அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை

என்னுடைய மாமனாரின் முதல் நினைவு நாளுக்காக, மனைவி, குழந்தைகள் என குடும்பம் சகிதமாக விருதுநகரில் இருந்த மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.

என்னுடைய சொந்த ஊரும் விருதுநகர் தான். நான் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பினை முடித்ததும் இந்த ஊரில்தான்.

கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்றவன், அங்கேயே வேலையும் கிடைக்க, அப்பாவின் டிரேடிங்கையும் சென்னைக்கு மாற்றச் சொல்லி அம்மா, அப்பா மற்றும் பாட்டியுடன் சென்னையிலேயே செட்டிலாகி விட்டேன்.

அதன் பின்னர் ரங்கநாயகியைத் திருமணம் முடித்து, இரண்டு குழந்தை மற்றும் பெற்றோருடன் சென்னையில் வசித்து வருகிறேன்.

ஆதலால் விருதுநகர் ஒன்றும் எனக்கும் மனைவிக்கும் புதிதல்ல. விருதுநகரின் எல்லா இடங்களும் எனக்கு அத்துபடி.

மாமனாரின் நினைவு நாளுக்காக, மனைவியின் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் என நான்கு குடும்பத்தினர் ஆஜராகியிருந்தனர்.

காலை பதினோரு மணிக்கு மாமனார் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு மல்லிகைப்பூ மாலை சாற்றி சாதம், சாம்பார், கூட்டு, கருவாட்டுக் குழம்பு, இனிப்பு, கார வகைகள், ரவை பணியாரம் என படையலிட்டு சாமி கும்பிட்டனர். சாமி கும்பிட்டு முடிக்க அரைமணி நேரம் ஆனது.

அப்போது மினிபஸ் ஒன்று காலியாக வந்து வீட்டு முன்னே நின்றது. மூத்த மச்சினர் எல்லோரையும் மினி பஸ்ஸில் ஏறச் சொன்னார்.

“எங்கே?” என்று எல்லோரும் கோரஸாகக் கேட்க, “ஏறுங்கள்; உங்களுக்குப் புரியும்.” என்று புதிராக பதில் அளித்தார்.

“சரி” என்று எல்லோரும் மினி பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம். பஸ் ஊருக்கு வெளிப்புறம் அருப்புக்கோட்டை ரோட்டில் சென்று, மரங்கள் அடர்ந்த ஒரு கட்டிடத்தின் முன்னால் நின்றது.

எனக்கு அதைப் பார்த்ததும், ‘இது முதியோர் இல்லம் அல்லவா?’ என்று எண்ணம் உண்டானது.

ஆம். அது ‘கருணை முதியோர் இல்லம்‘ என்பதை கட்டிடத்தின் மேலே எழுதியிருந்த வாசகம் உறுதி செய்தது.

நான் எட்டாவது படிக்கும்போது, ஊருக்கு வெளிப்புறத்தில் அமைந்திருந்த கிரிக்கெட் கிரவுண்டிற்கு விளையாட வரும்போது, இக்கருணை இல்லத்தை பார்த்திருக்கிறேன்.

அப்போது இப்பகுதியில் கருணை இல்லம் மட்டுமே இருக்கும். சுற்றிலும் விருதுநக‌ருக்கே உரித்தான திறந்த பொட்டல்வெளி. அப்பொட்டல்வெளியைத் தான் நாங்கள் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்துவோம்.

மூன்று வருடங்கள் கழித்து, நான் பதினொன்றாவது படிக்கும்போது கருணை இல்லத்திற்கு அருகில் இருந்த கிரிக்கெட் கிரவுண்டிற்கு ஒருமுறை விளையாட வரும்போது, மரக்கன்றுகள் நட்டிருந்ததைக் கவனித்தேன்.

அதன் பின்னர் சென்னை சென்றுவிட்டதால் கருணை இல்லத்தைப் பார்க்கவில்லை. இன்றுதான் மரங்களோடு கூடிய கருணை இல்லத்தைப் பார்க்கிறேன். ஆதலால் எனக்கு அடையாளம் தெரியவில்லை.

அத்தோடு நாங்கள் விளையாடிய கிரிக்கெட் கிரவுண்டும் இப்போது இல்லை. அவ்விடத்தில் முந்திரி எண்ணெய் பாக்டரி அமைத்திருந்தனர்.

