அனுமான் பஸ்கி செய்வது எப்படி?

அனுமான் பஸ்கி செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய, இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

தொடங்கும் நிலை

கால்கள் இருக்கும் இடைவெளி தோள்களின் அளவு 10 அல்லது சுமார் 12 அங்குலம் இருப்பது போல வைத்து முதலில் நிற்கவும்.

பின்னர், முழங்கால்களை பாதியளவு மடக்கி, அரைக் குந்தல் போல (Half Squat) (முன் பயிற்சிக்குப் போலவே) நின்று, இரு கைகளையும் முழங்கால்களின் மேல் வைத்துக் கொண்டுவிடவும்.

அனுமான் பஸ்கி செய்முறை

இந்த நிலையிலிருந்து, குதித்தவாறு இடதுகாலை முன்னேயும், வலது காலை பின்னேயும் கொண்டு செல்லும் பொழுதே, இடது கையை நெற்றிக்கருகேயும், வலது கையை முதுகுக்குப் பின்புறமும் கொண்டு செல்ல வேண்டும்.

பிறகு, வலது கால் முன்புறம் சென்று இடது கால் பின்புறம் வருமாறு தாண்டிக் குதிக்கும்போது, வலது கை நெற்றிக்கருகிலும், இடதுகை முதுகுக்குப் பின்புறமும் கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பு

குதித்து கால் மாற்றி நிற்கும் பொழுதும், தொடக்க நிலையில் முழங்கால்களை மடித்து நின்றது போல்தான் நிற்க வேண்டும்.

குதித்துத் திருப்பும் பொழுது கால் பாக அளவு திரும்புவது போல் இருக்க வேண்டும்.

நெற்றிக்கு முன்புறம் வரும் கையின் உள்ளங்கையானது வெளிப்புறம் நோக்கியிருப்பது போல வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு கால் மாற்றிச் செய்யும் பொழுது கையையும் மாற்றி முன் நெற்றிக்கருகே கொண்டு வர வேண்டும்.

இடது கால் முன்னே வரும் பொழுது இடது கையையும் வலது கால் முன்னுக்கு வரும் பொழுது வலது கையையும் நெற்றிக்கருகே கொண்டு வரவேண்டும்.

இதே போல் பலமுறை குதித்து, இந்த பஸ்கியைச் செய்ய வேண்டும்.

இடப்புறம் என்றாலும் வலப்புறம் என்றாலும், கால்பாக (Quater Turn) அளவு திரும்புதல் வேண்டும்.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத் துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.