அன்னை தெரேசா

தாம் செய்த சமூகத் தொண்டுகளின் மூலம் எல்லோராலும் அன்புடன் அன்னை என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரேசா ஆவார். ஜாதி, மத, ஏழை என்ற வித்தியாசம் பாராமல் ஆற்றிய சமூகத் தொண்டின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டவர் என்றே இவரைக் கூறலாம்.

மாசற்ற அன்பு, மனித நேயம், இரக்கம், கருணை ஆகிய நற்குணங்களைப் பெற்று சமூக சேவை செய்து அன்னை தெரேசா சிறந்த சமூக சேவகராகத் திகழ்ந்தார்.

நோய்வாய் பட்டவர்களுக்கென நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், ஏழை குழந்தைகள் மற்றும் அவர் தம் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றின் மூலம் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர், நோயாளிகள், ஏழைகள், அனாதைகள் என சமுதாயத்தில் கீழ் மட்டத்தில் உள்ள மக்களுக்கு தொண்டுகள் செய்து தொண்டின் மறு உருவமாகத் திகழ்ந்தார்.

இவர் மனித குலத்துக்குக் கிடைத்த பேரருளாராகப் போற்றப்படுகிறார். சமூகத்தில் நலிந்தோர்களை மேம்படுத்துவதற்காக இவர் பிறர் அன்பின் பணியாளர் என்ற சபையினை இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் நிறுவி சமூக தொண்டாற்றினார்.

சமூக சேவைக்காக நோபல் பரிசு, பாரத ரத்னா உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் வாழ்க்கை மற்றும் சமூக சேவையைப் பற்றி பார்க்கலாம்.

 

பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை

தெரேசா யுகேஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிலோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 26.08.1910 அன்று நிக்கல் மற்றும் டிரானா போஜாக்சியு என்பவர்களுக்கு இளைய மகளாகப் பிறந்தார்.

இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் ரோஜா மொட்டு என்று பொருள். ஆக்னஸ் 8 வயதில் தனது தந்தையை இழந்தார். சிறு வயது முதலே எல்லோரிடமும் அன்பாகவும், இரக்க குணம் நிறைந்தவராகவும் விளங்கினார். சிறு வயதிலேயே இறை பக்தியிலும், சமூக சேவையிலும் நாட்டம் செலுத்தினார்.

ஆக்னஸ் மறைபணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் துறவறம் ஏற்க முடிவு செய்தார். தனது பதினெட்டாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி லொரேட்டா சகோதரிகளின் சபையில் சேர்ந்து மறைபணியாளரானார்.

அதன்பின் தன் தாயையோ சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை. பின் அயர்லாந்தின் ரத்பர்ன்காமில் உள்ள கன்னியர் மடத்திற்கு சென்று பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்க ஆங்கிலத்தைக் கற்றார். குழந்தை, நோயாளி, முதியவர் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவை செய்வதற்கான நுணுக்கங்களையும் கற்றார்.

 

ஆக்னஸ் தெரேசாவானது

1929-ல் இந்தியாவிற்கு வந்து டார்ஜிலிங் சென்று துறவற புகுநிலையினருக்கான பயிற்சியை ஆரம்பித்தார். அவர் தனது முதல் துறவற உறுதி மொழியினை 24.05.1931ல் எடுத்துக் கொண்டார்.

அப்போது அவர் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடை செய்வதற்கு தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ள நினைத்தவரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சகோதரி தெரேசா மார்ட்டின் நினைவாக தன் பெயரை தெரேசா என்று மாற்றிக் கொண்டார்.

டார்ஜிலிங்கில் இருந்த லொரேட்டா இல்லத்தின் பள்ளியில் ஆசிரியராக நிர்ணயிக்கப்பட்டார். அங்கு சிலகாலம் ஆசிரியராகவும், பள்ளி முதல்வராகவும் பணிபுரிந்தார். அப்போது கல்வியோடு சமூக சேவையும் செய்தார்.

கிழக்கு கல்கத்தாவின் லொரேட்டா கன்னியர் மடப்பள்ளியில் தனது இறுதி துறவற உறுதி மொழியினை 14.05.1937ல் எடுத்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கல்கத்தாவில் உள்ள புனித மரியாள் பெண்கள் பாடசாலைக்கு மாற்றப்பட்டார்.

1943ல் கல்கத்தாவில் ஏற்பட்ட பஞ்சத்தாலும், 1946ல் இந்து முஸ்லீம் வன்முறையாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் செய்ய முயற்சித்தார். ஆனால் லொரோட்டாவின் விதிமுறைகள் கடுமையானவை. ஆகையால் அவை தெரேசா முழு நேர சேவை புரியவோ அல்லது சேவைக்கு அதிக நேரம் செலவழிக்க அனுமதிக்கவில்லை.

 

சமூகப் பணிகள்

10.09.1946ல் தியானத்திற்காக கல்கத்தாவிலிருந்து டார்ஜிலிங் லொரேட்டா கன்னி மடத்திற்கு பயணம் செய்தபொழுது அவருள் நேர்ந்த உள் உணர்வை “அழைப்பினுள் நிகழ்ந்த அழைப்பு” என்று கூறினார்.

தான் கன்னி மடத்தை விட்டு வெளியேறி ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், அவ்வாறு தவறினால் இறை நம்பிக்கையை மறுதலிப்பதற்கு ஒப்பானது என்று எண்ணி லெரோட்டாவில் இருந்து விலக முடிவு செய்தார். பின்; 12.04.1948ல் லெரோட்டாவில் இருந்து வெளியேறினார்.

