அன்னக்கிளி எங்கள் கிராமத்தில் வசித்த ஒரே ஒரு திருநங்கை.
அன்னக்கிளி என்பது ஊரார்கள் வைத்த பட்ட பெயர். அதுவே நிலைத்து விட்டது. உண்மையான பெயர் வேலாயுதம்; பூர்விகம் ராமநாதபுரம்.
தான் ஒரு திருநங்கை என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு கிளம்பி வந்து, எங்கள் கிராமத்தில் வந்து தங்க ஆரம்பித்து 30 வருடத்திற்கு மேலாகிவிட்டது.
அன்னக்கிளி எங்கள் ஊரின் முக்கிய அங்கம்; என்னதான் எல்லோரும் கிண்டலடித்தாலும், துறுதுறுவென்று வளைய வரும் ஊரின் செல்லப் பிள்ளை.
அன்னக்கிளி இல்லாத நல்ல நாள், கெட்ட நாள், திருவிழா எதுவும் இல்லை. கடுமையான உழைப்பாளி; வீட்டு வேலை, வயல் வேலை எல்லாம் அத்துப்படி. ரொம்ப கைராசி.
அன்னக்கிளியின் முக்கியமான வேலை பிறந்த குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் செய்வது. அதுபோல் உடல் நலம் சரியில்லாத குழந்தைகளுக்கு திருநீறு பூசி விடுவது.
பிறந்த குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்ய மட்டும் கட்டணம் முழு 10 ரூபாய் நோட்டு. நோய்வாய் பட்ட பிள்ளைகளுக்கு இலவசம்.
குடியிருப்புகளின் பின் பகுதியில் ஒரு கீற்று குடிசைதான் அன்னக்கிளியின் கூண்டு. யார் வீட்டிலும் தங்குவதில்லை.
அன்னக்கிளிக்கு முன் கோபம் ரொம்ப அதிகம். ஒரு சின்ன சுடு சொல் தாங்காது. யாராவது சின்னதாய் திட்டி விட்டாலும் கோபித்துக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு போய்விடும்.
அப்புறம் யாராவது போய் மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி அழைத்து வரவேண்டும். இல்லையெனில் 15 நாட்களில் கோபம் தணிந்து அதுவாகவே வந்து விடும்.
ஒருநாள் யார் வீட்டிலோ முருங்கை இலை பறிக்கும் போது கிளையும் சேர்ந்து ஒடிந்து விட, “நீ ஒரு வேலைக்கும் லாயக்கில்லை” என்று சாதாரணமாக திட்டிவிட்டார்கள். கோபித்துக் கொண்டு போன அன்னக்கிளியை நான்தான் சமாதானம் பேசி அழைத்து வந்தேன்.
அதேபோல் ஒருநாள் நான் கடுமையாக திட்டிவிட கோபித்துக் கொண்டு போய்விட்டது. அதன்பின் என் அம்மாவும் அப்பாவும் போய், “அவன் கிடக்கிறான், நீ வா” என்று சமரசம் செய்து அழைத்து வந்தார்கள்.
அன்னக்கிளிக்கு பணம் காசு எல்லாம் முக்கியமில்லை; அன்புக்கு ஏங்கும் ஜீவன். நம் மீது உண்மையாகவே அன்பு வைத்திருக்கிறார்களா என்று இதுபோல் அடிக்கடி கோபித்துக் கொண்டு போய் டெஸ்ட் வைத்துக் கொண்டிருக்கும்.
ஊரில் உள்ளவர்களுக்கு இது வேடிக்கையும் வாடிக்கையுமாக மாறிவிட்டது.
அன்னக்கிளிக்கு முரட்டு தேகம், கருப்பு நிறம்.
நான் அன்னக்கிளியை எப்போது பார்த்தாலும் “அன்னக்கிளியே உன்னை தேடுதே ” பாட்டு பாடுவேன். ஒரே வெட்கமும் சந்தோஷமுமாய் என்னை அடிக்க ஓடி வரும்.
