அன்பென்ற மழையிலே! – ஆனந்த். கோ

அந்த எந்திரப் பறவை தரையிறங்க பத்து நிமிடமே இருந்தது. கிட்டத்தட்ட எல்லா பயணியரும் பரபரப்புடன் இருந்தனர். வசந்த் லேசான புன்முறுவலுடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

பத்து மணி நேரம் பொறுமையாகப் பிரயாணம் செய்பவர்களால் பத்து நிமிடம் காத்திருக்க முடியவில்லை. அவரவருக்கு என்று பல சொந்த காரணங்கள் இருக்கக் கூடும்.

அறிவிப்பின்படி சீட் பெல்ட் அணிந்து கொண்டான். கண்களை மூடிக் கொண்டான். மறுநிமிடம் மூடிய இமைகளுக்குள் லிசியின் முகம் வந்து மறைந்தது. லிசி அவனைக் கட்டிப் பிடித்து வழி அனுப்பியிருந்தாள்.

அவள் அவனுடைய நல்லதொரு தோழி. தாய் அமெரிக்கன். தகப்பனார் பஞ்சாபி. அங்கே தோழி என்று சொன்னால் போதுமானது. நம் நாட்டில் தான், அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டில் எச்சரிக்கையாக ‘நல்லதொரு’ வார்த்தையை சேர்த்துக் கொள்ளாவிட்டால் அவரவருடைய கற்பனைப்படி வெவ்வேறு அர்த்தங்கள் கற்பித்துக் கொள்ளப்படும்.

“லிசி, நீயும் என்னுடன் வந்து விடேன்.”

“ஆ…” லிசி திடுக்கிட்டுப் போனாள். ஒரு நொடி தான். அடுத்த விநாடி சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறாய்?”

அவளது சிவப்பு லிப்ஸ்டிக் உதடுகள் ஒருமுறை குவிந்து விலகின.

இந்த வெள்ளைக்காரியை உன் வீட்டில் என்னவென்று அறிமுகப்படுத்துவாய்?

“ஏன்? என் தோழி என்று தான். இந்தியா நிறைய மாறியிருக்கிறது லிசி. உன் அம்மாவுடைய காலம் போலில்லை இப்போது”

“அப்படியானால் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிமுகப் படுத்துகிறாயா? உடனே வருகிறேன்.”

இம்முறை வசந்த் சிரித்தான்.

“அப்படியென்றால் முதலில் ராபர்ட்டிடம் சம்மதம் கேட்டுவிடு. பிறகு எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து விடலாம்”

ராபர்ட்தான் அவளுடைய பாய் ஃபிரன்ட்.

“பார்த்தாயா? இதுதான் உங்கள் நாட்டு இளைஞர்களின் மனப்பாங்கு. ஓரிருவர்  தவிர்த்து”

அந்த ஓரிருவரில் அவளுடைய தந்தையும் ஒருவர் என்பதை வசந்த் அறிவான்.

“நீ இவ்வளவு சீரியஸாக இருப்பதால் நிச்சயம் என் பெற்றோர் சம்மதம் வாங்கி வருகிறேன். அதற்குள் நீயும் ராபர்ட்டைக் கழட்டி விட்டு விடு”.

அவளைப் பிரிய மனமின்றி தான் வசந்த் கிளம்பினான். இப்படியொரு பிணைப்பு அவளுடன் ஏற்படும் என்று அவன் நினைத்துப் பார்த்ததேயில்லை.

உண்மையில் முதலில் ராபர்ட் தான் இவனுக்கு அறிமுகமானான். அதன் பின்னர் தான் லிசி ராபர்ட்டின் கேர்ள் ஃபிரன்டாக அறிமுகமானாள். இருவரையும் இந்தியப் பின்னணி நெருங்க வைத்தது. ராபர்ட்டின் அசாதாரண புரிதலின் காரணமாய் இவர்களின் நட்பு மேலும் வலுப்பெற்றது.

