அன்னதானம் – சிறுகதை

“என்னங்க, என்னங்க நம்ம பையன் பிறந்த நாளுக்கு அன்னதானம் போடலாம்னு சொன்னீங்களே!இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.

எங்க போடப் போறீங்க? யாருக்கு போடப் போறீங்க? எந்த ஹோட்டல், என்னென்ன ஆர்டர் பண்ணப் போறீங்க?

எதுவும் ரெடியானா மாதிரி எனக்கு தெரியலியே!” என மூச்சுவிடாமல் கேட்டு முடித்தாள் கோதாவரி.

“எல்லாம் ரெடி பண்ணியாச்சும்மா. கவலைப்படாத. பிறந்தநாள் அன்னைக்கு எல்லாம் கோயிலுக்கு வந்து சேர்ந்திடும்.

எந்த கோயில், நம்ம ஊரு பெரிய கோயில்தான். அர்ச்சனைக்கும் ஏற்பாடு பன்னிட்டேன்.

சாப்பாடு என்னென்ன, புளிசாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், சுண்டல், வடை” என அடுக்கினார் கோதண்டம்.

“எத்தனை பேருக்கு?”

“நூறு நபர்களுக்கு. போதுமா, சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?”

“சரி சரி எல்லாம் சரியா நடந்தா சரி”

கோதண்டம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் மகனுடைய பிறந்த நாளன்று காலை இனிப்பு வழங்கினார்; வாழ்த்துக்களைப் பெற்றார்.

அன்று கோதண்டத்திற்கு கீழ் பணிபுரியும் கோபியின் மகனுக்கும் பிறந்தநாள். அவரும் இனிப்பு வழங்கினார். அன்று முழுவதும் அலுவலகமே இனிப்புகளின் நெய்மணத்தில் மூழ்கியது.

அவரது வீட்டில் “கோதாவரி, கோதாவரி” என பக்கத்து வீட்டுக்காரம்மா அழைத்தாள்.

“என்னம்மா சொல்லுங்க. என்ன பிறந்தநாள் விழா எத்தனை மணிக்கு? கேக்கெல்லாம் உண்டுல்ல?”

“இல்லம்மா கேக் வெட்டி கொண்டாடுறத விட, கோயிலுக்கு போய் அன்னதானம் போடலாம்னு இருக்கோம். “

“என்ன கோதாவரி? நீ பணத்த வேஸ்ட் பண்ணுறியே?

நம்ம தெருவுல உள்ள எல்லா வீட்டுக்கும் சொல்லி, அவங்கள அழைச்சி கேக் வெட்டி, சாக்லேட், இனிப்பு, காரம்னு குடுத்தாதானே நல்லாருக்கும்.

கோயிலுக்கு யாராரோ வருவாங்க, யாருன்னே தெரியாதவங்களுக்கு அன்னதானம் போடுறது நல்லாருக்குமா?”

“என்ன பண்ணுறது அம்மா, என் வீட்டுக்காரரு எடுத்த முடிவு. என்னால மறுப்பு சொல்ல முடியல.”

“சரிம்மா, உங்க மனசுப் படியே செய்யுங்க” என கோதாவரியை குழப்பிவிட்டு சென்றாள் பக்கத்து வீட்டுக்காரம்மா.

சரியாக மூன்று மணியளவில் அலுவலகத்தில் பர்மிஷன் சொல்லி விட்டு பிறந்தநாள் வேலையைப் பார்க்க விரைவாக வீட்டிற்கு வந்தார் கோதண்டம்.

“கோதாவரி, கோதாவரி”

“என்னங்க”

“ஒரு காபி போடு. தலைக்கு மேல வேலை இருக்கு. சீக்கிரம் கோயிலுக்கு போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுறேன்.”

கையில் மணமணக்கும் பில்டர் காபியை எடுத்துக் கொண்டு வந்தாள் கோதாவரி.

காபியை வாங்கிய கோதண்டத்திடம் பக்கத்து வீட்டுக்காரம்மா சொன்ன விஷயத்தைப் பற்றி கூறினாள்.

“அந்த அம்மாவுக்கு வேற வேலை கிடையாது. தன் வீட்டைப் பற்றிய கவலையை விட்டுட்டு, அடுத்த வீட்டைப் பற்றிதான் பேசுவாங்க.

தெரிஞ்சவங்களுக்கு போடுறதுக்குப் பேரு அன்னதானம் இல்ல அன்னம்தான். தெரியாதவங்களுக்கு போட்டாத்தான் அன்னதானம். இதை முதல்ல புரிஞ்சிக்க.”

