நினைவு கூர்கிறேன்
நிஜத்திலிருந்து உண்மைக்கும்
மற்றும் அந்தகாரத்தில் இளைப்பாற
வழி நடத்தப்படுகிறேன்
எனக்கு வெகு நாட்களாக
பரிச்சயம் உள்ள சபித்த
குரலற்ற பாதையின் பயணத்தில்
என் ஆயுள் கரையும் காலம்
என் கண்முன் விரிந்து கிடக்க
கசக்கும் நினைவுகளை
என் தலையிலிருந்து எடுத்து
எல்லா திசைகளிலும்
வினியோகம் செய்கிறேன்
எல்லோரையும் இழந்த பிறகு
நான் ஒருவன் மட்டுமே எஞ்சுகிறேன்
மெல்ல நான் என்னை நான்
ஒவ்வொன்றாக அல்லது
அப்பொழுதுக்குப்பொழுது
பார்த்து வைத்துக் கொள்கிறேன்
முயற்சியில் மெய் வருந்த வரும்
சாத்தியப்பாடுகளை விதைக்கிறேன்
நகர்வதை நான் சரி செய்கிறேன்
மற்றும் நான் அதை
அப்படியே விட்டுச் செல்கிறேன்
இப்படி நான்
கைவிடப்பட்ட எத்தனையோ
இன்னும் அந்தரத்தில்
சுற்றிக்கொண்டிருக்கிறது
என்னை அவ்வப்போது பிரதிபலித்தபடி