இந்த இரண்டு வருடங்களில் அவனுடன் பழகியதை வைத்து ஓரளவு அவனுடைய குடும்பத்தைப் பற்றி சரியாகவே கணித்து வைத்திருக்கிறாள் லிசி. வசந்தின் தந்தை வேண்டுமானால் ஒரு வெள்ளைக்காரியை மருமகளாக ஏற்றுக் கொள்ள அரைமனதுடன் சம்மதிக்கக் கூடும்.

அவனுடைய அம்மாவால் நிச்சயம் முடியாது.

சாந்த சொரூபியான அவள் சில விஷயங்களில் பத்ரகாளியாக மாறுவதை பல நேரங்களில் கண்ணுற்றவன் வசந்த். அதன் காரணமாகவோ என்னவோ அவனால் சில வரம்புகளை மீற வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.

துவக்கத்தில் கேலி செய்த நண்பர்கள் பின்னர் அவனைக் கண்டு வியக்கவும், அவனுக்காக சில விஷயங்களைத் தவிர்க்கவும் செய்தனர்.

இப்போதும் அப்படித்தான்.இரண்டு வருடங்களில் வந்துவிட வேண்டும் என்ற தாயின் வேண்டுகோளை ஏற்று சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்

“நீ அங்கே வேலையை முடித்துக் கொண்டு விரைவில் வா. திருமணம் செய்து கொண்டு எங்களுடன் கொஞ்ச காலமேனும் இரு” என்று இரண்டு மாதங்கள் முன்பாகவே பெற்றோர் சொல்லி விட, வேறுவழியின்றி கிளம்பி விட்டான்.

தன்னுடன் வந்து தங்கியிருக்குமாறு அவர்களைப் பலமுறைக் கேட்டும், அவர்களுக்கு அங்கே ஒத்து வராது என்று ஒரேடியாக மறுத்து விட்டார்கள்.

‘இனி தமிழ்நாட்டிலேயே வேலை பார்ப்பதா அல்லது மறுபடியும் யு.எஸ்ஸிற்கு கிளம்புவதா?’ என்ற ஒரு தடுமாற்றத்தில் தான் இன்னும் இருக்கிறான்.

இந்தப் பெற்றோர் தம் மக்கள் திருமணத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதம் காட்டுகிறார்கள்?

தங்களுடைய சந்ததியினர் மூலம் தத்தம் இருப்பை இந்த உலகில் நிரந்தரமாகப் பதிவு செய்துவிடும் பேராசையாகத்தான் இருக்கக் கூடும். வேறென்ன?

விமானம் தாழப் பறக்க ஆரம்பித்தது. ஜன்னலினூடே சென்னை வெளிச்சப் புள்ளிகளாய் தெரிய ஆரம்பித்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தமிழ் மண்ணில் காலடி வைக்கப் போகிறான்.

வசந்த் விமான நிலைய சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து வெளியே வர, அப்பா தூக்கக் கலக்கத்துடன் அவனை நோக்கி கையசைப்பது தெரிந்தது. சரியாக காலை இரண்டு மணி. அவர் உடலில் தளர்ச்சி. ஆனால் முகத்திலோ பிள்ளையைக் கண்ட மலர்ச்சி.

“நான் தான் வர வேண்டாம்னு சொன்னேனேப்பா?”.

“இருக்கட்டும்டா. வீட்ல தூங்கறத இங்க தூங்கினேன். இதிலென்ன பெரிய கஷ்டம். வா போகலாம். அம்மா காத்திண்டிருப்பா.”

அம்மாவுக்கு ஃபோன் செய்தார்.

“வசந்த் வந்தாச்சு… ஆமா…ம்” அவ்வளவுதான்.

வீட்டு வாசலில் அம்மா நின்றிருந்தார். கார் வந்து நின்றதும் அம்மா அவசர, அவசரமாக ஆரத்தி தட்டில் கற்பூரம் ஏற்றிக் கொண்டு வருவது தெரிந்தது.

