போலீஸாவது; அணை உடையும்” அன்று இரவே பட்டு சாமி வந்து ஆடினாள்.
பட்டம்மாளின் கணவன் ராஜன் முரடன்; குடிகாரன். அவளின் அழகிற்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவன். இருந்த ஒரு குழந்தையும் இறந்து விட்டது.
கணவனின் குடியும், அவன் செய்யும் சித்ரவதைகளும் அவளால் தாங்க முடியவில்லை. பட்டம்மாளின் கணவனை ஊரார்கள் கண்டித்தும் திருந்துவதாக இல்லை.
அவனிடமிருந்து தப்பிக்கவே மஞ்சள் புடவைக் கட்டி ஊர் மத்தியில் உள்ள மாகாளி அம்மனுக்கு விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்ய ஆரம்பித்தாள்.
பட்டு விரதம் இருந்தாலும் ராஜன் அவளை விடுவதில்லை. அப்படி ஒரு வெள்ளிக்கிழமை. காலை முதல் விரதமிருந்து பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருத்தவளை வீட்டிற்கு பிடித்து இழுத்தான்.
“நாளை உனக்கு வேண்டியதை தருகிறேன். இன்று மட்டும் என்னை பூஜை செய்ய விடு” என்று அவள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை.
அன்றுதான் முதன் முறையாக பட்டம்மாளிற்கு ‘சாமி’ வந்தது.
“இன்று நீ என்னை தின்றால் நாளை உன்னை கார்கோடகன் தின்பான்” என்று தன் கணவனை பார்த்து சொன்னதுதான் முதல் அருள் வாக்கு. அது அப்போது யாருக்கும் புரியவில்லை. வேதனையில் உளறுகிறாள் என்று நினைத்தார்கள்.
அவள் கணவனோ “யாருடி கார்கோடகன்? உன் கள்ள புருஷனா?” என்று சொல்லி, அவளை மஞ்சள் புடவையோடு தலைமுடியை பிடித்து இழுத்துக் கொண்டு போய், எவ்வளோவோ மன்றாடியும் கேட்கமால் அவள் விரதம் அழித்தான்.
மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு பட்டுவின் கணவன் ராஜன் குடித்து விட்டு ஒரு மதகின் மேல் படுத்து கிடந்த போது நாகப்பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கால் பரப்பி இறந்து போனான். பாம்பின் மறுபெயர் கார்கோடகன். ஊர் ஆச்சர்யத்தில் மூழ்கியது.
பின்பு பட்டம்மாள் மஞ்சள் புடவை, குங்கும பொட்டு சகிதம் முழு நேர கோயில் சேவகி ஆனாள். மாடு மேய்ப்பதும், கறந்த பாலை அபிஷகத்தில் ஊற்றுவதுமாய் மாகாளி கோயிலை பராமரித்தாள்.
‘பட்டம்மாளைத் தீண்டினால், கார்கோடகன் வருவான்’ என எந்த ஆணும் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
எல்லோரும் பட்டம்மாளை “பட்டு சாமி” என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.
எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் பட்டுக்கு ‘சாமி’ வந்து விடும். அச்சமயத்தில் அவள் சொல்லும் சூசக அருள் வாக்கு அத்தனையும் விடாது பலிக்கிறது.
ஆரம்பத்தில் இதை ஒரு பொருட்டாக நினைக்காத ஊர் மக்கள் அவள் சொல்வது ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறுவதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் கிடந்தார்கள்.
ஒருமுறை பட்டு சாமி தன் அருள் வாக்கில் “இந்த ஊரில் 11 பெண்கள் 1 மணி நேரத்திற்குள் தாலி இழக்கப் போகிறார்கள்” என்று சொன்னாள்.
“வாய்ப்பே இல்லை” என்றார்கள் மற்றவர்கள்.
ஒரு வாரம் கழித்து கள்ளச்சாராயம் குடித்த ஊர்க்காரர்கள் 11 பேர் ஒரே சமயத்தில் அடித்தடுத்து 1 மணி நேரத்திற்குள் மாண்டு போனார்கள். அத்தனை பேரும் சம்சாரிகள்.
