அன்னப்பறவை யாருக்குச் சொந்தம் என்ற கதை உங்களை யோசிக்க வைக்கும்.
சித்தார்த்தர் கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனரின் அன்பு மகன். சித்தார்த்தர் இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.
ஒருநாள் சித்தார்த்தர் அரண்மனை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய காலடியில் ‘தொப்’ என ஏதோ ஒன்று விழுந்தது.
உடனே சித்தார்த்தர் கீழே குனிந்து பார்த்தார்.
அன்னப்பறவை ஒன்று உடலில் அம்பு துளைத்த நிலையில், இரத்தம் பீறிட்டு வெள்ளைநிற உடலில் சிவப்பு நிறம் கலந்து, கண்கள் சொருகி கிடந்தது.
அன்னப்பறவையை அந்த நிலையில் கண்டதும் சித்தார்தரின் மனம் துடித்தது. படபடப்போடு அதனைக் கையில் எடுத்தார். அன்போடு அன்னபறவையை தடவிக் கொடுத்தார்.
மெதுவாக அதனுடைய உடலில் தைத்திருந்த அம்பினை வெளியில் எடுத்தார்.
அரண்மனைத் தோட்டத்திலிருந்த பச்சிலைகளை பறித்து கசக்கி காயத்தில் பூசினார். அப்பறவைக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார்.
அப்போது அங்கே சித்தார்த்தரின் அத்தை மகன் தேவதத்தன் கையில் வில் அம்போடு வந்தான்.
‘சித்தார்த்தா, வானத்தில் கூட்டமாகச் சென்ற அன்னப்பறவைகளில் இந்த பறவையை, நானே அம்பு எய்து வீழ்த்தினேன். இந்த பறவை எனக்கே சொந்தம். ஆதலால் இதனை என்னிடம் கொடு.’ என்று கேட்டான்.
‘அம்பு துளைத்து காயம் அடைந்து, என்னுடைய காலடியில் விழுந்த இப்பறவையை, நான் காப்பாற்றி உள்ளேன். ஆதலால் இப்பறவையை நான் உன்னிடம் கொடுக்க இயலாது’ என்று சித்தார்த்தர் பறவையை கொடுக்க மறுத்து விட்டார்.
அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்? என்ற பிரச்சினை உருவானது.
உடனே தேவதத்தன் சுத்தோதனரிடம் சென்று தான் அம்பு எய்து வீழ்த்திய அன்னப்பறவையை சித்தார்த்தர் கொடுக்க மறுப்பதாக புகார் கூறினான்.
சுத்தோதனரும் சித்தார்த்தரை கூப்பிட்டு நடந்தவைகளை விசாரித்தார்.
சித்தார்த்தரும் நடந்த நிகழ்வுகளை தனது தந்தையாரிடம் கூறினார். சித்தார்த்தரின் கருணை கண்டு சுத்தோதனர் மிகவும் மகிழ்ந்தார்.
சுத்தோதனர் தேவதத்தனிடம் ‘நீ அன்னப்பறவையை அம்பு எய்து கொல்ல முயன்றாய். சித்தார்த்தனோ சாக இருந்த பறவைக்கு சிகிச்சை அளித்து உண்ண நீரும் உணவும் கொடுத்து காக்க முயன்றான்.
பறவையின் உயிரைக் காப்பாற்றியவனுக்கே அப்பறவை சொந்தம். ஆதலால் அன்னப்பறவை சித்தார்த்தனுக்கு உரியது’ என்று கூறினார்.
சித்தார்த்தரும் மன்னரின் தீர்ப்பினைக் கேட்டு மகிழ்ந்து அன்னப்பறவையுடன் அங்கிருந்து சென்றார்.
சிறிது காலம் தன்னுடைய பராமரிப்பில் அன்னபறவையை வைத்திருந்து காயம் மாறியதும் வானத்தில் அப்பறவையை பறக்க விட்டார்.
அன்னபறவையிடம் கருணையுடன் நடந்து கொண்ட சித்தார்த்தரே பின்னாளில் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்திய கௌதம புத்தர் ஆனார்.
அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்? என்ற இக்கதையில் வரும் சித்தார்த்தரைப் போல் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.