பழைய நினைவுகளில் மூழ்கியதால் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நான் கவனிக்கவில்லை.

என்னுடைய மனைவி “எல்லோரும் உள்ள போயிட்டாங்க. நீங்க என்ன சுத்தி சுத்தி வேடிக்கை பார்த்துக்கிட்டு? வாங்க போவோம்” என்றதைத் தொடர்ந்து நான் அவள் பின்னே சென்றேன்.

கருணை இல்ல நிர்வாகி மூத்த மச்சினரிடம் “எல்லா ஏற்பாடும் ரெடியா இருக்கு. உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம். ஆரம்பிச்சுடலாமா?” என்றார்.

“ம். சரி” என்றார் மச்சினர்.

நாங்கள் நின்றிருந்த ஹாலுக்கு கருணை இல்லத்திலிருந்த பெரியவர்கள் அனைவரையும் அழைத்து வருமாறு அங்கிருந்த வேலைக்காரப் பெண்ணிடம் கூறினார் நிர்வாகி.

அடுத்த இரண்டு நொடிகளில் பத்து ஆண்கள், எட்டு பெண்கள் என பதினெட்டு பெரியவர்கள் வந்தனர்.

அவர்களில் பச்சைப்புடவை அணிந்திருந்த பெண்ணை, எங்கேயோ பார்த்திருந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அப்பெண்மணி எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்ததால் அவருடைய‌ முகம் எனக்கு சரியாகத் தெரியவில்லை.

நான் நின்ற இடத்திலிருந்து நகர்ந்து அவருடைய முகம் தெரிந்த இடத்திற்குச் சென்று உற்றுப் பார்த்தேன். எனக்குள் ஒரு படபடப்பு ஏற்பட்டது.

‘இது.. இது… பாக்கியம் பாட்டி? அவங்க எப்படி இங்க?’ என்ற எண்ணம் ஏற்பட அதிர்ந்தேன்.

அதற்குள் நிர்வாகி பேச ஆரம்பித்தார்.

“திரு.இராமநாதன் அவர்களின் முதல் நினைவு தினத்திற்காக, அவருடைய வாரிசுகளான இராமமூர்த்தி, இராதாகிருஷ்ணன், ராஜாத்தி, ரங்கநாயகி ஆகியோர் நமது கருணை இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு மதிய உணவு வழங்க இருக்கிறார்கள். ஆதலால் பெரியவர்கள் அவர்களை வாழ்த்தி பாடி ஆசீர்வாதம் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று முடித்தார்.

பெரியவர்கள் இராமநாதனின் பிள்ளைகளை வாழ்த்திப் பாட ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்கள் பாடியது எதுவும் என் காதில் விழவில்லை.

‘பாக்கியம் பாட்டி தானா இப்பெண்மணி?’ என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டே இருந்தது.

வாழ்த்துப் பாடல் முடிந்ததும் குடும்பத்தினர் எல்லோரும் அங்கிருந்த பெரியவர்களின் முன்னால் விழுந்து வணங்கினோம்.

பெரியவர்கள் எல்லோரும் கோரஸாக “வாழ்க வளமுடன்” என்று ஆசீர்வதித்தனர்.

பின்னர் பெரியவர்கள் டைனிங் டேபிளில் அமர நாங்களே உணவு பரிமாறத் தொடங்கினோம்.

இப்போது பச்சைப்புடவை பெண்மணியை பக்கத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஆம், அவர் பாக்கியம் பாட்டிதான்.’ என்பதை நான் உறுதிபடுத்தினேன்.

அவருடைய முகத்தை உற்றுப் பார்த்து மெலிதாக புன்னகைத்தேன். “பாக்கியம் பாட்டி எப்படி இருக்கீங்க?” என்றேன்.

அவர் பதில் ஏதும் கூறாமல் என்னை ஆழமாகப் பார்த்தார். “நான் சரவணன். மேலத்தெரு மீனாட்சியின் பேரன்.” என்றேன்.

என்னை அடையாளம் கண்டுகொண்டு, நேரே பார்க்க சங்கடப்பட்டு தலை கவிழ்ந்தார். அதற்கு மேல் அவரை தொந்தரவு செய்ய எனக்கு விருப்பம் இல்லை.