தொலைக்காட்சி, பத்திரிக்கை, மந்திரிகள் வருகை, போலீஸ் விசாரணை என ஆலந்துறை கிராமமே அல்லோகலப்பட்டது. பட்டம்மாள் எந்த சலனமுமின்றி காட்டோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாள்.
‘பட்டு சாமியும் மாடு மேய்க்கும் பட்டம்மாளும் வெவ்வேறாய் ஒரே உருவில் இருக்கிறார்கள்’ என்பதை ஊர் மக்கள் உணர தொடங்கினார்கள்.
இந்த 11 பேர் கள்ளச் சாராயம் குடித்து இறந்ததில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. நிறைய பேர் கோயிலில் சத்தியம் செய்து குடியை விட்டார்கள்.
“விவசாயக் கூலி, குடிசைவாசி பழனிச்சாமி பொண்ணு ஊர் மானத்தை காப்பாத்த போறா” என்று பட்டு சாமி அடுத்த வாக்கை உதிர்த்து.
“சோத்துக்கே வழியில்லாதவன் பொண்ணு ஊர் மானத்தை காப்பாத்துமா?” என்றவர்கள் மத்தியில் மூன்று மாதம் கழித்து நடந்த பன்னிரண்டாவது பொது தேர்வில் பழனி மகள் விண்ணரசி அரசு பள்ளியில் படித்து, மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி சாதனை புரிந்தாள்.
இந்த முறையும் தொலைக்காட்சி, பத்திரிக்கை, மந்திரிகள் நடிகர்கள் என ஆலந்துறைக்கு படையெடுத்து வந்தார்கள். ஆனால் எல்லோரும் பெருமைப்படும்படி கிராமமே கொண்டத்தில் திளைத்தது. கள்ளச்சாராய கெட்ட பேர் ஒழிந்தது .
பழனியும் விண்ணரசியும் பட்டம்மாளை தேடி ஓடினார்கள். அவள் எப்போதும் போல் காட்டுக் கரையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தாள்.
பக்கத்து கிராமத்தில் உள்ள பெரிய கோயில் திருவிழாவிற்கு ஆலந்துறை கிராம மக்களை ரொம்ப நாளாய் அனுமதிப்பதில்லை. ஊர் மக்கள் பட்டு சாமியிடம் முறையிட்டார்கள்.
“நம்மை அனுமதிக்கவில்லை என்றால் இந்த முறை திருவிழா நடக்காது. அப்புறம் எப்போதும் நடக்காது” என்று பட்டு சாமி பதிலுரைத்தது .
ஆனால் பக்கத்து கிராமத்தில் அவர்கள் அதை சட்டை செய்யவில்லை. “பட்டு சாமி என்ன கடவுளா?” என கேட்டார்கள். ஆலந்துறை கிராமத்தை ஒதுக்கி விட்டு திருவிழா ஏற்பாடுகளை தடபுடலாய் செய்தார்கள்.
முதல் நாள் தேரோட்டத்தில் தேரின் கோபுரம் மின்சார கம்பி மீது மோதி தேர் தீ பிடித்தது. திருவிழா நின்றது. போலீஸ் பெரிய கோயிலை மூடி சீல் வைத்தார்கள்.
பட்டு சாமி புகழ் மற்ற கிராமங்களுக்கும் பரவியது. எல்லோரும் பட்டு சாமியிடம் தங்கள் துயரங்களை கொண்டு வந்து கொட்டினார்கள்.
யார் எது சொன்னாலும் பட்டு சாமி ஒருடம்ளர் தண்ணீரில் திருநீறை தெளித்து குடிக்க கொடுத்தது.
அக்கிரமத்திலிருந்து முதல் முதலாய் மிலிட்ரிக்கு போன தன் மகன் உயிருக்கு உத்திரவாதம் கேட்டு நின்ற ஒரு ஏழைத் தாயிற்கு முடிக்கயிறை கொடுத்து தபாலில் அனுப்பி மிலிட்ரிக்காரன் கையில் கட்ட சொன்னாள். அந்த நூல் கயிறு அவன் உயிர் காத்தது. துப்பாக்கிகள் சிரித்தன.