பெரிய கோயிலில் கோதண்டம் குடும்பம் பூஜையைத் தொடங்கினர். அந்த நேரத்தில் ஹோட்டலில் ஆர்டர் செய்த அன்னதான உணவுகள் வந்து சேர்ந்தன.

மனதார மகனுக்காக இறைவனிடம் வேண்டி, உணவுகள் இறைவனுக்கு படைக்கப்பட்டன.

படைக்கப்பட்ட உணவுகளை அருமையான வாழை இலையில் வந்திருந்த பக்தர்களுக்கு கோதண்டமும் அவர் மனைவியும் மகனும் பரிமாறினர்.

வந்திருந்தவர்களில் சிலர் மட்டுமே அமர்ந்து உண்டனர். மற்ற அனைவரும் இறைவனை வணங்கி விட்டு, அன்னதானத்தைப் பெரிதாகக் கருதாமல் சென்றனர்.

நூறு நபர்களுக்கு செய்த உணவைக் குறைவான நபர்களே உண்டனர்.

அந்த நேரத்தில் கோதண்டத்துடன் பணிபுரியும் கோபியின் குடும்பம் கோயிலுக்கு வந்தது.

“என்னப்பா கோதண்டம் பையன் பிறந்தநாள கோயில்ல கொண்டாடுற போல”

“ஆமாம்பா கோபி, அன்னதானம் போடுறது நல்ல விஷயம்தானே! சரிப்பா நீயும் உன்னுடைய பையன் பிறந்தநாள கோயில்ல கொண்டாட வந்தியாப்பா?”

“இல்ல கோதண்டம் நான் ஏற்கனவே கொண்டாடிட்டேன், எப்படிப்பா வீட்டுல கேக் வெட்டி கொண்டாடுனிங்களா?”

“இல்ல கோதண்டம், எங்க தெருவுக்கு பக்கத்துல ஒரு புளியந் தோப்பு இருக்கு. அங்க கூடாரங்கள் அமைத்து நாடோடிகள் பலர் குடும்பமா மரத்தடியில் தங்கியிருக்காங்க.

தினமும் அந்த பசங்க ஒரு பாத்திரத்த எடுத்துக்கிட்டு வீடு வீடா போயி சாப்பாடு வாங்கிட்டு வருவாங்க. பழைய சாதம், காய்ந்துபோன இட்லி என பழச வாங்கி சாப்புடுறாங்க.

அவங்க எல்லாருக்கும் என் பையன் பிறந்தநாளுக்கு ஒருவேளை அன்னதானம் போடலாம்னு முடிவெடுத்தேன்.

அதன்படி மதிய உணவாக சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், அப்பளம், வடை, பாயாசம், கூட்டுப் பொரியலோட வாழை இலையில ஒரு முப்பது பேருக்கு அன்னதானம் போட்டோம்.

மனசு திருப்தியா இருந்தது. அவங்களுக்கு வயிறு நிறைஞ்சுது. எங்களுக்கு மனசு நிறைஞ்சுது.”

“என்ன கோபி சொல்ற? இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கே. சரி சரி இங்க நிறைய சாப்பாடு இருக்கு. நாங்களும் அவங்களுக்கு அன்னதானம் போடுறோம். எங்களோட வந்து அவங்க இருக்குற இடத்த காட்டுப்பா.”

“இரவு உணவை நீங்க தறீங்க. அருமை அருமை” என கோபி நாடோடிகளின் கூடாரத்திற்கு கோதண்டம் குடும்பத்தினை அழைத்துச் சென்றார்.

கூடாரத்தில் தங்கியிருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பசியோடு இருந்த அனைவரும் வயிறார உண்டனர். மனமகிழ்ச்சியில் கோதண்டம் குடும்பத்தினர் திளைத்தனர்.

இல்லாதவர்க்கும் பசியோடு உள்ளவர்க்கும் வழங்குவதே அன்னதானம் என கோதண்டமும் கோதாவரியும் உணர்ந்தனர்.

இனி ஆண்டுதோறும் மகன் பிறந்தநாளன்று இவர்களைப் போன்றோர்க்கு அன்னதானம் இடவேண்டும் என அருமையான முடிவெடுத்தனர்.

அன்னதானத்தின் சிறப்பு

“உணவை உண்டவர்களின் வாய்
வாழ்த்தா விட்டாலும் வயிறு
வாழ்த்தி விடுமாம்”

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

2 Replies to “அன்னதானம் – சிறுகதை”

  1. அருமையான பதிவு
    படமாடக் கோயில் பகவற் கொன்றீயில் நடமாடக் கோயில் நம்பர்க் கங்காகா நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில்
    படமாடக் கோயில் பகவற்க தாமே

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.