அண்ணல் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர். இவர் அரசியல் மாமேதை. தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர்.

அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இராம்ஜி சக்பால், பீமாபாய் ஆகியோருக்கு பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தார். அம்பேத்காரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜீ.

தந்தையார் இராம்ஜீ சக்பால் இராணுவ பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

சிறு வயதில் ஒரு முறை தனது சகோதரருடன் மாட்டு வண்டியில் பயணம் செய்த பொழுது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டு வண்டியிலிருந்து குப்பையைக் கொட்டுவது போன்று கீழே தள்ளிய கொடுமை நிகழ்ந்தது. இது அவரின் சிறுவயது துன்பத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

1900-ல் தனது தொடக்கக் கல்வியை முடித்த அம்பேத்கார் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். யாருடனும் பேச அனுமதி இல்லை. தண்ணீர் பருக வேண்டுமெனில் பிறர் ஊற்ற கையால் பருக வேண்டும்.

வகுப்பறையில் அமர தனியே கோணிப்பை வீட்டிலிருந்து கொண்டு வரவேண்டும். இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்கரின் பிஞ்சு மனம் வெம்பியது. அம்பேகர் என்பது இவரின் குடும்பப் பெயராகும்.

இவர் மீது அன்பு கொண்ட பீமாராவின் ஆசிரியர் மகாதேவ அம்பேத்கர் அம்பேகர் என்ற இவரின் குடும்பப் பெயரை அம்பேத்கர் என்று மாற்றி பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று அழைக்கச் செய்தார்.

1908ல் எல்வின்ஸ்டன் பள்ளியில் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பள்ளி கல்விக்குப் பின் அம்பேத்கர் இராமாபாய் என்ற பெண்ணை மணந்தார். பின் பரோடா மன்னர் பொருளுதவியுடன் பம்பாய் எல்வின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

உயர்கல்வி பயில 1913ம் ஆண்டு ஜுன் 4ம் நாள் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1915ல் முதுகலைப் பட்டமும் 1916ல் இலண்டனில் பொருளதாரத்தில் ஆய்வுப் பட்டமும் பெற்றார். பின்னர் மும்பையில் சிறிதுகாலம் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மீண்டும் இலண்டன் சென்று அறிவியலில் முதுகலைப் பட்டமும், பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். அம்பேத்கர் எழுதிய இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி என்ற நூல் இன்றும் நிதி நிலை வெளியிடும் பொழுது ஒவ்வொரு வரும் புரட்டிப் பார்க்கும் உயர்நூலாக உள்ளது.

இலண்டனில் இருந்து இந்தியா திரும்பிய பின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். கட்டணமின்றி ஏழைகளுக்கு வழக்காடி நீதியைப் பெற்றுத் தந்தார். இவர் அரசியல், சட்டம், சமூகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வணிகம், கல்வி, சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிகரற்ற அறிஞராகத் திகழ்ந்தார். ஒரு நாளில் பதினெட்டு மணிநேரம் கல்வி கற்பதற்காகவே செலவழித்தார்.

தந்தை பெரியார் 1924ஆம் ஆண்டு கேரளா வைக்கத்தில் நடத்திய ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு முயற்சியும் 1927 ஆம் ஆண்டு மார்ச் 20 நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக்குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டமும் முதலில் மனித உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் எனலாம்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1930ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன் என்று தன் பேச்சைத் தொடங்கினார்.

மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி மக்களால் ஆளப்படும் மக்களாட்சியையே நாங்கள் விரும்புகிறோம். வெறும் எஜமான் மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை எங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வந்தாலொழிய எங்கள் குறைகள் நீங்கா என மொழிந்தார்.

ஒடுக்கப்பட்டோரின் இவ்வுரிமைக்குரல் வட்டமேஜை மாநாட்டின் வழியே உலக அரங்கில் எதிரொலித்தது. மாநாட்டின் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் தொகுதியில் பொது வேட்பாளர் ஒருவரையும், தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளர் ஒருவரையும் தேர்ந்தெடுக்க இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.

காந்திஜி இதனை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக காந்திஜிக்கும், அம்பேத்காருக்கும் இடையே ‘பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு பொது வாக்கெடுப்பில் தனித் தொகுதி ஒதுக்கீடு வழங்க ஒத்துக்கொள்ளப்பட்டது.

இந்தியா விடுதலை பெற்றபின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவி ஏற்றுக் கொள்ளுமாறு காங்கிரசு அரசு கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆனார்.

இந்திய அரசியல் சட்டம் வகுக்க எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பலரும் செயல்படாமல் விலகினர். இறுதியில் அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியை செய்து முடித்தார். 1949 நவம்பர் 26ல் இந்திய அரசியலமைப்பு மக்களவையில் ஏற்கப்பட்டு 1950 சனவரி 26 அன்று முழு குடியரசு நாடாக இந்திய தன்னை அறிவித்தது.

முதல் உலகப் போருக்கு பின்னர் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கிங்டன்யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1935ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு இம்மூன்றும் தேவை என்றும் செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம் என்றும், உழைப்பும், கல்வியும் அற்ற செல்வம் மிருகத் தனம் என்றும் கூறினார்.

கல்வி என்பது தகவல்களை திணிப்பதாக இருக்கக்கூடாது. அது ஒருவனது ஊக்கத்தை தூண்டுவதோடு தனித்தன்மையை வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும் என்பது கல்வி பற்றி அம்பேத்கரின் கருத்தாகும்.

1946ஆம் ஆண்டு மக்கள் கல்வி கழகத்தை தோற்றுவித்தார். மும்பையில் இவர் உருவாக்கிய சித்தார்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் இயற்கை எய்தினார்.

இந்திய அரசு 1981ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை அம்பேத்கருக்கு வழங்கி கௌரவித்தது.

சாதி என்பது இந்திய சமுதாயத்திலிருந்து களையப்பட வேண்டிய களை என்றும், எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவம் என்பதும் அவரின் கூற்றாகும்.

அண்ணல் அம்பேத்கர் இந்திய நாட்டின் ஒளிமிகுந்த எதிர்காலத்தை பற்றிக் கனவு கண்ட இலட்சிய மனிதர். கூர்ந்த அறிவு வன்மை உடையவர். மனித உரிமைக்காக உழைத்தவர். கல்வி அறிவின்றி நாடு முன்னேற முடியாது என்று கூறியவர். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக தன்மை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டவர்.