ஆரத்தி எடுத்து முடித்து,”வாடா,ஏதாவது சாப்பிடறியா?”

“அம்மா மணி மூணாகப் போகுது. இப்ப போய் என்ன சாப்பிட சொல்ற?”

“காஃபி குடியேன்”

“வேண்டான்னா விடவாப் போற. கொண்டு வா”.

“சரி. நான் போய் படுக்கறேண்டா. அம்மா பேசி முடிச்சதும் கொஞ்சம் தூங்கி எழு”

“சரிப்பா. காலைல பார்க்கலாம்.”

அம்மா கொடுத்த காஃபியைக் குடித்து முடித்து சிறிது நேரம் பேசி விட்டு உறங்கச் சென்றான் வசந்த்.

லிசி ஞாபகம் வந்தது. ‘வீட்டை அடைந்து விட்டேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினான். கட்டை விரல் உயர்த்தப்பட்ட ஈமோஜி அனுப்பினாள்.

அம்மாவின் அப்போதையப் பேச்சிலும் 100 சதவிகிதம் அவனுடைய திருமணம் பற்றியதாகவே இருந்தது.

அயல்நாட்டில் கொஞ்சம் சம்பாதித்து விட்டுத் திரும்பியவுடன் திருமணம் என்ற வாக்குறுதி அளித்திருந்ததை ஆயிரத்தோராவது முறையாக அவனுக்கு நினைவூட்டினார்கள். 

‘இப்படி ஒரு வாக்குறுதியை ஏன் கொடுத்தோம்?’ என்று அவன் நொந்து கொள்ளுமளவிற்கு இந்த இரண்டு வருடத்தில் அது அடிக்கடி நினைவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி மட்டும் கொடுக்கவில்லை என்றால் அம்மாவின் அதீத அன்பு வளையத்தை விட்டு அவனால் அமெரிக்கா சென்றிருக்கவே முடியாது.

எனினும் வசந்த் ஒரு திட்டத்தை யோசித்து வைத்திருக்கிறான். அம்மாவின் விருப்பப்படி திருமணம் முடிப்பது. பின் சில நாட்கள் கழித்து மனைவியுடன் அமெரிக்காவுக்குக் கிளம்புவது. சரியாக இரண்டு வருடங்களில் கொஞ்சம் பணத்துடன் திரும்பி வந்து சென்னையில் செட்டிலாகி விடுவது என்பது தான் அந்த திட்டம்.

இதில் பெற்றோருக்கு வருத்தம் ஏற்படலாம். கடைசி காலத்தில் தங்கள் வாழ்க்கையின் பிடிமானமான பிள்ளையையோ, பெண்ணையோ பிரிந்து காலந்தள்ளுவது நடுத்தர வர்க்கத்து மக்களின் சாபக்கேடு தான் போலும். ஆனால் வேறு வழியில்லை. 

குறைந்தது இன்னும் இரு வருடங்கள் உழைத்து பணம் சேர்த்து விட்டால் பிறகு இங்கு வந்து தங்குவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

கதவு லேசாகத் திறக்கும் சத்தம். அம்மாவாகத் தான் இருக்கும். வசந்த் கண்களை இறுக்கிக் கொள்கிறான். கட்டிலருகே அம்மா வாசம். சிறிது நேரத்தில் லேசாக கதவு மூடப்படும் சத்தம்.

வசந்த் மறுபடியும் தன் சிந்தனையைத் தொடருகிறான். ‘அப்பா அம்மாவின் பிள்ளைப் பாசத்தையும், அவர்களின் தவிப்பையும்’ அவனால் உணரமுடிகிறது. அவர்களை மறுபடியும் தனியாக விட்டுச் செல்வதற்கு கடினமாகத் தான் இருக்கும். என்ன செய்வது?

இன்னும் இரண்டு நாட்கள்  பொறுத்துக் கொள்வார்கள். அதன்பின் எங்கேயாவது அழைத்துச் சென்று பெண் பார்க்க வைப்பார்கள். எந்த அறிமுகமில்லாமல் அந்த பெண்ணை மணந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டியது தான். 

