அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம் என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் கூறுவதை காட்டுப்பூனைக்குட்டி கார்த்திகா தற்செயலாகக் கேட்டது.
‘இந்தப் பழமொழி ஏதோ மூஞ்சுறு எலியை பற்றி கேலியாக கூறுவது போல் அமைந்துள்ளதே’ என்று மனதிற்குள் எண்ணியது.
பழமொழியைப் பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என ஆர்வமுடன் ஆசிரியர் கூறுவதை தொடர்ந்து கவனிக்கலானது.
கற்றோரைக் கேலி செய்வதா?
ஆசிரியர் மாணவர்களிடம் “இப்பழமொழியை சிலர், அதிகமாக கல்வி கற்கும் ஒருவரைக் கேலி செய்வதற்கும் பயன்படுத்துவது உண்டு.” என்று கூறினார்.
அப்போது மாணவன் ஒருவன் எழுந்து “கல்விக்கு முக்கிய இடத்தை கொடுக்கும் நம் தமிழகத்தில், அதிகமாக கல்வி கற்கும் ஒருவரை கேலி செய்யும் விதமாக ஒரு பழமொழி தோன்றியிருக்க முடியுமா?” என்று கேட்டான்.
அதற்கு ஆசிரியர் “அன்னசத்திரம் ஆயிரம் கட்டினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என பாரதியை பாடிடச் செய்த தமிழுலகம் கல்வியை கேலி செய்வதை ஆமோதிக்குமா?” என்று கேட்டார்.
அதற்கு மற்றொரு மாணவன் எழுந்து “அப்படி என்றால் இதற்கு நேரான பொருள் தான் என்ன?” என்று கேட்டான்.
அதற்கு ஆசிரியர் “நான் இப்பழமொழிக்கான விளக்கத்தை உங்களுக்கு விளக்கிக் கூறுகிறேன் என்றார்.
ஆசிரியர் விளக்கம்
நம் வீடுகளில் சோறு சமைப்பதை நாம் அனைவரும் கண்டிருப்போம். பொதுவாக சோறு சமைத்து அதனை வடிப்பர். இவ்விதமாக அதிலுள்ள நீரை வடிக்கும் போது அந்த வடிநீருடன் முன்னால் உள்ள சில பருக்கைகள் விழுந்து விடுவதுண்டு.
அந்தப் பருக்கைகள் இறுதியில் ஆடு மாடுகளுக்கான கழுநீர் பானையில் வடிநீருடன் கொட்டப்படுவது உண்டு. இதைக் கூறவே ‘அதிக வடித்த முன் சோறு கழுநீர் பானையில் விழுந்ததாம்’ எனக்கூறிச் சென்றனர்.
அதாவது எந்த ஒரு காரியத்திலும் முந்திரிக் கொட்டை போன்று அவசரப்படும் மனிதர்களின் நிலை வடிநீருடன் வரும் பருக்கையை ஒத்ததாக அமையும் என்பதை விளக்கவே இந்தப் பழமொழி கூறப்பட்டது.” என்று கூறினார்.
‘அதிக வடித்த முன் சோறு’ என்பது நாளடைவில் ‘அதிகம் படிச்ச மூஞ்சுறு’ என்றானது.
பழமொழியையும், அதற்கான விளக்கத்தையும் அறிந்த காட்டுப்பூனைக்குட்டி கார்த்திகா வட்டப்பாறையினை நோக்கி விரைந்தது.
வட்டப்பாறையில் காக்கை கருங்காலன் “உங்களில் இன்றைக்கு யார் பழமொழியை கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டிருந்தது.
காட்டுப்பூனைக்குட்டி கார்த்திகா “தா..த்…தா” என்றது. திரும்பிய கருங்காலன் “காட்டுப்பூனைக்குட்டி கார்த்திகா நீ இன்றைக்கான பழமொழியை கூறப்போகிறாயா?” என்று கேட்டது.
காட்டுப்பூனைக்குட்டி கார்த்திகா “நான் இன்றைக்கு அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம் என்ற பழமொழியைக் கூறப்போகிறேன்” என்று தான் கேட்டறிந்த முழுவதையும் விளக்கிக் கூறியது.
இதனைக் கேட்ட காக்கைக் கருங்காலன் “குழந்தைகளே பழமொழிக்கான விளக்கம் எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942