என்னுடைய கண்களில் நீர்முட்டியது. துக்கத்தை அடக்கிக் கொண்டு எல்லாப் பெரியவர்களுக்கும் உணவினைப் பரிமாறினேன்.

என்னுடைய பாட்டியும் பாக்கியம் பாட்டியும் பள்ளிக் காலத்துத் தோழிகள். இருவருக்கும் பிறந்த ஊரிலேயே திருமணம் நடந்திருந்தது.

கீழத்தெருவின் இரட்டை அடுக்கு காரை வீட்டில் அவருடைய குடும்பம் வசித்து வந்தது.

அவருடைய வீடு ‘ஹை ரூஃப்’ என்ற அமைப்பில் இருந்தது. அதாவது கீழ்வீட்டுக்கும், முதல் மாடி வீட்டுக்கும் ஒரே கூரை. அவருடைய வீடு கீழத்தெருவிற்கு முக்கியமான அடையாளம்.

பாக்கியம் பாட்டியின் பிறந்த வீடும், புகுந்த வீடும் நல்ல வசதி. பாட்டிக்கு இரண்டு பையன்கள்.

பாட்டியின் கணவர் பெரிய மிளகாய் வத்தல் வியாபாரி. ஆதலால் பாக்கியம் பாட்டி எப்போதும் மிடுக்காகவே இருப்பார். அவருடைய நடை, உடை, கம்பீரத்தைப் பார்த்து நான் சிறுவயதில் ஆச்சர்யப்படுவேன்.

என்னுடைய தாத்தா எண்ணெய் கம்பெனியில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்தவர். ஆதலால் எங்களுடைய குடும்பம் நடுத்தரமானது.

பாக்கியம் பாட்டி சமையலில் கைதேர்ந்தவர். தீபாவளி, தைப்பொங்கல், பங்குனிப் பொங்கல் நாட்களில் விதவிதமாக பலகாரங்கள், பட்சணங்கள் செய்வார். தன்னுடைய பள்ளித் தோழியான என்னுடைய பாட்டிக்கும் கட்டாயம் கொடுத்தனுப்புவார்.

அவர் செய்யும் முறுக்கு, அதிரசம், தட்டை, கருப்பட்டி மிட்டாய் போன்ற பட்சணங்களின் சுவையை இன்றைக்கு யாராலும் செய்து தர இயலாது.

விருதுநகர் மாரியம்மன் கோவில்தான் தோழிகள் இருவரும் சந்திக்கும் இடம். நான் பாட்டியுடன் கோவில் செல்லும் சமயங்களில் “சரவணா, சரவணா” என்று ஆசை தீரக் கூப்பிட்டு நான் விரும்பியவற்றை வாங்கித் தருவார். எங்கள் பாட்டியிடம் குடும்ப விவரங்களைக் கேட்டறிந்து அவ்வப்போது உதவுவார்.

எல்லாவற்றையும்விட நான் பன்னிரெண்டாவது வகுப்பு முடித்து கல்லூரியில் சேர பணம் இல்லாதபோது, ‘எண்ணெய் மகுமை டிரஸ்டில்’ என்னுடைய மதிப்பெண்களைக் கூறி, டிரஸ்டில் ஸ்காலர்ஷிப் வாங்க, தன்னுடைய கணவரிடம் பரிந்துரைத்ததே பாக்கியம் பாட்டிதான்.

நான் கல்லூரி சேரும் காலத்தில், இப்போது போல் பேங்குகளில் கல்வி கடன் எல்லாம் கிடையாது. ஆதலால் பாக்கியம் பாட்டி என்னுடைய வாழ்க்கையில் கல்வி விளக்கை ஏற்றிய தெய்வம்.

நான் தினந்தோறும் ஒருமுறையாவது அவரை நினைத்து விடுவேன். அவர் இல்லையேல் இன்றைக்கு எனக்கான சமூக அந்தஸ்து இல்லை.

‘ஆனால் இன்று அவர் ஒருவேளை சோற்றுக்காக அடுத்தவர்களை வாழ்த்திப்பாடி’, நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

நான் சுயநினைவிற்கு வந்தபோது, பாக்கியம் பாட்டியைக் காணவில்லை. கருணை இல்ல நிர்வாகியை தனியே சந்தித்து பாக்கியம் பாட்டியைப் பற்றி விசாரித்தேன்.