எப்படித் தொடங்குவது? எங்கே வேலை பார்ப்பது? வருமானம் வரும் வழி? அதெல்லாம் அவன் பாடு. அவர்களைப் பொறுத்தவரை சம்சார சாகரத்தில் அவனை இறக்குவதோடு அவர்கள் கடமை முடிந்தாகிவிடும்.

வசந்த் பெருமுச்சு விட்டான். பத்து மணி நேர தொடர் பிரயாணத்தால் கண்கள் செருகித் தானாகத் தூக்கம் வந்தது.

நினைத்தவாறே அம்மா இரண்டாம் நாள் பெண் பார்க்கும் வைபவத்தைத் தொடங்கி விட்டார்கள்.

அதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது ராபர்ட்டின் ப்ஹொணே கால், “ஹே மேன், எப்படி போய்க் கொண்டிருக்கிறது? அம்மா ஏர்போர்ட்டிலேயே திருமணத்தை முடித்து விட்டார்களா? ஹா ஹா…”

“இல்லை ராபர்ட் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.லிசி எங்கே?”

“இதோ இங்கே தான் இருக்கிறாள்”

“வசந்த் எப்படியிருக்கிறாய்?. பெண் பார்த்தாகி விட்டதா? நீ போனபின் இவன் என்னைக் கண்டு கொள்வதேயிவ்லை. கேட்டால் இனி யார் உனக்காகப் போட்டி போடப் போகிறார்கள் என அலட்சியமாகப் பேசுகிறான்”

“அப்படியா? அவனிடம் நான் இன்னும் போட்டியில் இருப்பதாகச் சொல்”

“சரி. இவனுடன் சேர்ந்து அதிகமாகப் புகைத்துக் கொண்டிருந்தாயே? அங்கே குறைத்து விட்டாயா இல்லையா?”

“ஆமாம். இரண்டு நாட்களாகப் புகைக்காமல் இருக்கிறேன். நீதான் ஞாபகப்படுத்தி விட்டாய்”.

“அப்படியேத் தொடரப் பார். பெண் பார்த்து முடித்ததும் ஃபோன் பண்ணு”

“ஓகே பை”

கார் ஆற்றங்கரையொட்டிய ஓர் அழகிய பசுமையான கிராமத்தில் புகுந்தது. நேற்றே அம்மா அந்த பெண்ணின் புகைப்படம் காட்டியிருந்தார்கள். பெயர் திவ்யா. அழகாகவே இருந்தாள். டிகிரி முடித்திருந்தாள். கிராமத்துப் பெண்.

‘வெளிநாட்டிற்கு வரப் பிடிக்குமா எனத் தெரியவில்லை. இந்த இடமே முடிந்து விட்டால் தேவலாம். இல்லையெனில் இன்னுமொரு பெண், இன்னுமொரு பிரயாணம், இத்யாதி…இத்யாதி…’

கார் பெண் வீட்டை அடைந்தது. விசாலமான பெரிய வீடு. வாசலில் சிவப்பு செம்பருத்தி பூக்கள் அடர்பச்சை நிற இலைகள் பின்னணியில் இரத்தினக் கம்பளமாய் விரிந்திருந்தன.

மல்லிகை, முல்லைக் கொடிகள் பூத்து அந்த இடத்தில்  நறுமணக் காற்று வீசியது. வாசலுக்கு வந்த பெண் வீட்டார் அவர்களை விமரிசையாக வரவேற்றனர்.

கான்கிரீட் காடுகள் நடுவே, புறாக்கூடு அபார்ட்மெண்ட்களில் வசித்துப் பழக்கப்பட்டிருந்த வசந்திற்கு அந்த மரம், செடி, கொடிகள் கூடிய இயற்கைப் பின்னணி வீடு மிகவும் பிடித்திருந்தது.

