யாருமற்ற இரவில் நான் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கிறேன்
ஒருநாள் அது என்னை வெகுவாகக் கடிந்து கொண்டது
நான் எவ்வளவு முறையிட்டும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை
கொஞ்சம் மூர்க்கமாகக் கூடத் தோன்றியது
கொன்று ஒழித்தால் தான் என்ன?
திடீரென்று விழித்துக் கொண்டது
நர மாமிசத்தைப் பலி கேட்பதைப் போல மிச்சமிருந்த
இரவை என்னோடு நெருக்கமாக அணைத்துக் கொள் என்றது.
‘முடியாது’ என்று திமிரி எழுந்தாலும் கூட, என் கால்களில் விலங்குகளால் பூட்டப்பட்டிருந்தது
யாருமற்ற அந்த தனிமை, இனிமை, இரவு எல்லாமுமான என்னை
கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க முயற்சித்தது
நெருங்கி வரும் போதெல்லாம் அதை கவனமாக
தோள் மீது விழுந்த பல்லியைப் போல படக்கென்று தூக்கி தூர வீசுகிறேன்
திரும்பத் திரும்ப ஓர் அட்டைப் பூச்சியைப் போல் என்னை ஒட்டிக் கொள்கிறது
என்னை பெரும் குற்றவாளியாக கூட மாற்றுவதற்கு முயற்சி செய்தது
அதனிடம் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்திக் கொண்டே இருந்தது மனது
அதனிடமிருந்து விடுதலையடைய போராடிய போராட்டம்
ஒரு விடியலைக் காண்பதற்கான முயற்சியில் அடங்கியிருக்கிறது
இன்னும் நான் உங்களிடம் கதைக்க விரும்புகிறேன்
ஆனாலும் கூட என் நெஞ்சுக்கு நெருக்கமானது அது
அதை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதில்
எனக்கு அச்சமில்லை!
எ.பாவலன்
drpavalan@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!