அத்தை மடி மெத்தையடி

அழைப்பு மணி ஒலித்தது. விசாலாட்சி கதவைத் திறந்தாள்.

அவள் முன்பு பணி புரிந்து வந்த நிறுவனத்தின் மேலாளர் மாலினி நின்று கொண்டிருந்தாள்.

“வாங்க மேம்!” முகம் மலர வரவேற்றாள் விசாலாட்சி.

வெளியில் இருந்து வந்த இரண்டு சிறுவர்கள், மாலினியைத் தாண்டி உள்ளே ஓடினார்கள்.

மாலினி உள்ளே வந்தாள். ஒரே அச்சில் வார்த்தது போலிருந்த, மின்னல் வேகத்தில் மறைந்த சிறுவர்களை எண்ணி வியந்தாள் மாலினி.

சோபாவில் அமர்ந்தாள். விசாலாட்சி அவளுக்கு தண்ணீர் கொடுத்தாள்.

“ஆபீஸில் எல்லாரும் எப்படி இருக்காங்க?” கேட்டாள் விசாலாட்சி.

“இருக்காங்க. நேரா விஷயத்துக்கு வர்றேன். நீ பி ஏ வாக ஒர்க் பண்ணியே அந்த ஜேஎம்டி குணா தான் உன்னைப் பார்த்து விட்டு வரச் சொன்னாரு!” என்றாள் மாலினி.

“என்ன மேம், மறுபடியும் என்னை அங்க வேலைக்கு வரச சொல்றாரா சாரு?” கேட்டாள் விசாலாட்சி.

“இல்ல அது வந்து அவர் பிள்ளை சதீஷுக்கு சரியா வரன் அமையல. நீ அவரோட மருமகள் ஆகணும்னு விரும்பறாரு” முடித்து விட்டு விசாலாட்சியின் முகத்தை ஆராய்ந்தாள் மாலினி.

நாற்காலியில் அமர்ந்த விசாலாட்சி பேசினாள் “நீங்க தான் சுத்தி வளைக்காம வந்துட்டீங்க. ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள்ல ஒரு நல்ல காரியம் செய்ய நினைச்சு வந்திருக்கீங்கன்னு புரியுது.

என் நிலைமையை சொல்றேன். பெரிய கதை. முடிஞ்ச அளவு சுருக்கமா சொல்றேன்.

ஓடி ரூம் உள்ள போன பசங்க என் அண்ணன் கதிரவனோட பசங்க. ட்வின்ஸ் தினேஷ், ராகேஷ்ன்னு பேரு.

எங்க அண்ணன் பிசினஸ்ல ஜெயிச்சவரு அண்ணி தேன்மொழியும் அவருக்கு பிசினஸ்ல கூட இருந்து பேயா வேலை செய்வாங்க.

ஐந்து வருடங்களுக்கு முன்பு, அவங்க நெடுஞ்சாலையில் கார்ல பயணம் போனப்ப நெடுஞ்சாலையில் எதுக்கோ திடீர் கலவரம் ஏற்பட்டு அதுல அண்ணன் அண்ணி ஓட்டுநர் மூணு பேரும் அநியாயமாக போய் சேர்ந்துட்டாங்க.

பிசினஸ் எல்லாம் அண்ணி கூட பொறந்தவங்க எடுத்துகிட்டாங்க. இந்த பசங்க அத்தையோட இருப்பேன்னு என் கூட ஒட்டிகிட்டாங்க.

அவங்க நீதிமன்றத்தில் என் மீது வழக்கு போட்டாங்க. எங்க அக்கா பசங்கள எங்க கிட்ட கொடுக்கணும் கேட்டாங்க.

கோர்ட்ல நீதிபதி, உளவியல் மருத்தவரை பசங்க கிட்ட போய் பேச சொன்னாரு. பசங்க அத்தை கிட்ட இருப்போம்னு தீர்மானமாக சொன்னதால நீதிபதி பசங்க என் கிட்ட வளரட்டும்னு தீர்ப்பு சொல்லிட்டாரு.

எங்க சித்திய, அம்மாவோட தங்கைய அவங்க பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் சேர்த்து இருக்காங்கன்னு தெரிஞ்சு அவங்கள அழைச்சிட்டு வந்து நானும் அவங்களுமா இந்த பசங்கள பார்த்துகிட்டு வரோம்.

நான் வேலைக்குப் போறதுனால சித்தி எங்களுக்கு ஒத்தாசை.

திருமணம் பேச வர்றவங்க எல்லாம் இந்த மூணு ஜீவனுக்கும் மாற்று ஏற்பாடு பண்ணணும்; எக்ஸ்ட்ரா லக்கேஜ் கூடாதுன்னு வாய்க்கு வந்தபடி பேசறாங்க.

சித்திக்கு காலம் கொஞ்சமா இருக்கலாம். ஆனா பசங்க, அவங்களை நான் விட தயாராக இல்லை. பிள்ளைய பெத்தவங்க குழந்தைகளோட ஏத்துக்க தயாராக இல்லை. இதுதான் மேம் என் நிலைமை” முடித்தாள் விசாலாட்சி.

மாலினி எழுந்து நின்றாள். விசாலாட்சியை அணைத்துக் கொண்டாள். அறையைத் திறந்து கொண்டு சிறுவர்கள் உடன் வெளிப்பட்ட அவளுடைய சித்தி சாந்தா இந்த காட்சியைப் பார்த்தார்.

மாலினி நெகிழ்ந்து போய் பேசினாள்.

“பிள்ளை பெறா விட்டாலும் பெண் என்பவள் தாய்ன்னு நீ நிரூபிச்சுட்டே. குணா சார் இதுக்கு உடன்பட மாட்டாரனு நெனக்கிறேன். ஆனாலும் உன் மனசுக்கு ஏத்த மாங்கல்யம் விரைவில் கிடைக்க இறைவன் அருள் புரிவான். சரி நான் வரேன். வரேன்ம்மா!” என்று அவளிடமும் சித்தியிடமும் விடை பெற்று வாசலை நோக்கி நடந்தாள் மாலினி.

எங்கிருந்தோ ‘அத்தை மடி மெத்தையடி’ என்ற பாடல் காற்றில் மிதந்து வந்தது. விசாலாட்சி சிறுவர்களைத் தழுவிக் கொண்டாள்.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“அத்தை மடி மெத்தையடி” மீது ஒரு மறுமொழி

  1. […] அத்தை மடி மெத்தையடி வெளிச்சம் […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.