அதிசய தேன் – சிறுகதை

இடம், பொருள், ஏவல் குறித்து எப்போதும் பேச வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவர். அதனை விளக்கும் கதைதான் அதிசய தேன். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கேகேய தேசம் என்றொரு நாடு இருந்தது. அந்நாட்டை வீரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்நாட்டின் அரசவைக்கு ஒருநாள் மலை தேசத்திலிருந்து ஒருவன் வந்தான்.

அவன் கையில் தேன் குடுவையை வைத்திருந்தான். அவனைப் பார்த்ததும் அரசவையிலிருந்த அமைச்சர் ஜெயவீரனுக்கு எரிச்சல் வந்தது.

வந்திருந்த தேன் குடுவைக்காரனோ அரசரைப் பார்த்து வணங்கினான்.

“அரசே, நான் கொம்பு மலைப் பகுதியிலிருந்து வருகிறேன். இது அதிசய தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசயப் பூக்களிலிருந்து தேனீக்கள் எடுத்த‌ தேன் இது. உங்களுக்காக இதனைக் கொண்டு வந்தேன்.” என்று அரசனிடம்  அவன் கூறினான்.

இதனைக் கேட்டதும் அரசன் வீரவர்மன் மிக்க மகிழ்ச்சி அடைந்து அவனுக்கு பொற்காசுகள் அடங்கிய முடிச்சு ஒன்றை பரிசளித்தார்.

பரிசினைப் பெற்ற தேன் குடுவைக்காரன் அரசனுக்கு நன்றி தெரிவித்தான்.

நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் ஜெயவீரன் எரிச்சலடைந்தான்.

எப்படியாவது தேன் குடுவைக்காரனுக்கு அரசர் கொடுத்த பரிசை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று எண்ணினான்.

உடனே அமைச்சர் தேன் குடுவைக்காரனிடம் “நீ சாதாரண தேனை அதிசய தேன் என்கிறாய். அரசரை நீ ஏமாற்றுகிறாயா?” என்றார்.

அதற்கு அவன் “ஐயா, இந்த தேனை அருந்துபவர்கள் பூரண ஆயுளுடன் ஆரோக்கியமாக‌ வாழ்வர் என்று எங்களுடைய மூதாதையர்கள் வழிவழியாகச் சொல்லிச் சென்றுள்ளனர்.

ஆதலால்தான் நாம் இத்தேனை அருந்துவதைவிட, நாடாளும் நம்முடைய அரசன் அருந்தினால், நீண்ட ஆயுள் அவருக்கு கிடைப்பதுடன், அவரால் நம்முடைய மக்களின் வாழ்வும் செழிக்கும் என்று எண்ணி இதனைக் கொண்டு வந்துள்ளேன்.” என்று கூறினான்.

இதனைக் கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்து அவனுக்கு மேலும் ஒரு பொன் முடிப்பை வழங்கினார். அப்போது பொன் முடிப்பிலிருந்து நாணயம் ஒன்று வெளியே விழுந்து உருண்டது.

இதனைக் கண்டதும் தேன் குடுவைக்காரன் வேகமாக ஓடிச் சென்று அதனை எடுத்தான்.

நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் “போராசைக்காரன், உருண்டு விழும் ஒருநாணயத்தையாவது விடுகிறானா பார்.” என்று முணுமுணுத்தார்.

அமைச்சரின் முணுமுணுப்பைக் கேட்டதும் தேன் குடுவைக்காரன் “ஐயா, இந்த நாணயத்தில் அரசரின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆதலால் யாருடைய காலடியும் இந்நாணயத்தில் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதனை ஓடிச் சென்று எடுத்துத்தேன்.” என்று கூறினான்.

இதனைக் கேட்டதும் அரசன் மற்றும் ஒரு பொன் முடிப்பை வழங்கினான்.

அமைச்சர் ‘நாம் சும்மா வாயை மூடிக் கொண்டிருந்தால் இரண்டு பொன்முடிப்புகள் மீதமாயிருக்கும்’ என்று மனதிற்குள் எண்ணினார்.

ஆதலால் எல்லோரும் இடமறிந்து, சூழ்நிலையறிந்து பேசுவது மிகவும் அவசியமாகும்.

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.