அதிபத்த நாயனார் கொடிய வறுமையான நிலையின்போதும், கடலில் கிடைத்த தங்க மீனை தாம் கொண்ட கொள்கையின்படி இறைவனுக்காக அர்ப்பணித்த மீனவத் தலைவர்.
தங்க மீனே கிடைத்தபோதும் தாம் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு ஏற்ப, அதனை இறைவனுக்காக அர்ப்பணித்த அதிபத்த நாயனார், கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
அதிபக்தர் என்றே பெயரே மருவி அதிபத்தர் என்றானது. அதிபக்தர் என்பதற்கு மிகவும் தீவிரமான பக்தர் என்பது பொருளாகும்.
பண்டைய கால சோழ நாட்டில் இருபெரும் நகரங்கள் சிறந்த துறைமுகங்களாக விளங்கின. அவை காவிரி பூம்பட்டினம் மற்றும் நாகபட்டினம் ஆகியவை ஆகும்.
முற்காலத்தில் கடற்கரையை ஒட்டிய நகரங்கள் பட்டினங்கள் என்று அழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
துறைமுக நகராக விளங்கிய நாகபட்டினத்தில், எப்போதும் கப்பலில் பொருட்களை ஏற்றியும் இறக்கியும் இருந்ததால் மிகுந்த ஆரவாரத்துடன் சுறுசுறுப்பாக இயங்கிய வண்ணம் இருந்தது.
நெய்தல் நிலப்பகுதியான நாகபட்டினத்தில் மீன் பிடித்தலைத் தொழிலாகக் கொண்ட மக்கள் வாழும் நுளைபாடி என்னும் பகுதி இருந்தது. அப்பகுதியின் தலைவராக அதிபத்தர் விளங்கினார்.
அவர் சிவபெருமானிடத்தும் அவரின் அடியவர்களிடத்தும் பேரன்பு கொண்டிருந்தார். மீன்பிடித் தொழிலில் சிறந்தவரான அவருக்கு, இறையருளாலும் அதிக அளவு மீன்கள் கிடைத்தமையால் வசதி மிக்கவராய் விளங்கினார்.
தமிழர்கள் எவ்வகைத் தொழிலைச் செய்தாலும், அதில் கிடைக்கும் முதல் பொருளை இறைவனுக்கு படைப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள்.
அந்த வகையில் அதிபத்த நாயனார் தாம் பிடிக்கும் முதல் மீனை இறைவனுக்கு அர்ப்பணிப்பதை வழக்கமாகக் கொண்டு அதனைக் கொள்கையாகப் பின்பற்றினார்.
முதலில் பிடிக்கும் மீன் பெரிதாக இருந்தாலும் அல்லது ஒரு நாளில் ஒரே ஒரு மீனை மட்டும் பிடிக்க நேர்ந்தாலும், அதனை இறைவனுக்கு என்று கடலில் விட்டு விடுவார். இவ்வாறு தாம் கொண்ட கொள்கையில் தவறாது நடந்து வந்தார் அதிபத்தர்.
இவ்வாறு இருக்கையில் இறைவனின் சோதனையினால் பல நாட்கள் ஒரு மீனே கிடைத்தது. அவர் அதனை இறைவனுக்கு சமர்ப்பணம் என்று கூறி கடலில் விட்டுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினார்.
நாளடைவில் மீன்கள் ஏதும் கிடைக்காததாலும், ஒரு மீன் மட்டும் கிடைத்த நாட்களில் அதனை கடலில் விட்டு விட்டதாலும் அதிபத்தரின் செல்வ வளம் குறையத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்த நாட்களிலும் ஒற்றை மீனே நாள் ஒன்றுக்குக் கிடைக்க, அதனை அவர் கடலில் விட்டுவிட்டு தம் கொள்கையில் உறுதியாக நின்றார்.
தங்க மீன்
வீட்டில் தம்முடைய மனைவி, மக்கள் பட்டினி கிடந்த நிலையிலும் கிடைக்கும் ஒற்றை மீனை இறைவனுக்கு சமர்ப்பிப்பதை அவர் நிறுத்தவில்லை.
அவ்வாறு இருக்கையில் ஓர்நாள் அதிபத்தர் கடலில் வலையை வீசியபோது பெரிய மீன் ஒன்று அகப்பட்டது. உடனிருந்தோர்கள் எல்லோரும் சேர்ந்து அதனை வெளியே இழுத்தனர்.
வெளியே இழுத்து பார்த்தபோது அதனுடைய உடல் முழுவதும் பொன்னிறமாகவும், கண்கள் மற்றும் செதில்கள் நவமணிகளாகவும் காட்சியளித்தன.
அதனை கண்ட மற்றவர்கள் “இப்பொன்மீன் நல்ல விலைக்குப் போகும்” என்று ஆச்சர்யத்துடன் கூறினர்.
அப்போது அதிபத்தர் சலனம் ஏதும் இன்றி “இது இன்றைக்குப் பிடிக்கும் முதல் மீன். ஆதலால் இது இறைவனையே சாரும்” என்று கூறி கடலில் விட்டார்.
அவருடைய செயலைக் கண்ட எல்லோரும் வியந்தனர்.
அப்போது இறைவனார் உமையம்மையோடு விடை வாகனத்தில் காட்சி அளித்தார். அதிபத்த நாயனாருக்கு நிலைத்த இன்பமான வீடுபேற்றினை அளித்தார்.
அதிபத்த நாயனார் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
கொடுமையான வறுமையிலும் கிடைத்த தங்க மீனை இறைவனுக்காக அர்ப்பணித்த அதிபத்த நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் ‘விரிதிரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்‘ என்று புகழ்கிறார்.