அன்பெனும் பயிரினை அறுவடை செய்திட
அதையே விதைத்திட வேண்டும்
இன்பமும் மகிழ்வும் வாழ்வில் நிலைத்திட
எளிய வழியிது வாகும்
சின்னஞ் சிறுவேர் நீரினை ஈர்த்திட
சிறப்பென மரமும் வாழும்
எண்ணம் அதுபோல் நல்லவை ஈர்த்திட
இனிதென வாழ்வும் மாறும்
புன்னகை பூவினை முகத்தில் பூத்திட
புயலும் பூவென மாறும்
பண்பட்ட மொழியினை இதழ்கள் உதிர்த்திட
பகைமை இல்லா தாகும்
வண்ணம் நமது கண்களில் நிலைத்திட
வாழ்வினில் கருமை அகலும்
கண்களால் காண்பவை நல்லவை என்றிட
கரங்களில் வெற்றியே சேரும்
செந்நிற சூரியன் நிலவினை காய்ந்திட
சிவந்தே நிலவது மின்னும்
வண்டுகள் துளையிட மூங்கிலும் வழிவிட
வேணுவின் கானமே தோன்றும்
அன்பெனும் அம்புகள் நாமும் எய்திட
அதுவே நம்மிடம் மீளும்
குன்றா வளமையை நாமும் அடைந்திட
கூடியே வாழ்ந்திட வேண்டும்.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)