பீடி குடித்து வித விதமாய் புகை விடுவதில் அன்னக்கிளி கில்லாடி. நான் ஒருநாள் அன்னக்கிளியிடம் பீடி வாங்கி பற்ற வைத்து ட்ரையல் பார்க்க முயன்று முதல் இழுப்பிலேயே புகை மூக்கு நாசியிலேறி இருமல் வந்து, கண் சிவந்து ஒரே களேபரமாகி விட்டது.
“என்ன ஆம்பள நீ, மிலிட்டிரியில வேலை பாக்குற. ஒரு பீடி பத்த வைக்க கூட தெரியல” என்று நொந்து கொண்டது.
எனக்கும் அன்னக்கிளிக்கும் இருந்த நட்பு ஊரறிந்த ஒன்று. என்னைவிட என் அப்பா, அம்மா, மனைவி – பிள்ளைகள் அன்னக்கிளிக்கு ரொம்ப நெருக்கம்.
எங்கள் வீட்டை பொறுத்தவரையில் அன்னக்கிளி ஒரு திருநங்கையல்ல; எங்கள் வீட்டின் பெருநங்கை.
இந்த கேடு கெட்ட சமுதாயம் யாரையும் நிம்மதியாக வாழ விடாது என்பதற்கு அன்னக்கிளியின் வாழ்க்கையே சாட்சி.
ஒருநாள் தன் குடிசையில் படுத்து கிடந்த போது யாரோ இரண்டு வெளியூர் ஆட்கள் நன்றாக குடித்து விட்டு வந்து அன்னக்கிளியை சீரழித்து விட்டார்கள்.
அன்னக்கிளியின் கதறல் சத்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு போகும் முன்பே அவர்கள் இருட்டில் ஓடி மறைந்து விட்டார்கள்; கண்டுபிடிக்க முடியவில்லை.
அன்னக்கிளி அவமானத்திலும் வலியிலும் துடித்து போனது. மார்பெல்லாம் ஒரே நக கீறல், ரத்தம். ஊர்ப்பெண்கள் கூடி பற்று போட்டார்கள்.
போலீசுக்கு போக வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள்.
அன்னக்கிளியும் அதில் உறுதியாக இருந்தது. நான் மட்டும்தான் தயக்கம் காட்டினேன். பின் அன்னக்கிளியின் மனதிருப்திக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்பளைண்ட் எழுதி எடுத்துக்கொண்டு போனோம்.
நான் எதிர்பார்த்தபடியே அவர்கள் அன்னக்கிளியின் நிலைமை புரியாமல் நக்கல் நய்யாண்டி செய்தார்கள். “உனக்கு வந்த டிமாண்டைப் பார். வலித்த பின்பு தான் கூச்சல் போட்டாயா? அதுவரை அமைதியாக இருந்தாயா?” என்கிற மாதிரியான கேள்விகள்.
அதற்கு மேல் சொல்ல முடியாத பேச்சுக்களால் அன்னக்கிளி பொறுமையிழந்து போலீஸ்காரர்களை கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்து விட்டது. எப்படியோ சமாதானம் பேசி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் கூட்டி வந்துவிட்டோம்.
அன்னக்கிளிக்கு கோபம் அடங்கவில்லை. “போலீஸ் மேல கேசு போடணும்” என்று புலம்பிக் கொண்டே வந்தது.
அந்த நிர்மூடர்கள் வெளியில்தான் காயம் ஏற்படுத்தினார்கள். போலீஸ் ஸ்டேஷனில் அன்னக்கிளியின் மென்மையான இதயத்தையும் நொறுக்கினார்கள் .
இனிமேல் அன்னக்கிளி இரவு தன் குடிசையில் படுக்கக்கூடாது என்றும், யார் வீட்டிலாவது திண்ணையில் படுக்க வேண்டும் என்றும் ஊர்மக்கள் வற்புறுத்தினார்கள்.