மனநோயில் படுத்து கிடந்த பெரிய வீட்டு பையன் குணமாகி படிப்பை தொடர்ந்தான். 10 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த தனம் டீச்சருக்கு குழந்தை பிறந்தது. தீராத நோயில் கிடந்தவர்கள் எழுந்து வந்தார்கள். திருநீறு கலந்த ஓர் டம்ளர் தண்ணீர் அருமருந்தாகி இருந்தது.
பட்டு சாமி இப்போது “அணை உடையும்” என்று சொல்கிறது.
ஊர் மக்கள் கொடுத்த மனுவின் அடிப்படையில் போலீஸ் தினமும் அணையை சுற்றிச் சுற்றி வருகிறது .
போலீசாருக்கு நம்பிக்கையில்லை. பட்டம்மாளையும் ஆலந்துறை கிராமத்தையும் சபித்துக் கொண்டு ரோந்து பணி செய்தார்கள் .
வருடங்கள் உருண்டோடின. அணை அப்படியே இருந்தது. மழை வெள்ள அறிகுறிகளும் இல்லை. பட்டம்மாள் மௌனம் காத்தாள்.
தன் கால்நடைகளை ஒவ்வொன்றாய் வெளியூரில் கொண்டு போய் விற்க ஆரம்பித்தாள்.
“அரசலாற்று கரையோரம் யாரும் ஆடு மாடு மேய்க்க வேண்டாம்” என்று சொன்னாள். அதை யாரும் பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை. பட்டு சாமியின் பவர் போய் விட்டதாக பேசிக் கொண்டார்கள்.
ஒருநாள் அதிகாலை மாகாளி கோயில் மணி தானாக அடித்துக் கொண்டு பெரும் சத்தம் வந்தது.
நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கடல் பிளந்து கொந்தளித்து, ராட்சச அலைகள் அரசலாற்றில் புகுந்து அணையின் எதிர்புறமாக உள்நுழைய யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆலந்துறை அணை உடைந்து சுக்கு நூறானது.
ஊருக்குள் கடல் புகுந்தது.’சுனாமி’ என்றார்கள். நிறைய பேர் காணாமல் போனார்கள். அன்றிலிருந்து பட்டம்மாளையும் காணவில்லை.
இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமையானால் அரசலாற்றின் நடுவில் மஞ்சளாய் தெரிகிறது என்கிறார்கள் ஊர் மக்கள்.
எப்போதும் போல் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என தொழில் நுட்பத்தின் மகிமை சொல்லி, மஞ்சளாவது பச்சையாவது என நம்ப மறுக்கிறது மேல் மட்டம்.
சக்தி வாய்ந்த உங்கள் பட்டம்மாள் சுனாமியை ஏன் தடுக்கவில்லை என்றும் கேட்கிறார்கள். அது பற்றி பட்டம்மாளைத்தான் கேட்க வேண்டும்.
உங்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அல்லது வேறு தொழில் நுட்பம் மூலம் எங்கள் பட்டம்மாளை மறுபடியும் கொண்டு வர முடியுமா?
முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849
Comments
“அணை உடைந்த கதை – க.வீரமணி” அதற்கு 8 மறுமொழிகள்
நம் வாழ்வை வழி நடத்தும் இரு பெரும் சக்திகளில் ஒன்று அறிவியல்; மற்றது ஆன்மிகம்.
அறிவியல் என்பது நெடுஞ்சாலைப் பயணம். உறுதியான இலக்குகள், தெளிவான பாதை. பின்தொடரும் யாருக்கும் சந்தேகம் கிடையாது.
ஆன்மிகம் என்பது காட்டுவழிப் பயணம். போகுமிடம் புரியாது. பாதை தெரியாது. எல்லாப் பயணங்களும் நிறைவுறுமா என்றால் சொல்ல இயலாது.
அறிவியல் வாழ்வு தெளிவு தரும்; ஆனால் நிறைவு தராது.
ஆன்மிக வாழ்வு தெளிவற்றது; ஆனால் நிறைவு தரும்.
வாழ்க்கை என்பது நெடுஞ்சாலைப் பயணம் மட்டும் அல்ல என்பதைப் புரிந்து கொண்டவர்கள் நிறைவான வாழ்வு வாழ்பவர்கள்.
பட்டு சாமியின் வாழ்வும் வாக்கும் சரியா தவறா என்பது விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம்.
