அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் என்றவுடன் தனிப்பட்ட வாசனையும், கத்திபோன்ற இலைகளைக் கொண்ட மகுடமும், சொரிசொரியான உடலும், உள்ளே ருசியான சதைப்பகுதியும் நம் கண்முன்னே நிற்கும்.

இப்பழத்தினை உண்ணும்போது இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த அசத்தலான சுவையை எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள்.

உண்பதற்கு ருசியுடன் மருத்துவ குணங்களையும் கொண்ட இப்பழம் வெப்பமண்டலத்தில் நன்கு விளையும். இதன் தனிப்பட்ட மணம் மற்றும் சுவைக்காக பலநூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைப் பதப்படுத்தியோ, சமைத்தோ, பழமாகவோ, பழச்சாறகவோ உண்ணப்படுகிறது. இப்பழத்தின் இலைகள் வால்பேப்பராகவோ, கூரைக்காப்பு பொருளாகப் பயன்படுகிறது.

இப்பழத்தின் தாயகம் பிரேசிலின் தென்பகுதி மற்றும் பாராகுவே என்று கருதப்படுகிறது. தற்போது பிரேசில், பிலிஃபைன்ஸ், கோஸ்டாரிகா ஆகிய இடங்களில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

இப்பழம் 1943-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கோடைகாலமான மார்ச் முதல் மே வரை இப்பழத்திற்கான சீசன் ஆகும்.

அன்னாசி தாவரம் 5-8 அடி உயரமும், 3-4 அடி அகலமும் உடையதாக இருக்கும். இத்தாவரம் தடித்த குட்டையான தண்டினைக் கொண்டிருக்கும். அதில் மெழுகப்பூச்சுடன் கூடிய நீண்ட ஓலை போன்ற இலைகளைப் பெற்றிருக்கும். இலையின் ஓரத்தில் கத்தி போன்ற முட்கள் காணப்படும்.

அன்னாசிப்பழம் உருளை வடிவத்தில் தலைப்பகுதி கத்தி போன்ற இலைகளுடன் காணப்படும். இப்பழம் பார்பதற்கு பைன் மரத்தின் கனிகளை ஒத்திருந்ததால் இது ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது.

 

இப்பழத்தில் உள்ள உயிர்சத்துக்கள்

அன்னாசிப்பழம்  விட்டமின்கள் சி,கே,ஏ,பி, தாதுஉப்புக்கான பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின், ஃபோலேட்கள், நார்சத்து, ப்ரோமலைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

மருத்துவப்பண்புகள்

கீல்வாதம் ஏற்படாமல் தடுக்க

அன்னாசி கீல்வாத்தினால் ஏற்படும் மூட்டுகள் மற்றும் சதைகளின் வீக்கத்தினைக் குறைக்கிறது. இப்பழத்தில் காணப்படும் புரதச்சத்தான ப்ரோமலைன் மூட்டுகளின் ஏற்படும் வீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதோடு கீல்வாதம் ஏற்படுவதையும் தடைசெய்கிறது.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

விட்டமின் சி-யானது வெள்ளை இரத்த அணுக்களை நன்கு செயல்படச் செய்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது 80 சதவீதம் விட்டமின் சி-யைக் கொண்டுள்ள அன்னாசியை தினமும் அளவோடு உட்கொள்வதால் நாம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம். இருமல் மற்றும் சளி தொந்தரவிலிருந்து அன்னாசி பாதுகாப்பு அளிக்கிறது.

 

செல்கள் மற்றும் தசைகள் நலத்திற்கு

விட்டமின் சி-யானது கோலஜன்கள் என்ற புரத உற்பத்திக்கு முக்கிய காரணமாகும். இந்த கோலஜன்கள் இரத்தநாளச்சுவர், எலும்புகள், தோல் மற்றும் உறுப்புகள் ஆகியவை உருவாக முக்கியக் காரணம் ஆகும்.

மேலும் விட்டமின் சி-யானது உடலில் ஏற்படும் காயங்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றி அவற்றை விரைவாக குணமடைச் செய்கின்றது.