லெரோட்டாவில் அணியும் வழக்கமான உடையைத் தவிர்த்து நீலப்பட்டை போட்ட வெள்ளை நிற பருத்திப் புடவையை அணிந்தார். பின் பாட்னாவில் உள்ள செயின்ட் பேமிலி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மேற்கொண்டார். பலதரப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையைக் கற்றார். இந்திய குடியுரிமையினைப் பெற்று குடிசைப் பகுதிகளுக்குச் சென்று சேவையை ஆரம்பித்தார்.

முதலில் மோதிஜில்லில் பள்ளிக் கூடம் ஒன்றை ஆரம்பித்தார். பின் ஏழைகளுக்கான மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்தார். முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று உபரி மருந்துகளை கொடுத்து உதவுங்கள். எல்லாம் ஏழை மக்களுக்குத் தான் என்று உதவி கேட்டார். அவரது முயற்சிகள் விரைவிலே பிரதமர் உட்பட இந்திய உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில் தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானம் இல்லாமல் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததாகவும் ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும் கன்னி மடத்தின் வசதிகளுக்கு திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

07.10.1950ல் பிறர் அன்பின் பணியாளர் என்ற அமைப்பை மறை மாவட்ட அளவில் தொடங்க தெரேசாவுக்கு கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்தது. உண்ண உணவற்றவர்கள், உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழுநோயாளிகள், சமூகத்திற்கு தேவையற்றவர்கள் அன்பு செய்யப்படாதவர்கள், கவனிக்கப்படாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களையும் கவனித்தலே பிறர் அன்பின் பணியாளர் அமைப்பின் நோக்கம் என்று அவர் கூறினார்.

கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறிய அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு இன்று 6000-க்கும் மேலான அருட்சகோதரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்கள், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்கள், தொண்டு மையங்களாகவும் கொண்டுள்ளது.

இதில் அகதிகள், குருடர்கள், ஊனமுற்றோர்கள், முதியோர்கள், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டோர் என பல்வேறு தரப்பு மக்கள் கவனிக்கப்படுகின்றனர்.

1952ல் கல்கத்தா நகரின் ஒதுக்குப்புறத்தில் தெரேசா இறப்பின் வாயிலிருப்போருக்கு முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இறப்பின் வாயிலிருப்போருக்கான காளிகாட் இல்லம் எனப் பெயரிட்டார். பின் தூய இதயமுடையோர்களின் காளிகாட் இல்லம் என்று மாற்றி பெயரிட்டார். இங்கு கொண்டுவரப்படுபவர்களுக்கு மருத்துவ கவனிப்பும், அவரவர் சொந்த சமயசடங்குகளுக்கான இறப்பு அடக்கமும் அளிக்கப்பட்டது.

பின் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர்களுக்கான சாந்தி நகரைத் தொடங்கினார். அன்பின் பணியாளர் சபை கல்கத்தா நகர் முழுவதும் பல தொழு நோய் கூர்நோக்கு மருந்தகங்களை தோற்றுவித்து அதன் மூலம் மருந்துப் பொருட்கள், உணவு, காயங்களுக்கு கட்டும் துணி ஆகியவற்றை வழங்கி வந்தது.

அனாதை குழந்தைகளுக்கென 1955ல் நிர்மலா சிசுபவனையும், மாசில்லா இருதய அன்னையின் குழந்தைகள் காப்பகத்தையும் துவங்கினார். இவ்வமைப்பு புது பணியாளர்களையும், நன்கொடையாளர்களையும் ஈர்க்கத் தொடங்கி 1960ல் இந்தியா முழுவதும் நல்வாழ்வு மையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் ஆரம்பித்து பின் உலகம் முழுவதும் அதனை அன்னை தெரேசா ஏற்படுத்தினார்.

ஆனால் அவரது செயல்பாடுகள் மற்றும் தத்துவங்கள் விமர்சனத்துக்குள்ளாயின. ஆனாலும் அவரது முயற்சிகளால் தொடர்ந்து சமூக சேவை ஆற்றினார். 05.09.1997ல் உடல் நலக்குறைவால் அன்னை தெரேசா இயற்கை எய்தினார். இந்திய அரசு, அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கினை செய்தது.

 

விருதுகள்:

1962ல் பத்மஸ்ரீ விருது, மகசேசே விருது, 1971ல் 23வது போப்ஜான் அமைதி விருது, 1971ல் குட்சமரிட்டன் விருது, 1971- கென்னடி விருது, 1972- சர்வதேச புரிந்துணர்வுள்ள ஜவஹர்லால் நேரு விருது, 1973-டெம்பிள்டன் விருது, 1977 கேம்பிரிட்ஜ் கவுரவ டாக்டர் பட்டம், 1979 – அமைதிக்கான நோபல் பரிசு, 1982-பெல்ஜியம் நாட்டு கௌரவ டாக்டர் பட்டம், 1985-சுதந்திரத்திற்கான பிரிடென்ஷியல் விருது, 1996-அமெரிக்க கௌரவ பிரஜை, 1980ல் இந்திய உயரிய விருதான பாரதரத்னா விருது ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

அன்பு, கருணை, அரவணைப்பு, இரக்கம் ஆகியவற்றைக் கொண்டு தனது உறுதியான மனம் மற்றும் விடாமுயற்சியின் மூலம் சமூகத்தில் நலிந்தோருக்காக சேவைகள் புரிந்து மக்கள் மனதில் இன்றளவும் அன்னையாக உள்ள அன்னை தெரேசாவைப் போற்றுவோம்.

– வ.முனீஸ்வரன்