அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன் என்ற பழமொழியை இரு பெண்களிடம் பாட்டி ஒருவர் கூறுவதை கரடிக்குட்டி கற்பகம் கேட்டது.
‘பழமொழிக்கான விளக்கத்தையும் அறிந்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டது.
அப்பொழுது பெண்களில் ஒருத்தி “பாட்டி இந்தப் பழமொழி ஏதோ சொல்லக்கூடாத ஒன்றை சொல்வதால் கேடு விளையும். வாயும் வலிக்கும். எனவே, அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன் என நொந்து கொள்வதைப் போல உள்ளதல்லவா?” என்று கேட்டாள்.
அதற்கு பாட்டி “நீ சொல்வது என்னவோ உண்மைதான். ஆனால், இதன் உண்மையான பொருள் வேறுவிதமானது. இப்பழமொழி தோன்றிய வரலாற்றைக் கூறுகிறேன். அப்பொழுதுதான் இப்பழமொழி உங்களுக்கு நன்கு விளங்கும்.
ஒரு மடத்தில் மூன்று ஆண்டிகள் இருந்தனராம். மூவரும் ஒருவருக்கொருவர் சற்றும் குறைவில்லாத வகையில் சோம்பேறிகளாக இருந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த மடத்தில் ஒரு நாள் தீப்பற்றிக் கொண்டது. தீ எரிவதை மூவரில் ஒருவன் கண்டான். சாதாரணமாக தீ எரிவதை கண்டால் ஆடுமாடுகள் கூட பதறும், வேறுஇடம் நகர முயற்சி செய்யும்.
ஆனால், தீயை கண்ணால் கண்ட முதலாவது சோம்பேறி ஆண்டியோ வேறு புறமாக திரும்பிப் படுத்துக்கொண்டே “அம்பலம் வேகுது ஐயன்மீர்!” என்று மற்ற இருவருக்கும் கேட்கும் விதமாகக் கூறினான்.
முதலாவது ஆண்டி கூறியதைக் கேட்ட இரண்டாவது ஆண்டியாவது பதறி எழுந்தானா என்றால் இல்லை.
அவனும் சாகவாசமாக புரண்டு படுத்துக் கொண்டே “அதையும் தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன்” என முதலாவது ஆண்டிக்கு கோபமாக பதில் கூறிவிட்டுத் தூங்கலானான்.
மூன்றாவது ஆண்டியோ இருவரின் பேச்சை கேட்டுக்கொண்டு பதிலேதும் சொல்லாது வேறு புறம் திரும்பிப் படுத்துக் கொண்டே “ம்..ம்..ம்…” எனக் கடுமையாக முனகிக் கொண்டே தூங்கலானான்.
அதாவது “என் தூக்கத்துக்கு இருவரும் இடையூறு செய்கிறீர்கள். அமைதியாகத் தூங்குங்கள்” என்று சைகையால் சொல்லிவிட்டு தூங்கலானான்.
நெருப்பிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளாமல் சோம்பேறித்தனமாக இருந்து விட்டார்கள்.
இப்படியாக ஒருவரை ஒருவர் மிஞ்சிய இந்த மூன்று சோம்பேறி ஆண்டிகளும் தீயில் வெந்து சாம்பலானார்களாம். அதிலிருந்து சோம்பேறிகளை கண்டிக்கவே இந்தப் பழமொழி உண்டானது.
“தமது வீடுகளில் யாராவது சோம்பேறிகள் இருந்தால் இந்தப் பழமொழியை கூறி அவர்களை நம் முன்னோர்கள் திருத்தி வந்தனர். கால மாற்றத்தால் இன்று இப்பழமொழியின் பொருள் மாறிவிட்டது.” என்று பாட்டி கூறினார்.
அதனைக் கேட்ட கரடிக்குட்டி கற்பகம் சந்தோசத்தில் காட்டை நோக்கி வேகமாகச் சென்றது. வழக்கமாக எல்லோரும் கூடும் வட்டப்பாறையினை அடைந்தது.
எல்லோருக்காகவும் காத்திருந்தது. மாலை வேளை நெருங்க ஆரம்பித்ததும் முதலில் காக்கை கருங்காலன் வட்டப்பாறைக்கு வந்தது.
அங்கிருந்த கரடிக்குட்டி கற்பகம் காக்கை கருங்காலனைப் பார்த்து “வணக்கம் தாத்தா. இன்றைக்கு பழமொழி கூறுவதற்கு என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டது.
காக்கை கருங்காலனும் “சரி கரடிக்குட்டி நீயே இன்றைக்கான பழமொழியைக் கூறு. பழமொழிக்கான விளக்கம் உனக்கு தெரியுமா?” என்றது.
அதற்கு கரடிக்குட்டி “பழமொழிக்கான விளக்கத்தை நான் அறிந்து கொண்டு வந்துள்ளேன் தாத்தா” என்றது.
“சரி. ரெம்ப நல்லது. எல்லோரும் வந்தவுடன் நீ பழமொழியையும் விளக்கத்தையும் தெளிவாக்கக் கூறு” என்றது.
இருவரும் சிறிது நேரம் காத்திருந்தனர். பின் எல்லோரும் வட்டப்பாறைக்கு வந்தனர்.
காக்கை கருங்காலன் எழுந்து “என் அருமைக் குழந்தைகளே. இன்றைக்கு கரடிக்குட்டி கற்பகம் பழமொழியையும், அதற்கான விளக்கத்தையும் உங்களுக்கு கூறுவான்” என்றது.
கரடிக்குட்டி கற்பகம் எழுந்து “எல்லோருக்கும் வணக்கம். நான் இன்று அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன் என்ற பழமொழி மற்றும் அதன் விளக்கத்தைக் கூறுகிறேன்” என்றுகூறி தான் கேட்டு அறிந்த பழமொழி மற்றும் விளக்கத்தை விவரித்தது.
அதனைக் கேட்ட காக்கைக் கருங்காலன் “எல்லோருக்கும் பழமொழி புரிந்தது தானே. உங்களில் பழமொழியைக் கூறாதவர்கள் நாளைக்கு பழமொழி பற்றிக் கூறுங்கள்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942