யார் வீட்டிலும் படுத்துக் கொள்ள ஒத்துக் கொள்ளாத அன்னக்கிளியை, ரொம்ப போராடி பிள்ளையார் கோவில் பிரகாரத்தில் இரவில் தங்க சம்மதம் வாங்கினார்கள். ஊர் மக்களும் இரவில் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து நோட்டமிட்டு அன்னக்கிளிக்கு காவல் காத்து வந்தார்கள்.
அன்னக்கிளிக்கு ஊர் மக்களின் கவனிப்பில் ஏக சந்தோஷம், உள், வெளி காயமெல்லாம் பறந்தோடி போனது.
போலீஸ் அன்னக்கிளியிடம் அத்து மீறிய அந்த இரண்டு பேரையும் கண்டுபிடித்தது.
அவர்கள் வெளிநாடு போக பாஸ்போர்ட் விண்ணப்பித்து காத்திருந்த கட்டிட மேஸ்திரிகள், குடி போதையில் செய்து விட்டதாக கதறினார்கள்.
நிறைய பணம், புடவை, ஜாக்கெட் எல்லாம் கொண்டு வந்து அன்னக்கிளி காலடியில் வைத்து வணங்கி “எங்கள் எதிர்காலம் பாழாகிவிடும்” என்று போலீஸ் கம்பளயின்டை வாபஸ் வாங்க சொல்லி அழுதார்கள்.
ஊர் மக்கள் யாரும் போலீஸ் கம்பளயின்டை வாபஸ் வாங்க ஒத்துக் கொள்ளவில்லை. நானும் வெளியூரில் இருந்து போன் செய்து வாபஸ் வாங்க வேண்டாம் என்று சொன்னேன்.
ஆனால் அன்னக்கிளி யார் பேச்சையும் கேட்கவில்லை. எல்லோரையும் திகைக்க வைக்கும்படி ‘ஜஸ்ட் லைக் தட்’ அவர்களை மன்னித்து விட்டது.
போலீஸ் ஸ்டேஷனனில் “நீ நினைத்தால் கம்பளையண்ட் கொடுப்பாய். நீ நினைத்தால் திரும்ப வாங்குவாய்” என்று அன்னக்கிளியைத் திட்டியுள்ளார்கள். எப்படியோ அவர்களிடமிருந்து தான் கொடுத்த கம்பளயின்டை திரும்பப் பெற்றது.
மன்னிப்பு கேட்டவர்கள் கொண்டு வந்த துணிமணிகளை அவர்களிடமே திருப்பி கொடுத்து விட்டது. பணத்தை அவர்கள் கையாலேயே கோவில் உண்டியலில் போட வைத்தது.
அந்த உண்டியலாலேயே மறுபடியும் அன்னக்கிளிக்கு ஆபத்து வந்தது.
அந்த உண்டியலை யாரோ தூக்கி கொண்டு போய்விட்டர்கள். கோயில் நிர்வாக அதிகாரி போலீசில் கம்பளயின்ட் கொடுக்க, இரவில் கோவிலில் படுத்திருக்கும் அன்னக்கிளியை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி போலீஸ் கைது செய்தது.
நான் மட்டும் அன்று ஊரிலிருந்திருந்தால் அன்னக்கிளியை பதுக்கியிருப்பேன். போலீசை கோர்ட்டுக்கு அலைய வைத்திருப்பேன்.
ஊர் மக்கள் கோட்டை விட்டு விட்டார்கள். போலீஸ் வஞ்சம் தீர்த்தது.
அன்னக்கிளி கெட்ட வார்த்தையில் திட்டியதை மனதில் வைத்துக் கொண்டு, அன்னக்கிளியை ஸ்டேஷனில் வைத்து ‘விசாரணை’ என்ற பெயரில் துவைத்து எடுத்துள்ளார்கள். அன்னக்கிளியின் கதறல் சத்தம் எல்லோரையும் கலங்க வைத்திருக்கிறது .
