அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஏழாவது பாடலாகும்.
வாதவூரடிகள் எனப்படும் மாணிக்கவாசகர் எளியவனாகவும், அரியவனாகவும் விளங்கும் இறைவனான சிவபெருமானின் மீது திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.
திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து, மொத்தம் 30 பாடல்கள் மார்கழி மாத இறைவழிபாட்டில் பாடப்படுகின்றன.
திருப்பள்ளியெழுச்சி தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் ஒன்று. உயிரினங்களைப் போன்று, இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி, துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன.
அதாவது நம் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இறைஞானத்தை தட்டி எழுப்ப எனப் பொருள் கொள்ளலாம்.
பொதுவாக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில் அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும், ரங்கநாதப் பெருமானின் மீது தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் புகழ் பெற்றவை.
இப்பிறப்பின் உள்ள உடலானது ஆலயமாகவும், உயிரானது சிவமாகவும் திகழ அருளுமாறு மாணிக்கவாசகர் இறைவனிடம் வேண்டுகிறார்.
சிவானந்த அனுபவம் பழம் போன்றும், அமுதம் போன்றும் இருப்பதை தேவர்கள் அறிய மாட்டார்கள். அது அடியவர்களுக்கு எளிதாகவும், ஏனையோருக்கு அரிதாகவும் இருக்கிறது.
எங்களை ஏவல் செய்யும் முறைமையைக் கூறினால் அதன்படியே நடப்போம். எம்பெருமானே பள்ளியிலிருந்து எழுந்தருவாயாக என்று இறைவனை மாணிக்கவாசகர் வேண்டுகிறார்.
அடியர்கள் தங்களின் உடலை ஆலயமாக அமைத்துக் கொண்டால் இறைவன் கட்டாயம் அதில் குடி புகுவான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
இனி திருப்பள்ளியெழுச்சி ஏழாவது பாடலைக் காண்போம்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 7
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு, இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும்
மதுவளர் பொழில் திருஉத்திர கோச
மங்கையுள்ளாய் திருப்பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
விளக்கம்
சிவானந்த அனுபவம் எப்படிப் பட்டது எனவும், அடியவர்கள் தங்களை எவ்வாறு எண்ணினால் இறைவனை அறியலாம் எனவும் இப்பாடல் விளக்குகிறது.
தேன் சிந்தும் மலர்களை உடைய சோலைகள் சூழ்ந்த, திருஉத்திர கோச மங்கை என்னும் தலத்தில் எழுந்திருக்கும் இறைவனே, திருப்பெருந்துறையின் அரசனே!
சிவானந்த அனுபவம் பழத்தினைப் போன்று இனிப்பாகவும், அமுதம் போன்று தெவிட்டாததாகவும், அடியவர்களுக்கு எளிதாகவும், ஏனையோருக்கு அரிதாகவும் இருப்பதை, அறிவில் சிறந்த தேவர்களாலும் வரையறுத்து கூற இயலவில்லை.
இவ்வுலகத்தில் இப்பிறப்பிலே வந்து அமைந்ததாகிய உடலாகிய இது சிவபெருமானது திருமேனியாகத் திகழுமாறும், இவ்வுடம்பில் விளங்கும் உயிராகிய இவன் அவனாகிய சிவமாக விளங்குமாறும் அருளி நின்று எங்களை ஆட்கொண்டருள்வாயாக.
இறைவா, நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? அந்த முறைமையைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம். எம் பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக.
அடியவர்கள் தம்தம் உடலினை, இறைவன் கோயில் கொண்டு உறையும் ஆலயமாக அமைத்துக் கொண்டால், இறைவன் திண்ணமாக அவ்வுடலில் எழுந்தருளுவான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!