பனிக்குடம் உடைந்து ரணங்களைக் கடந்து
திரைப்படம் போலிங்கு அறிமுக மாகும்
புத்துயிர் ஒன்றை ஞாலத் திடலில்
குழந்தை யென்றே படைப்பவள் அவளே…
வலியினைத் தனக்கும் மகிழ்வினை நமக்கும்
என்றும் மாறாது அளித்த போதிலும்
வருத்தத்தைத் துளிகூடப் புறங் காட்டாது
சுமை தாங்கியாய் இருப்பவள் அவளே…
எத்தனை கோடி யுகங்கள் மாறினும்
ஒன்றுக்கு நிகராய் மற்றொன்று உண்டு
நிகரில்லா ஒன்றினை உலகினிற் கொண்டால்
அன்னையின் ஒப்பற்ற அன்பெனக் கொள்வோம்…
மாற்று வழியிலா மாசற்ற சுவாசமவள்
கலப்பட மில்லாத உயிர்ப்பால் தருபவள்
இயற்கை உரமுள்ள நிலத்தினைப் போன்றவள்
வாய்மை தவறாத பழமொழி ஆனவள்…
தாய்மை யென்பது தாயிடம் மட்டுமே
நாம்பிறக்க நம்மை கருவிற் சுமந்தவளை
மனக்கோவிற் கருவறையில் தெய்வமாக்கிப் பார்
அன்னையெனும் தெய்வத்தை உயிருள்ள போதே
வழுவாது காத்திடு மறவாமல் நீ… ஏனெனில்
சென்றால் கிடைக்காதது நம் தாயன்பு!
சிவா.தேவராசு
ஓசூர்
கைபேசி: 9941503810
மின்னஞ்சல்: devakalai006@gmail.com
மறுமொழி இடவும்