‘பாவிகளே, முட்டாள்களே, கடவுள் எப்படிடா தன் உண்டியலை திருடும் . அன்னக்கிளி தெய்வமடா? லஞ்சம் வாங்கி நக்கி பிழைக்கும் நய வஞ்சக உலகத்தில், குழந்தைகளை ஆசீர்வாதம் செய்து வாங்கும் 10 ரூபாய் கூட குழந்தை நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டி கடவுள் உண்டியலில் போடும் உன்னத பிறவியடா எங்கள் காவல் தெய்வம்.
தன் மார்பை கீறி, மானபங்க படுத்தியவர்களையே மன்னித்து விட்ட எங்கள் அம்மன் சாமியாடா அந்த அன்னக்கிளி. எப்படியடா உங்களுக்கு மனது வந்தது?’
போலீஸ் அன்னக்கிளியை மறுநாள் காலையில் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்று எழுதி வாங்கி கொண்டு அனுப்பியிருந்தது.
ஊர் மக்கள் மருந்து கொடுத்து, சாப்பாடு கொடுத்து கோவிலில் படுக்க வைத்துள்ளார்கள். ஊர் மக்கள் அசந்த நேரத்தில் அன்னக்கிளி காணாமல் போனது.
ஓரிரு நாளில் உண்டியல் திருடிய வடமாநிலத்தை சேர்ந்த நபர்களை சிட்டி போலீஸ் கண்டுபிடித்து பணத்தை மீட்டது.
15 நாட்களில் ஊர் திரும்பி விடும் அன்னக்கிளி 6 வருடமாகி விட்டது. இன்று வரை வரவில்லை. எங்கெங்கோ தேடியும் அன்னக்கிளி கிடைக்கவில்லை .
அன்னக்கிளியிடம் கைபேசி இல்லை. அன்னக்கிளி புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை. ஆதார், வோட்டர், ரேஷன் கார்டு எதுவுமில்லை .
போலீஸ் அடிக்கும் போது அன்னக்கிளி “நானே தற்கொலை செய்துகொள்கிறேன். என்னை அடிக்காதீர்கள்” என்று கதறியிருக்கிறது.
ஊர் மக்கள் அன்னக்கிளி எங்கோ போய் தற்கொலை செய்து கொண்டதாக நினைக்கிறார்கள். இல்லையென்றால் அன்னக்கிளி எப்போதோ ஊர் திரும்பியிருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
அன்னக்கிளியை பற்றி ஊரில் எப்போது யார் பேசினாலும் எல்லோர் கண்ணிலும் நீர் ததும்புகிறது.
என்னால் அன்னக்கிளி செத்துப் போயிருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அன்னக்கிளியிடம் இப்போதும் நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
‘நீ உண்டியலை திருடவில்லை அன்னக்கிளி. நீ ஏன் சாக வேண்டும்? திருடர்களும் பொய்யர்களும் பாவ மூட்டைகளும் கும்மாளம் அடிக்கும் இந்த உலகத்தில் உன்னதமான நீ ஏன் சாக வேண்டும்? தயவு செய்து வந்துவிடு அன்னக்கிளி.
என் அம்மாவின் சாயலை அப்படியே உரித்து கொண்டு பிறந்திருக்கும், உன்னைப்போல் துறுதுறுவென்று சேட்டைகள் செய்யும் என் பேத்தியை எப்போது வந்து ஆசீர்வாதம் செய்வாய்?
“அன்னக்கிளியே உன்னைத் தேடுதே” பாட்டு வந்தால் எங்களால் அழுகையை அடக்க முடியவில்லை.
