நிலவு வருமுன்னே
வெட்கத்தில் வெட்கிச்
சிவக்கிறது அந்த வானம்!
அதுதான் அந்திவானம்…
அந்திவானமே!
இங்கே எங்கள் திராவிட
நிறத்தை சிலர் கேலி
செய்கிறார்கள்…
உன்நிறத்தில் சிறிது
எங்கள்மேல் அள்ளித்
தெளித்து விடு!
கேலி பேசுபவர்கள் மனமும்
தெளிந்து விடும் தெளிந்த
அந்த வானத்தைப் போல…
அங்கே என்ன கம்யூனிச
மாநாடா நடக்கிறது?
வானம் முழுவதும் ஏனிந்த
சிவப்பு நிறம்?
அந்தியே!
இரவைத் தொடங்கி
வைப்பதும் நீயே!
பகலை முடித்து
வைப்பதும் நீயே!
ஒருநாளின் ஆதியும்
அந்தமும் நீயே!
மறையும் சூரியனைப் போல
உதிக்கும் நிலவைப் போல
உன் சிவந்த மேனியைத்
தொட எனக்கும் ஆசைதான்…
என்னால் சூரியனாக முடியாது
சந்திரனாகவும் மாற முடியாது
அதோ! உன்னைத் தொட்டு
கூடடையத் துடிக்கும் பறவைக்
கூட்டத்தில் ஒன்றாக மாறி
விடுகிறேன்…
அந்திவானமே!
காலையில் உறவாடிய
சூரியனை புறந்தள்ளி விட்டு
இரவில் வரும் நிலவிற்காக
சிவப்புக் கம்பளம் விரிக்கிறாயே! உனக்கென்ன
இரண்டு காதலர்களா?
கண்கூச காணமுடியாது
பகல் சூரியனை…
கவிஞர்கள் மட்டுமே
ரசிக்கும் இரவுநிலா…
இரண்டையும் விட
மஞ்சளும் சிவப்புமாய்
மனதை மயக்கும் நீயே
மிகவும் உயர்ந்தவள்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!