“பாக்கியம் அவர்களின் கணவர் இறந்த பிறகு அவருடைய பிள்ளைகள் இருவரில், யார் வீட்டில் வைத்து அவரைப் பார்த்துக் கொள்வது என்பது பஞ்சாயத்து. அப்பிள்ளைகளுக்கு ப‌ணத்திற்கு எல்லாம் பஞ்சமில்லை. அன்பிற்கு பஞ்சம்.

ஆதலால் கருணை இல்லத்தில் பணத்தைக் கட்டி தனி அறை எடுத்துக் கொடுத்துள்ளனர். அவருக்கு வேண்டியளவுக்கு கைசெலவுக்கு காசு கொடுக்கச் சொல்லி என்னிடம் கொடுப்பர்.

ஆனால் இதே ஊரில் இருக்கும் பிள்ளைகள் ஒருவரும் அவரை வந்து பார்க்க மாட் டார்கள். பாக்கியம் அவர்கள் பணத்தை தொடக்கூட மாட்டார்.” என்றார் நிர்வாகி.

“பின்னர் நீங்கள் ஏன் அவரை ஒருவேளை சோற்றுக்காக, அடுத்தவர்களை வாழ்த்திப் பாடச் சொல்கிறீர்கள்?” என்று என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

“கருணை இல்லத்தில் சில விதிமுறைகள் இருக்கு. இங்கிருக்கும் பெரியவர்கள் அதனைக் கட்டாயம் பின்பற்றித்தான் ஆகவேண்டும். அதில் ஒன்றுதான் உணவிடுபவர்களை வாழ்த்திப் பாடுவது.” என்றபடி அவர் நகர்ந்து விட்டார்.

எனக்கு இந்த உலகமே வெறுமையாகத் தெரிந்தது. அங்கு வந்த என் மனைவி “இங்க என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க? வாங்க போகலாம்.” என்றாள்.

சென்னை திரும்பிய நான் பாட்டியிடம் நடந்தவைகளைக் கூறினேன். நான் பாக்கியம் பாட்டியைப் பார்த்ததில் என் பாட்டிக்குச் சந்தோசம். ஆனால் அவருடைய தற்போதைய சூழ்நிலை பாட்டிக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.

பாக்கியம் பாட்டியை உடனே பார்க்க விரும்புவதாக எனது பாட்டி தெரிவிக்க, அடுத்த வாரம் சென்னையிலிருந்து கிளம்பி வந்து, கருணை இல்லத்திற்கு நானும் பாட்டியும் சென்றோம்.

என்னைப் பார்த்தால் பாக்கியம் பாட்டி பேச மாட்டார் என்பதால், என்னுடைய பாட்டியை மட்டும் உள்ளே அனுப்பினேன். என் பாட்டியும் பாக்கியம் பாட்டியுடன் அரைநாள் இருந்து அளாவளாவிவிட்டு வந்தார்.

“பணத்திற்குக்கான பஞ்சம் என்றாவது ஒருநாள் நீங்கி விடும். ஆனால் அன்பிற்கு பஞ்சம் ஒருநாளும் நீங்காது. அன்பிற்கு பஞ்சம் இல்லாத நீயே உலகத்தில் பணக்காரி” என்று பாக்கியம் என்னை கூறுகிறாள்” என்று என் பாட்டி கூறினார்.

இளமையில் எனக்கு ஏற்பட்ட பணப்பஞ்சம் என்ற நிலை நீங்கி விட்டது. முதுமையில் பாக்கியம் பாட்டிக்கு ஏற்பட்ட அன்பிற்கு பஞ்சம் என்ற நிலையை நீக்குவது யார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

வ.முனீஸ்வரன்

One Reply to “அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை”

  1. இளமையில் எனக்கு ஏற்பட்ட பணப்பஞ்சம் என்ற நிலை நீங்கி விட்டது. முதுமையில் பாக்கியம் பாட்டிக்கு ஏற்பட்ட அன்பிற்கு பஞ்சம் என்ற நிலையை நீக்குவது யார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

    அற்புதமான வரிகள். கதையின் மையமான கரு வாழ்வின் மையமான அன்பாகயிருக்கிறது. இயல்பாய் கதை ஓடுகிறது. கதை சொன்ன முறை சிறப்பாக உள்ளது. கதை சொல்லி ஆகி விட்டீர்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.