அன்பான பெற்றோர்களுக்கு, உங்களின் குழந்தை வளர்ப்பில் நான் சொல்ல விரும்புவது இரண்டு.
1. தட்டி வையுங்கள்
2. தட்டிக் கொடுங்கள்
இந்த இரண்டும் உங்களின் குழந்தை வளர்ப்பில் நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான நடைமுறை என்பது என் எண்ணம்.
தட்டி வையுங்கள்
இன்றைக்கு நம்மில் பெரும்பாலோர் ஒரு குழந்தையோ, இரண்டு குழந்தைகளோ வைத்திருக்கிறோம்.
நம்முடன் பிறந்தவர்கள் நான்கு அல்லது ஐந்து நபர்களாக இருந்திருப்பர். ஆதலால் நாம் சிறுவர்களாக இருக்கும்போது உடை, தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் உட்பட எல்லாவற்றிற்கும் போட்டி இருந்திருக்கும்.
ஒரு சில பொருட்கள் நமக்கு சிறுவயதில் கிடைத்திருக்கும். ஒரு சில பொருட்கள் கிடைத்திருக்காது.
நமக்கு சிறுவயதில் கிடைக்காது, ஏக்கத்தை உண்டாக்கிய பொருட்கள் நம்மிடையே இன்றைக்கும் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி இருக்கிறது.
எப்படி என்றால், நான் சிறுவயதில் அனுபவிக்காத பொம்மைகள், இனிப்புகள் உட்பட அனைத்து இன்பங்களும் நம்முடைய குழந்தைகள் அனுபவித்துவிட வேண்டும் என்பதுதான் அது.
ஆக, குழந்தைகள் எதனைக் கேட்டாலும் அதனுடைய பயன் மற்றும் விளைவுகள் பற்றி அறியாது வாங்கிக் கொடுப்பவர் ஒரு ரகம் என்றால், அதனையே அளவுக்கு அதிகமாக வாங்கிக் கொடுப்பவர் மற்றொரு ரகம்.
எடுத்துக்காட்டாக உங்கள் குழந்தை லட்டு கேட்டால் நீங்கள் ஒரு டப்பா நிறைய லட்டை வாங்கிக் கொடுத்தால் அது உங்கள் குழந்தையின் உடல்நலனைப் பாதிக்கும். நம்முடைய பெற்றோர் எதனைக் கேட்டாலும் வாங்கித் தருவர் என்ற அநாவசியமான நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இதன் விளைவு குழந்தைகள் பெரியவர்களானதும் நமது சக்திக்கு மீறி பொருட்களைக் கேட்டு அடம்பிடிக்கும்போது, நாம் வாங்கிக் கொடுக்க முடியாமல் திணறி, அதனை மறுக்கிறோம்.
நம்முடைய மறுப்பை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது மனரீதியாக பாதிப்பு உள்ளாகின்றனர். சில நேரங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
ஆதலால் உங்களின் பொருளாதாரம், சூழ்நிலை பற்றி சிறுவயது முதலேயே குழந்தைகள் தெரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
எந்த பொருளும் எளிதாகக் கிடைப்பதில்லை என்பதனையும் குழந்தைகளை உணரச் செய்யுங்கள்.
சின்ன சின்ன ஏமாற்றங்களை குழந்தைகள் தாங்கிக் கொள்ளும் தன்மையை வளர்த்து விடுங்கள்.
தட்டிக் கொடுங்கள்
குழந்தைகள் அடுத்து என்ன செய்வது என்று செய்வதறியாது திகைக்கும் போதும், தெரியாமல் செய்த தவறுகளினால் வெட்கி நிற்கும் போதும் உங்களின் அரவணைப்பு கண்டிப்பாக அவர்களுக்குத் தேவை.
அந்த தருணங்களில் அவர்களை அரவணைத்து அவர்களிடையே நம்பிக்கையை உண்டாக்கி அதனை பலமடங்கு அதிகரிக்கச் செய்யுங்கள்.
ஏமாற்றங்களையும் தாண்டி முன்னேறி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள்.
அளவான அன்பு, தேவையான அரவணைப்பு, அதிகமான நம்பிக்கையையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி அன்பான பெற்றோர்களாக வாழுங்கள்.