 

புற்றுநோய் தடுப்பு

இப்பழத்தில் காணப்படும் விட்டமின்கள் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் புற்றுநோயை ஏற்படாமல் தடுக்கின்றன. விட்டமின் ஏ, பீட்டாகரோட்டின்கள், ப்ரோமலைன் மற்றும் மாங்கனீசு போன்றவை புற்றுநோய் தடுப்பில் இணைக்காரணிகளாகச் செயல்படுகின்றன.

அன்னாசியை உண்பதால் வாய், தொண்டை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கின்றது.

 

செரிமானத்திற்கு

இப்பழத்தில் கரையாத மற்றும் கரையக்கூடிய நார்சத்துகள் காணப்படுகின்றன. இவை செரிமானத்திற்கு துணைபுரிகின்றன.

அன்னாசி மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குடல்நோய், பெருந்தமனித்தடுப்பு, இரத்த அழுத்தம், இரத்தம் உறைதல் ஆகியவற்றைச் சரிசெய்கிறது. அன்னாசியில் காணப்படும் ப்ரோமலைன் புரதத்தினை பகுத்து செரித்தலுக்கு துணைசெய்கிறது.

 

எலும்புகளின் நலத்திற்கு

அன்னாசியில் அதிக அளவு காணப்படும் மாங்கனீசு எலும்புகளின் உறுதித்தன்மைக்கும், பலத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமாகிறது. மேலும் மாதவிடாய் நின்ற பெண்கள் அன்னாசியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உறுதியான எலும்பு பலத்தைப் பெறலாம்.

 

பற்கள் மற்றும் கேசப் பராமரிப்பிற்கு

அன்னாசியில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் பற்சிதைவு, கூந்தல் உதிர்தல், தசைகள் பலவீனமாதல், தோல் சுருக்கம் ஆகியவற்றைத் தடைசெய்கிறது. எனவே மேற்கூறிய பிரச்சினைகள் ஏற்படாதிருக்க அன்னாசியை அடிக்கடி அளவோடு உண்ணவேண்டும்.

 

கண்கள் ஆரோக்கியத்திற்கு

அன்னாசியில் உள்ள பீட்டா கரோட்டின்கள் வயோதிகத்தில் ஏற்படும் கண்தசை சிதைவு நோயினை ஏற்படாமல் தடுக்கின்றன. தினசரி பீட்டா கரோட்டினை தேவையான அளவு எடுத்துக் கொண்டால் வயதான காலத்திலும் நாம் உலகை இளம் கண்ணால் காணலாம். எனவே அன்னாசியை அடிக்கடி போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சீரான இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு

அன்னாசியில் உள்ள பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. மேலும் இப்பழத்தில் உள்ள காப்பர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. காப்பர் ஆரோக்கியமான இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு முக்கியமானதாகும்.

சீரான இரத்த ஓட்டத்தினால் உடல்உறுப்புகளின் இயக்கம் சீராகிறது. அன்னாசி அல்சைமர் மற்றும் டிமென்சியா போன்ற நரம்பியல் நோய்களையும் சரிசெய்கிறது.

 

அன்னாசி பழத்தைப் பற்றிய எச்சரிக்கை

அன்னாசியில் உள்ள ப்ரமோலைன் என்ற நொதி இறைச்சி போன்ற கடுமையான உணவுகளையும் எளிதில் செரிக்கச் செய்யும். அதிக அளவு அன்னாசியை உண்ணும்போது வாய், உதடு, ஈறுகள் ஆகியவற்றையும் மென்மையாகி விடுகிறது.

அன்னாசியை அளவுக்கு அதிகமாக உண்ணம்போது வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தும். கர்பிணிபெண்கள் அதிகமாக உண்ணும்போது கருச்சிதைவினை ஏற்படுத்தும்.

 

அன்னாசியை உண்ணும் முறை

அன்னாசிப்பழம் வாங்கும்போது அளவில் பெரியதாகவும், பழத்தின் மேற்புறத்தில் கீறல்கள் ஏதும் இல்லாமல் தட்டினால் திடமான ஒலியுடன் நுகரும்போது இனிய மணம் இருக்குமாறு பார்த்து வாங்கவும்.

அன்னாசியை வாங்கிய நாளே உண்பது நல்லது. குளிர்பதனப் பெட்டியில் பழத்தினை முழுமையாகவோ அல்லது துண்டுகளாக்கியோ ஓரிரு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

சிறப்புகள் வாய்ந்த அன்னாசியை அடிக்கடி உணவில் அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.