உயிர் தந்த என் உயிரே
உறவென நினைத்தேன் உனையே
என் காப்பியத்தின் கலைமகனே
என் காலத்தின் மூலவனே
உனக்காய் ஒரு கவியை
உரித்தாக்க நான் எண்ணி
உயிர் என்னும் உதிர மையால்
எழுதும் வெள்ளை வரிகள் இவை
நீயில்லா உலகம் தனை
கனவில் கூடக் கண்டதில்லை
நிஜத்திலே அது நடந்து
நித்திரையை நான் தொலைத்தேன்
அழுக்கால் நீ நிறைந்து
அழகாய் என்னை வார்த்தெடுத்தாய்
அழகாய் அமைந்த வாழ்வுதனில்
அழுகையை ஏன் திணித்து வைத்தாய்
நடுக்கடலில் தத்தளிக்கும் நம்
குடும்பக் கப்பல்தனை
வழிகாட்ட நீயும் எண்ணி
உன் உடலை தீப்பந்தம் ஆக்கி விட்டாய்
சூரிய வெப்பம் தாங்காமல்
தீப்பிளம்பை ஏந்தி விட்டாய்
உன் தேகம் கருகியதால்
என் மேனி உருகியதோ
தாயின் திருமஞ்சனத்தை
திருடிச் சென்ற தலைமகனே
தரணியெங்கும் தேடிவிட்டேன்
தனியே விட்டு எங்கு சென்றாய்
வழிநடத்த வேண்டியவன்
வழித்தடத்தில் விட்டுச் சென்றதால்
வாழ்வறியா பிள்ளை நான்
வலியோடு நிற்கின்றேன்
என் பிஞ்சு விரல்களுக்கு மத்தியி்ல்
இருந்த உன் சுட்டு விரலை
என் அனுமதி இன்றி பிரித்துச் சென்றாய்
அனாதையாய் இங்கு விட்டுச் சென்றாய்
முட்பாதை நிறைந்த இவ்வுலகில் எனை
வெறுங்காலோடு விட்டுச் செல்ல மனம் ஏனோ
தாலியில்லா தாயைக் கண்டு
தினம்தினம் இறக்கும் சாபம் எனக்கேனோ
அப்பா எனும் அன்புக்கவி
என் அகராதியில் தொலைந்ததேனோ
நீ தந்த ஆசை முத்தம் இன்று
என் கண்ணீரால் அழிந்ததேனோ
அள்ளி அணைத்த கரங்கள்
மண்ணோடு மறைந்ததேனோ
ஆறுதல் சொன்ன மொழிகள்
காற்றோடு கலந்ததேனோ
நிறைவாய் வாழ்ந்த நாட்கள்
நெஞ்சோடு புதைந்ததேனோ
காணாமல் போன என் உயிரே
உனைக் காணத் துடிக்குது உன் உயிரே
கண்ணுக்கெட்டா தூரம் சென்றாய்
கண்ணீர் கடலில் விட்டுச் சென்றாய்
நீச்சல் தெரியா உன் பிள்ளை
நித்தம் நித்தம் நீச்சல் அடிக்குது அக்கடலில்
உன் துணை இல்லாமல்
கரை சேர முடியவில்லை
உனை இழந்து
வாழ்க்கைக் கடலில் தத்தளிக்கிறேன்
நித்தம் உன் நினைவுகளோடு!!!!
சி.பபினா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!