இக்காலங்களில்
தனித்தே இருக்கிறது
மொட்டை மாடி நிலவு!
பூக்கள் தொலைந்து போன
ஏதோ ஓர்
சமாளிப்புப் புன்னகையின் ஊடே
நகர்ந்து போகிறது
நிகழ்வு!
பந்தயங்களின் ஓட்டத்தில்
இனிமையை
இங்கெவருக்கும்
வரவேற்க நேரமில்லை!
நேரத்தைக் காரணமாக்கி
நேசத்தைக் கொச்சைப்படுத்துதல்
தொடர்கதை!
வாதப் பிரதிவாதங்களில்
பொதிந்திருக்கும்
வரலாறு புவியியல்
என
வாய்கிழிந்த சர்ச்சைகளின்
மத்தியில்
அன்புக்கு ஏதும்
கணங்களில்லை!
சூன்யங்களை
செதுக்கிக் கொண்டபடி
வென்று விட்டதாய்
மார்தட்டிக் கொள்ளுதலின் பொருட்டு
சுவையிழக்கிறது
அன்பின் அருகாமை!
சுயநலக் குறிக்கோள்களின்
பெருவெளியில்
அங்கெங்கினாதபடி
எங்கெங்கும்
அடையாளங்களைத்
தொலைத்து நிற்கின்றன
மாபெரும்
அன்பு சாம்ராஜ்யங்கள்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!