அதிரடி ஆட்டம்

பூங்கா இருக்கையில் இளைப்பாறிக் கொண்டு இருந்தாள் கவிதா. அவள் இருக்கையின் முன்பிருந்த நடைபாதையில் முகேஷ் நடந்து கொண்டிருந்தான். சட்டென்று அவனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸ் நடைபாதையில் விழுந்தது.

இதைக் கவனித்த கவிதா குனிந்து அதை எடுத்து, “ஹலோ சார் உங்க பர்ஸ் கீழே விழுந்துடுச்சு இந்தாங்க” அவள் பர்சை நீட்டவும், முகேஷ் புன்னகைத்தபடியே வாங்கிக் கொண்டான்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க” சொல்லிவிட்டு அவன் நடக்க ஆரம்பித்தான்.

கவிதா இருக்கையில் அமர்ந்து அருகில் இருந்த தண்ணீர் பாட்டில் திறந்து குடிப்பதற்காக தலையை உயர்த்தினாள்.

அதிரடியாக அங்கு வந்த தீபன் அவள் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தரையில் தட்டி விட்டான்.

“இடியட்! எதுக்காக குடிக்க போன தண்ணிய தட்டி விட்ட?” கோபத்தில் வெடித்தாள் கவிதா.

நீங்க பர்ஸ் எடுக்க குனிஞ்சப்போ, உங்க இருக்கைக்குப் பின்னால இருந்த ஒருத்தன் தண்ணி பாட்டில மாத்தி வச்சான். சந்தேகப்பட்டு, அவன கையோட பிடிச்சு விசாரிச்சப்போ, அதுல மயக்க மருந்து கலந்திருக்கிறதா சொன்னான். அதான் தட்டி விட்டேன்.

அது மட்டும் இல்ல, உங்க கவனத்தை திசை திருப்புறதுக்காக பர்ச வேணும்னு கீழ போட்டவன் இவன் பிரண்டு தான். உங்க கையில இருக்கிற பணம், மொபைல் எல்லாத்தையும் திருடுறதுக்கு போட்ட பிளான் தான் அது. அவனும் எங்க கண்காணிப்புல தான் இருக்கான்”

“சாரி சார்! நீங்க போலீசுன்னு தெரியாம தப்பா பேசிட்டேன்.”

கவிதா கூறியதை எதுவும் காதில் வாங்கிக் கொள்ளாமல், முகேஷ்சை பிடிக்க ஓடினான் தீபன்.

M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172