அந்த‌ 90 பேருக்கு நன்றி – சர்மிளா

ஐரோம் சர்மிளா

இந்தியாவின் முதன்மையான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான ஐரோம் சர்மிளா அவர்களுக்கு வாக்களித்த அந்த‌ 90 பேருக்கு நன்றி!

தன் வாழ்க்கையை மக்களுக்காகத் தியாகம் செய்தவருக்கு நன்றிக்கடனாக வாக்களித்த அந்த 90 பேருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

27728 வாக்காளர்கள் உள்ள தொகுதியில் நோட்டாவுக்கு ஏறத்தாழ 150 வாக்குகள் அளித்தவர்கள், தியாகச்சுடர் சர்மிளா அவர்களுக்கு 90 வாக்குகள் அளித்திருக்கின்றார்கள்.

தன் வாழ்க்கையை 100 சதவீதம் மக்களுக்காக அர்ப்பணித்த‌ சர்மிளாவுக்கு மக்கள் கொடுத்த வாக்குகள் 0.32 சதவீதம். அதாவது நூற்றுக்கு ஒருவர் கூட சர்மிளாவுக்கு வாக்களிக்கவில்லை.

அவர் தோற்றுப் போனார் என்பதைவிட அவர் புறக்கணிக்கப்பட்டார் என்பதே மிகப்பெரிய சோகம்.

சர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் வழியில் போராட முயன்றது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

தன் சொந்த ஊர் இல்லாத வேறு தொகுதியில் போட்டியிட்டிருக்கலாம்.

மிக வலுவான முன்னாள் முதல்வர் என்ற போட்டியாளருக்கு முன்பு வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்திருக்கலாம்.

புதிதாக மணிப்பூரில் எழும் பாரதிய ஜனதா கட்சி என்ற பெரும் சக்திக்கு முன் சமபலத்துடன் நிற்க முடியாமல் போயிருக்கலாம்.

அவரின் போராட்ட காரணங்கள் தற்போதைய சூழலில் முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் சர்மிளா, மணிப்பூர் மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார் என்று 1 சதவீத மக்கள் கூட நம்பவில்லை என்பது வேதனையளிக்கும் விசயம்.

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று மறைமுகமாக அல்ல நேரடியாகவே மக்கள் தீர்ப்பு சொன்னது போல் இருக்கின்றது.

சாதியும் பணமும் விளையாடுகின்ற களத்தில் தியாகம் என்பது ஒரு போட்டியாளராகக் கூட பங்கேற்க முடியாது என்ற பேருண்மை இன்று வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.

இது முடிவல்ல; ஆரம்பம்தான் சர்மிளா இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்; தொடர்ந்து போராட வேண்டும் என்றெல்லாம் நாம் நம்பிக்கை வார்த்தைகள் பேசலாம்.

ஆனால் சுற்றிலும் இருள் சூழ்ந்த அரசியல் வெளியில் எங்கு தேடினும் வெளிச்சப் புள்ளி தெரியவில்லை என்பதுதான் உண்மை.

நல்லவர்கள் அரசியலுக்கு வந்து இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமென்றால் எந்தத் திசையை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும் என்பதே தெரியவில்லை.

என்றாவது ஒரு நாள் நல்லவர்கள் அரசியலுக்கு வந்து இந்த நாட்டை மாற்றுவார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு சர்மிளாவின் தோல்வி ஒரு பெரிய இடியாகவே வந்து விழுந்திருக்கின்றது.

நல்லவர்களாக இருக்க வேண்டுமென்றால் அரசியலுக்கு வரக்கூடாது; அரசியலுக்கு வந்தால் நல்லவராக இருக்க முடியாது என்பது உண்மையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

– வ.முனீஸ்வரன்

 

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.