ஆனால் பிறர் கஷ்டத்திற்கு மருந்தாக இருந்த அவர் வாழ்வு நிறைவானது. அது என்றும் வணங்கத்தக்கது!
Super sir
அருமை
ஒரு கதைக்குள் ஒன்பது கதைகள்..
அடுத்தடுத்த அமானுஷ்யங்கள்..
எல்லாமே நடந்த கதை.
அணை உடைந்த கதை.
போலி சாமியார்கள் மத்தியில் பட்டுசாமியின் குறல் எடுபவது கடினம். பட்டு சாமி எனக்கு காஞ்சி சந்திர சேகரரை(முதலாமானவர்) ஞாபகபடுத்துகிறது. சார்.
உங்களுடைய ஓவ்வொரு கதையும் மறுமுறை அந்த கதாபாத்திரம் வரமாட்டார்களா.. என்ற வலியையும் ஏக்கத்தையும் தருகின்றது…
தமிழக கிராமங்களில் இன்றும் புழக்கத்தில் உள்ள அருள்வாக்கு சொல்லும் மரபினை ஏற்காதவர்கள், வெளிநாட்டு தீர்க்கதரிசிகள் எனச் சொல்லப்படும் “நாஸ்டிராடமஸ்” போன்றவர்களின் வாக்கினை ஏற்கத்தான் செய்கிறார்கள்.
பட்டு சாமி சொல்வது உடனே நிகழ்ந்தால் அவர்களை தூக்கிக் கொண்டாடுவது, சிறிது தாமதமாக நடந்தால் சக்தி போய்விட்டது என்று சொல்வது….
அறிவியலும் ஆன்மீகமும் உலகம் என்னும் பாலில் கரைந்த சக்கரை மற்றும் காப்பி பொடி போன்றவை… பிரிக்கவும் முடியாது. இரண்டுமே கூடினாலும் குறைந்தாலும் பிரச்சினை.
அவரவர் விருப்பம் மற்றும் சுவைக்கேற்ப அளவுடன் கலக்கலாம். மற்றவரின் கலவையை நிந்தித்தலாகாது.
இக்கதையில் எப்போது ஊர்மக்கள் பட்டு சாமியை நம்ப மறுத்ததோ அப்போது தான் அதன் வாக்கு பலித்தவுடன் மனமுடைந்து சென்று இருக்கும் என்று தோன்றுகிறது…
சாமியே ஆனாலும் சரி… அணை உடைந்தால் கட்டிக் கொள்ளலாம். மனது உடைந்தால்…?
மிக நேர்த்தியாக கதையை சுலபமாக புரியவைத்து அவருக்கே உரிய திறந்த கேள்வி பாணியில் கதையை நிறைவு செய்து இருக்கிறார்….
சிந்திக்கத்தான் வைக்கிறது. பட்டு சாமி இப்போது எங்கே?
அருமை. சிறுகதை கால நீட்டிப்பால் நீண்டிருந்தாலும், அதன் கருத்தாக்கம் மனதை சுண்டக் காய்ச்சிய புளிக்குழம்பைப் போல் சுள்ளென்று தைக்கிறது.
ஒடிப்போன பெண் கதாபாத்திரங்களும் அவர்களின் மேலான எதிர்பார்ப்புக்களும் ஆழமான வேதனையை உண்டாக்குவதை என்னவென்று சொல்வது?
ஒரு கதை எழுதச்சொன்னால் ஒன்றில் ஆறு சொன்னால் அதற்கு நாம் தயாராகப் போக வேண்டுமல்லவா?
குடிகாரனால் தான் இவ்வளவும் என்பது ஒரு பார்வை. மக்களின் இறை நமபிக்கைதான் என்பது ஒரு பார்வை. எதார்த்தம் அதுவாக நடக்கும் மக்கள் ஏமாளிகள் என்பது ஒரு பார்வை. இப்படி சாதியம் சார்ந்த, ஊர் சார்ந்த எத்தனையோ பார்வைகள்.
வார்த்தைகள் கதையின் தளத்தை எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றன. அப்படியே உறையவும் வைத்து விடுகின்றன, பட்டுசாமி மனதில் என்றும் மறையாத ஒரு சாமி தான் எனக்கு.