பெண் பார்க்கும் வைபவம் சிறப்பாகவே நடந்து முடிந்தது. வசந்த் அவர்களிடம், “நான் திவ்யாவிடம் கொஞ்சம் பேசவேண்டும்” என்றான்.

அம்மா அவனுக்கு பதிலளிக்கும் முன், திவ்யாவின் தந்தை, “அதற்கென்ன மாடி ரூம் காலியாகத்தான் இருக்கு. காத்தோட்டமா இருக்கும். போய் பேசிட்டு வாங்களேன். திவ்யா தம்பிய மாடிக்கு கூப்டு போமா” என்றார்.

“திவ்யா எனக்கு உங்களையும், உங்க வீட்டு பெரியவர்கள் அப்புறம் இந்த வீடு, கிராமம் எல்லாமே பிடிச்சிருக்கு” அப்படின்னு ஆரம்பிச்சு தன் வேலை, தன்னுடைய இலக்கு, அம்மாவின் விருப்பம் என்று எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொன்னான் வசந்த்.

திவ்யா பட்டென்று “எனக்கும் உங்களப் பிடிச்சிருக்கு. நீங்க சொல்ற மாதிரி இரண்டு வருஷம் யு எஸ்ல இருக்கிறதல ஒண்ணும் பிராப்ளம் இல்ல” என்று சொல்ல வசந்திற்கு மிகுந்த சந்தோஷம்.

பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து கல்யாணத் தேதியைக் குறித்து விட்டு அதற்கான ஏற்பாடுகளைப் பற்றி பேசி முடித்தப்பின் வசந்த் வீட்டார் வீடு வந்து சேர்ந்தனர்.

வசந்த் பெற்றோரிடம் வந்து அவர்களிடம் பேசினான்.

“அம்மா! கல்யாணம் முடிஞ்சதும் நான் யு.எஸ் போகனும்மா. அதுக்குள்ள முடிஞ்சா விசா அப்ளை பண்ணி திவ்யாவையும் கூப்டு போகலாம்னு இருக்கேன். இன்னும் ஒரு ரெண்டு வருஷம் பொறுத்துக்கங்க, அப்புறம் நிச்சயமா சென்னைல செட்டில் ஆயிடறேன்” என்றான் கெஞ்சும் குரலில்.

அப்பாவும், அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அம்மா ஒன்றும் பேசாமல் அப்பாவைப் பார்க்க, அப்பா எழுந்து அவர்கள் அறைக்குச் சென்றார்.

வசந்தின் முகம் சுருங்கி விட்டது. அவர்கள் இருவருக்கும் அவனுடைய முடிவு பிடிக்கவில்லையெனவும் அவர்களை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டதைப் போலவும் உணர்ந்தான்.

அறையிலிருந்து அப்பா வெளியே வந்தார். அம்மா எழுந்து நின்றார்.

அப்பா பேச ஆரம்பித்தார்.”வசந்த், நீ எங்களோட சந்தோஷமா இருக்கனும்னு ஆசைப்பட்டோமேத் தவிர நீ கஷ்டத்தோட இங்க இருக்கனும்னு நினைக்கல.

நீ எங்ககூட இந்த ரெண்டு வருஷமா பேசினதிலிருந்து உனக்கு எது சந்தோஷம் தரும்னு நாங்க புரிஞ்சிகிட்டோம்.

இங்க பார் இதில எங்க ரெண்டு பேர் பாஸ்போர்ட் இருக்கு. போன மாதம் தான் அப்ளை பண்ணி வாங்கினோம். எங்களுக்கும் ஏதோ ஒரு விசா அப்ளை பண்ணு. கொஞ்ச நாள் வந்து உங்களோட தங்கியிருந்துவிட்டு வர்றோம்” என்று சொல்ல வசந்த் வியப்பும், மகிழ்ச்சியுமாய் தன் பெற்றோரை சேர்த்தணைத்துக் கொண்டான்.

ஆனந்த். கோ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.