‘அன்பே கடவுள்’ என்கிறார்கள் அன்னக்கிளி. நான் அன்பையும், கடவுளையும் உன்னையும் இந்த உலகத்தில் தேடித் தேடிக் களைத்துப் போகிறேன்.
சிலசமயம் எதுவுமே பிடிக்காத, யாருமே பிடிக்காத வெறுமையான உலகத்தில் வந்து விடுகிறேன் அன்னக்கிளி. நீயும் வராமல் போய்விட்டால், என் வாழ்வின் அர்த்தங்கள் இன்னமும் பலமிழந்து விடும். எப்படியாவது வந்துவிடு.
இந்த கதையை ரொம்ப நாளாக எழுதுகிறேன் அன்னக்கிளி, டைரி முழுதும் கண்ணீர் துளிகள் திட்டு திட்டாய் விழுந்து கிடக்கிறது. பெண் மாதிரி ஏன் அழுகிறீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள்.
இப்பொது நான் ஆணுமல்ல பெண்ணுமல்ல. நீ திரும்ப வரும் வரை நான்தான் இனி ‘அன்னக்கிளி’. நீயும் நானும் இனி வேறல்ல.
முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849
Comments
“அன்னக்கிளி – சிறுகதை” அதற்கு 5 மறுமொழிகள்
எனக்கு உங்களைப் போல் எழுத வராது, இந்த கதை எனக்கு தெரிந்த கதை என்றாலும் நீங்கள் எழுதும் போது அது கண்முன்னே நடப்பது போல் இருக்கிறது. எனக்கும் அழுகை பீறிட்டு வருகிறது…
நீங்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவேன் என்று எங்களிடம் சொல்வது பொய்.
எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு பூட்டி வைத்து இருக்கிறீர்கள்.
இந்தக் கதை, கண்ணீருக்காகவாவது கட்டாயம் அன்னக்கிளி வந்துவிடவேண்டும்…
( திருநங்கையல்ல; எங்கள் வீட்டின் பெருநங்கை
உள், வெளி காயமெல்லாம் பறந்தோடி போனது )
இந்த வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல உங்கள் முற்போக்கு சிந்தனையின் வெளிப்பாடு
இந்த நவீன உலகிலும் திருநங்கைகள் சுதந்திரமாக வாழ முடியுமா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. அதற்கு இக்கதையே பெரிய நெத்தியடி…
அவர்களையும் நம்மில் ஒருவராகக் கருதும் தனி மனித மாற்றம் ஏற்பட்டாலொழிய இந்த அல்ல நிலை தொடரவே செய்யும்.
இதனை அவருக்கே உரிய பாணியில் மிகவும் கச்சிதமாக தெரிவித்துள்ளார் ஆசிரியர்.
அன்னக்கிளி அவர்களே, இப்போது உங்களைப் பராமரிக்கும் தகுதி இயற்கைக்கு மட்டுமே உள்ளது. அந்த பணியை இயற்கை செவ்வனே செய்யட்டும்…
உண்மையான அன்பும் மானிடமும் நேசிப்பும் இதுவே.
பாலினம் தாண்டிய நட்பு அல்லது விருப்பம் மிகவும் சுகமானது என்பது தான் உலக நீதி.
தீவிரத்துவமான வடிவத்தை சிறுகதை பெற்றுள்ளது. க்தை சொல்வது அழகு.
அழ வேண்டியுள்ளது அன்னக்கிளியை நினைத்து அல்ல உங்களை நினைத்து…
அருமை…
உண்மை சம்பவங்களின் கோர்வையாக ஏழுத்து நடை அருமை…
உங்கள் கதையில் வரும் பெண் கதா பாத்திரங்கள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் கடந்து போனவர்கள்…
பெண்களை புரிந்து கொள்வதும் மதிக்கும் பக்குவமும் அதை வாழ்க்கையிலும் உங்கள் படைப்பிலும் கடைபிடிப்பது மிக அருமை…
வாழ்த்துக்கள்!